|
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவலையுடன் இருந்தார். கிருஷ்ணர் அவரிடம்,“தர்மா! பாரதப்போரில் நீ ஜெயித்து விட்டாய். கவுரவர்கள் நூறு பேரும், அவர்களின் பிள்ளைகளும், தளபதி பீஷ்மரும் கூட கொல்லப்பட்டு விட்டனர். அப்படியிருந்தும் ஏன் கவலைப்படுகிறாய்?” எனக் கேட்டார்.
”என் பெரியம்மா காந்தாரி பற்றிய சிந்தனை தான் எனக்கு! பார்வையற்ற கணவனுக்காக தன் கண்களைக் கட்டிக் கொண்ட அவள், பிள்ளைகளை எல்லாம் இழந்து நிற்கிறாள். வயிறெரிந்து அவள் எங்களை சபித்தால் பலித்து விடுமே என்று கவலைப்படுகிறேன்” என்றார்.
கிருஷ்ணரும் அதை ஏற்றுக் கொண்டு காந்தாரியைக் காணச் சென்றார். கண்களைக் கட்டியிருந்தாலும் அவள், கிருஷ்ணர் வந்திருப்பதை உணர்ந்து வரவேற்றாள். பாரதப் போரில் மகன்கள், பேரன்கள், சகோதரன் சகுனி, மகள் துச்சளையின் கணவன் ஜயத்ரதன் ஆகிய அனைவரும் இறந்ததைச் சொல்லி அழுதாள்.
“தாயே! செய்வதையும் செய்து விட்டு இப்போது அழுகிறாயே! உன் மூத்தமகன் துரியோதனன், போருக்கு கிளம்பும் போது உன்னிடம் ஆசி பெற வந்தான். ’நீ தான் வெல்வாய்’ என ஆசியளித்திருந்தால் அவன் வென்றிருப்பான். ஆனால் ’தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு வெற்றி கிடைக்கும்’ என்றே வாழ்த்தினாய். பாண்டவர் பக்கமே தர்மம் இருந்தது என்பதால் அவர்கள் வென்றனர். இப்போது நீயே சொல்! உன் பிள்ளைகளைக் கொன்றது நீயா...இல்லை பாண்டவர்களா என்று” என்றார். பதிவிரதையான தான் கொடுத்த வாக்கு பலித்ததை காந்தாரி உணர்ந்தாள். |
|
|
|