|
சிவத்தலமாகிய திருவிசைநல்லூர் என்னும் திருவிசலூரில் வாழ்ந்தவர் ஸ்ரீதரவெங்கடேச தீட்சிதர். இவரை ’ஸ்ரீதர அய்யாவாள்’ என அன்புடன் அழைத்தனர்.
இவரது தந்தை மைசூர் மகாராஜாவிடம் திவானாக பணிபுரிந்தார். இவரின் ஒரே மகன் தான் ஸ்ரீதரஅய்யாவாள். இளமையில் இருந்தே ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவர் பக்திப்பாடல்கள் பாடி வந்தார். தந்தையார் இறந்த பின்னர், திவான் பதவி கிடைத்தும் ஏற்கவில்லை. தாயின் அனுமதியுடன் தந்தையின் சொத்துக்களை தானம் செய்து விட்டு திருத்தல யாத்திரை புறப்பட்டார்.
குறிப்பாக, காவிரி கரையிலுள்ள சிவத்தலங்களை தரிசித்தபடி வந்தார். திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்கசுவாமியை தரிசித்ததும் தன்னை மறந்து பரவசம் கொண்டார். மகாலிங்க சுவாமியின் பிரசாதம் இல்லாமல், அன்றாட உணவு ஏற்பதில்லை என்ற நிலைக்கு உயர்ந்தார்.
நாள் முழுவதும் புயலுடன் கனமழை பெய்தது. திருவிடைமருதூர் கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள காவிரி நதி பாயும் வாய்க்காலை கடக்க முடியாது என்னும் நிலை உருவானது. நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கத் தீர்மானித்தார்.
அன்றிரவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவே, கதவைத் திறந்தார். வாசலில் நின்றவர் பரிச்சயமான சிவாச்சாரியார். திருவிடைமருதூர் கோயில் அர்ச்சகர். மழையில் நனைந்து வந்திருக்கிறாரே என பதறினார். தலை துடைக்க துண்டு கொடுத்தார் ஸ்ரீதர அய்யாவாளின் மனைவி. மாற்று உடையாக வேட்டியும் கொடுத்தனர். தேடி வந்த காரணத்தைச் சொன்னார் சிவாச்சாரியார். ”உங்களின் மனஉறுதி எனக்கு தெரியும். மகாலிங்கசுவாமி பிரசாதம் சாப்பிட்ட பிறகு தானே நீங்கள் அன்றாட உணவைக் கூட சாப்பிடுவீர்கள். இன்று கோயிலுக்கு வரமுடியாததால் பட்டினி கிடப்பீர்களே என்று, பிரசாதம் கொடுக்க வந்தேன்” என்றார்.
இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த ஸ்ரீதரஅய்யாவாள், தன் வீட்டில் இரவு தங்கும்படி வேண்டுகோள் விடுத்தார். சிவாச்சாரியாரும் சம்மதித்தார்.
ஸ்ரீதர அய்யாவாளின் மனைவி உணவு பரிமாறினார்.
“நானும் பசியுடன் இருந்ததால் நன்றாக சாப்பிட்டேன்” என்றார் சிவாச்சாரியார்.
ஆன்மிக விஷயங்களை நெடுநேரம் பேசி விட்டு தூங்கினர். அதிகாலை கண்விழித்த ஸ்ரீதர அய்யாவாள் அருகில் தூங்கிய சிவாச்சாரியாரைக் காணாமல் தவித்தார். ”கோயிலில் பூஜைக்கு நேரமாகி விட்டதால் சொல்லாமல் போயிருக்கலாம்” என்றார் மனைவி.
மழை விட்டாலும் வாய்க்காலில் வெள்ளம் போகுமே! சிவாச்சாரியார் அதை எப்படி தாண்டியிருப்பார் எனக் கவலைப்பட்டார்.
அப்போது ஸ்ரீதரஅய்யாவாளின் மனைவி, “நேற்று சிவாச்சாரியார் வரும் போதும் வெள்ளம் ஓடியிருக்குமே? எப்படி கடந்தார் என நீங்கள் யோசிக்கவில்லையே?” என்றார். பிரசாதம் கிடைத்த மகிழ்ச்சியில் எதுவும் தோன்றவில்லை என பதிலளித்தார்.
