|
உலக ஆசைகளில் மூழ்கினான் கந்தன் என்னும் இளைஞன். நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மது அருந்தினான்; பெண் சகவாசத்தில் மகிழ்ச்சியடைந்தான். குறுக்குவழியில் பணமும் சேர்த்தான். வெளிப்பகட்டுக்கு சுகம் போல தோன்றினாலும், தீய பழக்கங்களால் உடல்நலத்தை இழந்தான். நண்பர்கள், உறவினர்கள் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. கேட்பார் இன்றி இரவில் படுத்திருந்தான்.
ஒருநாள் அவனது வீட்டுக்கு அருகிலுள்ள சிவன் கோயிலில் சொற்பொழிவு நடந்தது. அதில் சொற்பொழிவாளர், ”தீய நண்பர்கள் ஐந்து பேர் இணைந்து ஆமை ஒன்றைப் பிடித்தனர், அதை வேக வைத்து சாப்பிட விரும்பி, நீர் நிரம்பிய கொப்பரையில் விட்டனர். தரையில் கிடந்த ஆமை, தண்ணீரில் விழுந்ததும் ஆனந்தமாக நீந்தியது. சற்று நேரத்தில் அவர்கள் கொப்பரையை அடுப்பில் வைத்து தீயை மூட்டினர். ஆமை தப்பி விடாமல் இருக்க, கொப்பரையை தட்டால் மூடினர். தண்ணீர் சூடாக ஆனது. அப்போது தான் ஆமை உண்மையை உணர்ந்து கொண்டது.
”கடவுளே! ஆரம்பத்தில் உலகம் குளிர்ந்த நீர் நிறைந்த கொப்பரையாக சுகமாக இருந்தது. இப்போது என் நிலைமை தலைகீழாகி விட்டது. துன்பத்தை அனுபவிப்பதை விட, உயிர் போவது மேல். இனியும் எனக்கு ஒரு பிறவி வேண்டாம் கடவுளே!” எனக் கதறியது. இதைக் கேட்ட கந்தனுக்கு, அந்த ஆமையின் நிலையில் தானும் இருப்பது புரிந்தது. ”எனக்கும் இனிமேல் பிறவி வேண்டாம்” என கடவுளிடம் வேண்டினான். |
|
|
|