|
தாய், தந்தை இல்லாதவன், பிறப்பு, இறப்பு அற்றவன் என்று சிவனை குறிப்பிடுகிறோம். ஆனால் நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பரை தந்தையாக ஏற்றார் சிவன்.
வேடர் குலத்தில் பிறந்த கண்ணப்பரின் இயற்பெயர் திண்ணன். வேட்டையாடும் மிருகங்களின் மாமிசத்தை படைத்து வழிபட்டு வந்தார். ஒருநாள் திண்ணனின் பக்தியைச் சோதிக்க, அவர் வழிபடும் சிவலிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வழியச் செய்தார் சிவன். தன் கண்ணைப் பிடுங்கி சிவலிங்கத்தின் கண்ணில் அப்பினார் திண்ணன்.
உடனே மற்றொரு கண்ணிலும் ரத்தம் வழியத் தொடங்கியது. தன்னுடைய இன்னொரு கண்ணையும் பிடுங்கத் தயாரானார். அப்போது சிவலிங்கத்தில் இருந்து எழுந்த கை ’நில்லு கண்ணப்பா’ என்று தடுத்தது. ’கண் அப்பா’ என அழைத்ததன் மூலம் திண்ணனைத் தன் தந்தையாகவே ஏற்றார் சிவன். இந்த சம்பவம் நிகழ்ந்த தலமான காளஹஸ்தியில் காளத்திநாதர் என்னும் பெயரில் சிவன் அருள்புரிகிறார். |
|
|
|