அவசரமாகக் குளித்து விட்டு, அன்றாட பூஜையை முடித்து, கோயிலுக்கு கிளம்ப தயாரானார். வாய்க்காலில் வெள்ளம் செல்வதால் வேண்டாமே என மனைவி தடுத்தாள்.
”மகாலிங்க சுவாமி என்னை வழி நடத்திச் செல்வாரம்மா.. கவலைப்படாதே” என்றார்.
வெள்ளத்தில் தட்டுத் தடுமாறி ஒருவாறாக திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலை அடைந்தார். சன்னதியில் இவருக்கு முன்பாக சிவாச்சாரியார் நின்றிருந்தார்.
ஸ்ரீதரஅய்யாவாளின் கண்களுக்கு கருவறையில் சுவாமி சற்று களைத்திருப்பது போல தோன்றியது.
அதை தெரிவித்த போது,”எனக்கு தோன்றிய எண்ணமே உங்களுக்கும் தோன்றுகிறதே” என்ற சிவாச்சாரியார் மேலும், ”பாவம்....நேற்று கோயிலுக்கு வராததால் நீங்கள் பட்டினி கிடந்திருப்பீர்களே?” என்றும் கேட்டார்.
திடுக்கிட்ட ஸ்ரீதர அய்யாவாள், ”நீங்கள் தானே நேற்று இரவு பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தீர்கள்? நான் கொடுத்த வேட்டியை ஏற்றதோடு, என் வீட்டு உணவையும் சாப்பிட்டு பெருமைப்படுத்தினீர்களே?” என்றார். மேலும் ”இன்று அதிகாலை எப்போது கிளம்பி கோயிலுக்கு வந்தீர்கள் என்றல்லவா நான் கேட்க வேண்டும்?” என்றார்.
“நானா...! நேற்றிரவு மழை பெய்ததால் கோயிலிலேயே தங்கி விட்டேன். எங்கும் போகவில்லையே.” என்றார் சிவாச்சாரியார். ’மகாலிங்கசுவாமி’ என்று கூவிய ஸ்ரீதர அய்யாவாள், அவரது வேட்டி சுவாமி மீது இருப்பது கண்டு அதிசயித்தார்.
இந்த அதிசய நிகழ்வுக்கு பின்னர், ஒருநாள் கார்த்திகை அமாவாசையன்று தன் தந்தையார் ஸ்ரீலிங்கராயரின் திதியை அனுசரித்தார் ஸ்ரீதரஅய்யாவாள். பகல் நேரத்தில் பிச்சைக்காரன் ஒருவன் பசியுடன் வீட்டு வாசலுக்கு வந்தான். அந்தணருக்கு தயாரித்த சிரார்த்த உணவை அவனுக்கு சாப்பிடக் கொடுத்தார். சிரார்த்த உணவை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது. எஞ்சியிருந்தால் பசுவிற்கு கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
இதை மீறிய ஸ்ரீதர அய்யாவாள் மீது கோபித்தபடி அந்தணர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
அய்யாவாளின் செய்கையால் தீட்டு ஏற்பட்டதாகவும், காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் மட்டுமே திதி கொடுக்க முடியும் என்றும் அந்தணர்கள் தெரிவித்தனர். அன்றைய திதி நேரம் முடிவதற்குள் எப்படி காசிக்குச் செல்ல முடியும்? என வருந்திய ஸ்ரீதர அய்யாவாள் மயங்கி விழுந்தார். கனவில் தோன்றிய சிவன், ”உன் வீட்டுக் கிணற்றில் கங்கையை வரவழைக்கிறேன்” என்று சொல்லி மறைந்தார்.
கண் விழித்த ஸ்ரீதரஅய்யாவாள் ’கங்காஷ்டகம்’ என்னும் பாடல் பாட, கிணறு பொங்கியது. கங்கா தீர்த்தம் ஆர்ப்பரித்து வெள்ளமாக பெருகியது. தவறை உணர்ந்த அந்தணர்கள் மன்னிப்பு கேட்டனர். பக்தியால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தினார் அய்யாவாள். அதன்பின் அந்தணர்கள் திதியும் நடத்தினர். கார்த்திகை அமாவாசையன்று பக்தர்கள், இன்றும் இக்கிணற்றில் நீராடுகின்றனர்.
|
|
|
|