|
க்ஷகும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள உடையாளூர் கிராம எல்லையில் குடியிருக்கிறாள் அன்னை செல்வ மாகாளிம்மன். ’செல்லம்மா காளி’ என ஊர் மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மன்னர் ராஜராஜ சோழனோடு நெருங்கிய தொடர்புடையது இத்தலம். மன்னரின் குடும்பத்தினர் வாழ்ந்த இடம் உடையாளூருக்கு அருகில் உள்ளது. ராஜராஜ சோழனின் நினைவிடம் இங்கு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர்.
போர் வீரர்களுக்கு உடைவாள் தயாரிக்கும் இடம் என்பதால் ’உடைவாளூர்’ எனப்பட்டது. ’உடையாளூர்’ என மருவி விட்டது. இப்பகுதி மக்கள் குலதெய்வமாக அம்மனை வழிபடுகின்றனர். முதல் முடிக் காணிக்கை செலுத்தி குழந்தைகளுக்கு காது குத்துகின்றனர். கோடைகாலத்தில் அம்மனை குளிர்விக்க பால், பன்னீர், இளநீர், சந்தன அபிஷேகம் செய்கின்றனர்.
எதிரிகளிடம் இருந்தும், இயற்கை சீற்றத்தில் இருந்தும் மக்களைக் காக்கும் விதமாக இங்கு செல்வ மாகாளியம்மனை பிரதிஷ்டை செய்தவர் மன்னர் ராஜராஜச்சோழன். இங்கு மட்டுமின்றி எட்டுத் திசைகளிலும், எட்டு தலங்களிலும் அம்மனுக்கு கோயில்கள் உள்ளன.
இத்தலம் குறித்த செவிவழிக் கதையை பார்ப்போம். கேரளாவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் இப்பகுதிக்கு வந்தார். பில்லி, சூன்யத்தில் கைதேர்ந்த அவர், தீய சக்திகளை வழிபடும் ’ஆபிசார’ ஹோமத்தை நடத்துபவர். அதன் மூலம் மக்களை பயமுறுத்தி தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார். தீய சக்திகளின் பலத்தால், ’தனக்கு மிஞ்சியவர் உலகில் யாரும் இல்லை’ எனச் செருக்குடன் திரிந்தார். இவருக்கு மூன்று சீடர்கள்.
ஊருக்குள் அவர் செல்லும் விதமே விசித்திரமானது. பல்லக்கில் பயணிக்கும் அவரை சீடர்களே சுமப்பார்கள்.
பல்லக்கு தூக்க நான்கு பேர் வேண்டுமே? அந்த நான்காவது நபர் யார் தெரியுமா? எந்த ஊருக்குள் நுழைந்தாலும், அங்குள்ள காவல் தெய்வம், தானாக முன்வந்து பல்லக்கைச் சுமக்க வேண்டும் என்பது மந்திரவாதியின் நிபந்தனை. மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டு அந்தந்த கிராமத்து தெய்வமும் இதைச் செய்ய தவறவில்லை.
இந்நிலையில் ஒருநாள், உடையாளூருக்கு வந்தார் மந்திரவாதி. முந்திய ஊரைச் சேர்ந்த பெண் தெய்வம் பல்லக்கை சுமந்து, உடையாளூர் எல்லையில் விட்டுச் சென்றாள். அதன் பிறகு, பல்லக்கை சுமக்க யாரும் வரவில்லையே என வெகுண்டார் மந்திரவாதி. ஆனால் உடையாளூரில் உள்ள தெய்வம் வராமலேயே பல்லக்கு போய்க் கொண்டிருந்தது.
இதைக் கண்ட மந்திரவாதிக்கு நடுக்கம் வந்தது. ’என்ன மாயமோ தெரியவில்லையே’ என வியந்தபடி பல்லக்கை நிறுத்தி விட்டு, கீழே அமர்ந்தார். தனது மந்திர சக்தியால் உடையாளூர் செல்வ மாகாளியம்மனை வரவழைத்தார்.
ஆத்திரத்துடன் வந்த அம்மனிடம், “என்னை அடுத்த கிராமத்தின் எல்லை வரை நீ தானே சுமக்க வேண்டும்” எனக் கேட்டார். ஆனால், அம்மன் கட்டுப்படவில்லை. அம்மனைத் தண்டிக்கும் நோக்கத்தில், தன் மந்திர சக்தியை பயன்படுத்த தொடங்கினார்.
அதை தடுக்க எண்ணிய அம்மன், தனது சக்தியை எட்டு பாகமாக பிரித்து எட்டு திசைகளிலும் உள்ள எட்டு தலங்களில் குடிகொண்டாள். அதன்பின் அவரது மந்திரசக்தி பயனற்றுப் போனது.
“தாயே! போகும் இடம் எல்லாம் அந்தந்த ஊர் தெய்வங்களை என் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். ஆனால், இப்போது உன் மகிமை அறிந்தேன். இனி மந்திர, தந்திரங்களில் ஈடுபட மாட்டேன்” என்று சரணடைந்தார்.
இவளே இத்தலத்தில் செல்வ மாகாளியாக எட்டு கைகளில் ஆயுதங்கள் தாங்கியும், சூலத்தால் அசுரனை வதம் செய்த நிலையில் காட்சி தருகிறாள். அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் படைத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர். அம்மன் அருளால் விருப்பம் நிறைவேறியவர்கள் அபிஷேகம் செய்து சேலை சாத்துகின்றனர்.
சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணய்யர், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் போன்றவர்கள் அம்மன் மீது பாடல்கள் இயற்றியுள்ளனர்.
காஞ்சி மகாப்பெரியவர் யாத்திரையின் போது ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். அவருக்கு காஞ்சி காமாட்சியாக அம்மன் காட்சியளித்தாள்.
“செல்லம்மா காளின்னு ஊர்ல இருக்கறவா கூப்பிடாலும், இவள் சாட்சாத் காமாட்சியே தான். வேண்டும் வரம் அத்தனையையும் அள்ளிக் கொடுப்பா’ என்று சுவாமிகள் அருள்வாக்கும் அளித்தார். இன்றும் தன்னை நாடி வருவோரின் குறைகளைப் போக்கி அதிசயம் நிகழ்த்துகிறாள் செல்வ மாகாளியம்மன். சகல சவுபாக்கியம் அருளும் அம்மனின் திருவடியில் சரணடைவோம்.
|
|
|
|