|
நாயன்மார்களில் ஒருவரான கழற்சிங்கர் பிறந்தது, முக்தி அடைந்தது இரண்டும் காஞ்சிபுரத்தில். இவர் சிவபெருமானின் திருவடியை அடைந்த வைகாசி மாதம் பரணி நட்சத்திரமான இன்று (ஜூன்௧) குருபூஜை கொண்டாடப்படுகிறது.
சிவபக்தரான இவரை ’பல்லவ மன்னர் காடவர்கோன் கழற்சிங்கன்’ என்று குறிப்பிடுவர்.
மற்ற நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, அங்கிருந்து எடுத்து வரப்பட்ட பொன், பொருளை எல்லா சிவன் கோயில்களுக்கும், அடியார்களுக்கும் கொடுத்தார்.
கழற்சிங்கரின் பட்டத்தரசியின் பெயர் சங்கா. ’பெருந்தேவி’ என அழைக்கப்பட்ட இவள் பேரழகி. கலைகளில் சிறந்தவள். இவளது தந்தையான அமோகவர்ஷ நிருபதுங்கன் சமணமதத்தை பின்பற்றினாலும், கழற்சிங்கரை மணந்த இவள் சிவபக்தையாக வாழ்ந்தாள்.
ஒருநாள் பெருந்தேவியுடன் திருவாரூர் தியாகராஜப் பெருமானைத் தரிசிக்க வந்தார் மன்னர் கழற்சிங்கர். மறை ஓதும் அந்தணர்களின் வரவேற்பை ஏற்ற மன்னர், பரிவாரத்துடன் கோயிலுக்கு சென்றார்.
ஆனால் பட்டத்தரசி பெருந்தேவி திருவாரூர் கோயிலின் சிற்பக்கலையை ரசித்தபடி நின்றாள். ’ மனைவி நிதானமாக தரிசனம் செய்யட்டும்’ என மன்னர் மட்டும் கருவறை நோக்கி நடந்தார்.
மகாராணி பெருந்தேவி மெள்ள நடந்த போது ஒரு மண்டபத்தில் இருந்து நறுமணம் கமழவே திரும்பிப் பார்த்தாள். அங்கு பூஜைக்குரிய பூக்களை, அடியார்கள் சிலர் மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தனர். திருநீறும், கழுத்தில் ருத்திராட்சமும், நாவில் ஐந்தெழுத்து மந்திரமுமாக இருந்த அவர்களை, செருத்துணையார் என்பவர் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த பெருந்தேவி ஒற்றைப்பூவை கையில் எடுத்து முகர்ந்தாள்.
மேற்பார்வை செய்யும் செருத்துணையாரின் இயல்பு என்னவென்றால், சிவனுக்கு யாரும் அபசாரம் செய்யக் கூடாது. மீறியவரைக் கண்டிப்பார் அல்லது தண்டிப்பார்.
மகாராணி என்று கூட பார்க்காமல் அங்கிருந்த சிறுகத்தியால் அவரது மூக்கை அறுத்தார் செருத்துணையார்,.
துடிதுடித்த ராணி, ரத்தம் கொட்டிய நிலையில் கீழே விழுந்தாள். அலறல் கேட்ட கழற்சிங்கர் கருவறையில் இருந்து ஓடோடி வந்தார். அவருக்கு முன், ”நான் தான் மன்னா...” என்று நின்றார் செருத்துணையார்.
கழற்சிங்கர் ஒரு கணம் ஆடிப் போனார். ’இந்த சிவனடியாரா என் மனைவிக்குத் தீங்கு இழைத்திருப்பார்?’ என யோசித்தார். ” பக்தரே... காரணம் இன்றி இப்படி செய்திருக்க மாட்டீர்கள். என் மனைவி செய்த தவறு தான் என்ன?” எனக் கேட்டார். நடந்ததை விளக்கினார் செருத்துணையார்.
அவரிடம், ”பெரும் தவறு செய்து விட்டீர்கள் செருத்துணையாரே...” என்று ஆவேசமானார் கழற்சிங்கர். என்ன ஆகுமோ என அனைவரும் பதறினர். ஆனால் செருத்துணையார் பயப்படவில்லை.
”செருத்துணையாரே! சிவபூஜைக்குரிய பூவினை முகர்ந்த மூக்கை மட்டும் அறுத்தீர்களே! அதை எடுத்த கைக்கு தண்டனை தரவில்லையே..?” என்று சொல்லி தன் உடைவாளை உருவினார்.
”நாடாளும் மகாராணியாக இருந்தாலும், கடவுளுக்கு உரிமையானதை எடுப்பவர்களின் கைகளையும் தண்டிக்க வேண்டும்” என்று வாளை ஓங்கினார். அப்போது வானில் பூமாரி பொழிந்தது. அண்ணாந்து பார்த்தார் கழற்சிங்கர். காளை வாகனத்தின் மீது பார்வதியுடன் சிவன் காட்சியளித்தார். ”உங்கள் இருவரின் சிவபக்தியை உலகம் அறியவே, இந்த விளையாடலை நிகழ்த்தினோம்... பூமியில் வாழ்ந்த பின், கயிலாயம் வருவீர்களாக” என வாக்களித்து மறைந்தார்.
தூங்கி எழுபவள் போல பெருந்தேவி இயல்பாக எழுந்தாள். தன் செயலுக்காக வருந்தியதோடு, திருவாரூர் தியாகராஜருக்கு பல திருப்பணிகளை முன்னின்று நடத்தினாள். இதனடிப்படையில் மன்னர் கழற்சிங்கர், செருத்துணையார் இருவரும் நாயன்மார்கள் வரிசையில் இடம் பெற்றனர்.
|
|
|
|