|
ஆந்திராவிலுள்ள வரஹாபுரியைச் சேர்ந்த நீலகண்ட சாஸ்திரிக்கு, மகாவிஷ்ணுவின் அருளால் ஆண்குழந்தை பிறந்தது. கோவிந்த சாஸ்திரி என பெயர் சூட்டினர். தந்தையைப் போலவே கோவிந்தனும் பக்தி, இசையோடு வளர்ந்தான். திடீரென ஓடி வந்து, ”அம்மா...இன்று கிருஷ்ணரை என் தோளில் சுமந்தேன்” என்பான். ”கனவில் கிருஷ்ணர் வந்து என்னுடன் விளையாடினார்” என்பான்.
சாப்பிட எதைக் கொடுத்தாலும் கிருஷ்ணருக்கு படைத்து விட்டே உண்பான்.ஆரம்பத்தில் பெருமிதம் கொண்ட அம்மா, மகன் வளர வளர பயந்தாள். வாழ்வின் மீது நாட்டமில்லாமல் போகுமோ என எண்ணினாள். கணவரிடம் புலம்பினாள். ”ஏன் பயப்படுகிறாய்? அவன் ஒரு சன்யாசி உலகவாழ்வை வெறுத்தால் அது நம் கொடுப்பினை தானே? அதைவிட வேறு பாக்கியம் உண்டா?” எனக் கேட்டார்.
இருந்தாலும் அம்மாவின் கவலை தீரவில்லை. கோவிந்த சாஸ்திரி திருமண வயதை அடைந்ததும், பெண் பார்த்தாள் அம்மா. அழகான பெண் கிடைத்தாள். அவளது குரலுக்கு வீணையும் தோற்றது. மென்மையும், குடும்ப பாங்கும் கொண்டவளாக பெண் இருந்தாள். நல்லவேளையாக மகனும் மறுக்கவில்லை. திருமணம் இனிதே நடந்தது.
குடும்பத்திற்கு ஏற்ப பக்தி கொண்டவளாக பெண் இருந்தாள். கணவனும், மனைவியுமாக பஜனை பாடியும்...தாளம் போட்டும்… பகவான் கிருஷ்ணரைக் கொண்டாடினர். மொத்தக் குடும்பமும் பக்தியில் திளைத்தது.
அம்மாவும் மகனது வாழ்வைக் கண்டு மகிழ்ந்தாள். அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஒருநாள் கோவிந்தரின் வீட்டுக்கு மாமியாருடன் வந்தார் மாமனார். தங்கள் ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு மகள் மாப்பிள்ளையுடன் வர வேண்டும் என அழைத்தனர். அப்போது கோவிந்தரின் அம்மாவுக்கு காய்ச்சலாக இருந்ததால், மனைவியை ஊருக்கு அனுப்பினார். ஓரிரு நாள் கூட பொறுக்க முடியவில்லை. மனைவியின் நினைவு கோவிந்தரை வாட்டியது. திருமணமான பிறகு இப்போது தான் கோவிந்தர் மனைவியைப் பிரிந்திருக்கிறார்.
மனைவியைச் சந்திக்கும் ஆசை அதிகரித்தது. அம்மாவுக்கும் உடல்நிலை சற்று தேறியதும், மனைவியைக் காணப் புறப்பட்டார். வழியில் கிருஷ்ணா நதி குறுக்கிட்டது. நதிக்கு அந்தப்பக்கம் தான் மாமனாரின் ஊர்.
வெள்ளப்பெருக்காக இருந்ததால் பரிசல் ஏதும் செல்லவில்லை. ஆசையின் வேகத்தால் வெள்ளத்தில் பாய்ந்தார். சுழல் ஒன்றில் சிக்கியதால், மரணம் நிச்சயம் என்னும் நிலை உருவானது. எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற வேகத்தில், ”கிருஷ்ணா.. என்னைக் காப்பாற்று. ஆதிசங்கரர் போல் நானும் சந்நியாசியாகிறேன்” என்று கதறினார். சன்யாசம் என்பது மறுபிறவிக்கு சமம் என்பதால் மரணம் சம்பவித்ததாக கணக்காகி விடும் என்பது கோவிந்தரின் எண்ணம். என்ன விந்தை!
சட்டென்று சுழல் சிறுத்து வெள்ளம் வடிந்து கரைக்கு தள்ளப்பட்டார் கோவிந்தர்.
மனைவியின் வீட்டை அடைந்ததும் ஒரு எண்ணம் மனதில் உதித்தது. கடவுளுக்கு கொடுத்த வாக்கு யாருக்கு தெரியப் போகிறது என விஷயத்தை மறைத்தார். அன்றிரவு மாமனார் வீட்டில் படுத்திருந்தார். கையில் பாலுடன் வந்த மனைவி, கோவிந்தரைக் கண்டதும் அலறினாள்.
”நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இப்படி காஷாயம் அணிந்து சந்நியாசியாகி விட்டீர்கள்?” என்று அரற்றினாள். அவளுக்கு தான் ஒரு சன்யாசியாகத் தோற்றம் அளிப்பது புரிந்தது. கிருஷ்ணரின் லீலையை எண்ணியபடி, “மன்னித்துவிடு. உன் மீதுள்ள ஆசையால் உண்மையை மறைக்க முயன்றேன். எல்லாம் கிருஷ்ணரின் செயல்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
“மனைவி மீதுள்ள மோக எண்ணத்தை கிருஷ்ணர் மீது திருப்பி விடு” என அப்போது வானில் அசரீரி ஒலித்தது. வடநாட்டுக்கு யாத்திரை புறப்பட்டு, காசியை அடைந்தார். சிவராமானந்த தீர்த்தர் என்பவரிடம் சந்நியாச தீட்சை பெற்றார். அன்று முதல் ’ஸ்ரீ நாராயணர்’ என அழைக்கப்பட்டார். யாத்திரையாக பல கோயில்களுக்கும் சென்று பாடினார்.
ஒருசமயம் தாங்க முடியாத வயிற்றுவலியால் அவர் அவதிப்பட்டார். “கிருஷ்ணா! என்ன பாவம் செய்தேன்?” என்று சொல்லி கதறினார்.
அன்றிரவு கனவில் கிருஷ்ணர், “காலையில் கண்விழித்தவுடன் உன் கண்ணில் காண்பவரைத் தொடர்ந்து செல்” என்றார். மறுநாள் காலையில் பன்றி ஒன்று தென்படவே, கிருஷ்ணரின் ஆணை இது என்று தொடர்ந்தார். பூபதிராஜபுரம் என்னும் வெங்கடேசப்பெருமாள் கோயிலைச் சென்றடைந்தது பன்றி. சன்னதியை மூன்று முறை சுற்றி வழிபட்டார்.
என்ன விந்தை! வயிற்றுவலி மறைந்தது. வந்தது வராக அவதாரம் என்ற உண்மையை உணர்ந்தார்.
இதன் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள வரகூரில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவினார். பெருமாள் வராகமாக (பன்றி வடிவில்) தரிசனம் அளித்ததால் இத்தலம் ’வரகூர்’ எனப் பெயர் பெற்றது.
கிருஷ்ணரின் லீலைகளை சொல்லும் ’கிருஷ்ணலீலா தரங்கிணி’ என்னும் பாடலைப் பாடிய போது, காலில் சலங்கை குலுங்க தரிசனம் தந்தார் கிருஷ்ணர். தனது 70வது வயதில் திருப்பூந்துருத்தியில் ஜீவசமாதி அடைந்தார்.
|
|
|
|