|
வியாபாரி ஒருவர் பலவழிகளிலும் யோசித்து, தனது தொழிலை வளர்த்தார். லட்சங்களில் இருந்த பணம் கோடிக்கணக்கில் மாறியது. பங்களா, கார், மனைவிக்கு வைர நகைகள், பணியாட்கள்... ஒரே ஒரு மகன் என ஆடம்பரமாக வாழ்ந்தார். மகனைச் செல்லமாக வளர்த்தாலும், தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொடுக்க தவறவில்லை. அவனும் ஆர்வமாக கற்றான். தந்தையும், மகனும் இணைந்து தொழிலை நடத்தினர். சிறுதொழிற்சாலைகளை உருவாக்கி பிறருக்கு வேலைவாய்ப்பு அளித்தனர்.
வியாபாரி பழமைவாதி என்பதால், முதலில் ஆரம்பித்த கடையை மட்டும் அப்படியே வைத்திருந்தார். அதன் மூலமே பெரும்பணம் சேர்ந்ததாகக் கருதினார். காலங்கள் உருண்டோடின. வியாபாரி ஒருநாள் இறந்தார். பொறுப்புடன் மகன் தொழிலை தீவிரமாக கவனித்தான்.
ஒருநாள் ஆட்டுக்குட்டி ஒன்று வியாபாரியின் பழைய கடைக்கு வந்தது. அங்கிருந்த வாழைக்குலையை இழுக்க முயன்றது. இதைக் கவனித்த வியாபாரியின் மகன் தடியால் அதை விரட்ட அது ஓடியது.
இந்த நேரத்தில் தேவரிஷியான நாரதரும், பிரகஸ்பதியின் தந்தையான ஆங்கீரச முனிவரும் வான்வெளியில் பேசியபடி சென்று கொண்டிருந்தனர். திடீரென நாரதர் சிரித்தார். காரணம் புரியாத ஆங்கீரசர், “ஏன் சிரித்தீர்கள்?” எனக் கேட்டார். “உலகத்தை நெனச்சேன், சிரிச்சேன்” என்றார் நாரதர். அர்த்தம் புரியமால் அவர் ஏறிட்டு பார்த்தார்.
”ஆட்டுக்குட்டியை இளைஞன் ஒருவன் விரட்டுவதை பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.
”ஆமாம்! பார்த்தேன்! இதில் சிரிக்க என்ன இருக்கிறது. தனக்குரிய பொருளை மேய வந்தால் விரட்டுவது இயல்பானது தானே” என்றார். அடக்க முடியாத சிரிப்புடன், ”விஷயமே அது தானே! அந்த ஆடு யார் தெரியுமா? இளைஞனின் தந்தை. இந்த பிறவியில் ஆடாகப் பிறந்து விட்டார். போன பிறவி வாசனை விடவில்லை. பழைய கடைக்கு வந்து விட்டார். மகனோ விரட்டுகிறான். இது தானே உலகம்! யாருக்கும் எதுவும் சொந்தமல்ல. இந்த உண்மை புரிந்தால் உலகமே அமைதி பெறும்” என்றார்.
|
|
|
|