|
அப்பாவியான கோவலன் பாண்டிய மன்னரால் கொல்லப்பட்டதாக சிலப்பதிகாரத்தில் படிக்கிறோம். ’ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பர். அதாவது முற்பிறவியில் செய்த பாவமே கோவலனைக் கொன்றது.
முற்பிறவியில் சிங்கபுரம் என்னும் ஊரில் வாழ்ந்தான் கோவலன். அப்போது ’பரதன்’ என்பது அவன் பெயர். பரதனுக்கும், கபிலபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த சங்கமன் என்ற வியாபாரிக்கும் பகை இருந்தது. சிங்கபுரத்தையும், கபிலபுரத்தையும் பகைவர்களான இரு மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
ஒருமுறை சங்கமன் நகைகளை விற்பதற்காக சிங்கபுரம் வந்தான். பகை தீர்க்க இதுவே சரியான நேரம் என்ற எண்ணத்துடன் அரண்மனைக்குச் சென்றான் பரதன். “மன்னா! கபிலபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்பவன், வியாபாரி வேடத்தில் நம் நாட்டுக்குள் வேவு பார்க்கிறான். ஒற்றனான அவனை தண்டியுங்கள்” என்று புகார் செய்தான். உண்மை என்று நம்பிய மன்னரும் சங்கமனைக் கொன்றார்.
இதையறிந்த சங்கமனின் மனைவி நீலி என்பவள் ’ கணவர் குற்றமற்றவர்’ என்பதை நிரூபித்தாள். எங்களுக்கு நேர்ந்த கேடு மறுபிறவியில் ’கொடியவன் பரதனுக்கும், அவன் மனைவிக்கும் உண்டாகும்’ எனச் சாபமிட்டு உயிர் விட்டாள். அதன்பின் காவிரிபூம்பட்டினத்தில் கோவலனாகப் பிறந்த பரதனும், பாண்டிய மன்னரால் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் வாக்கு பொய்யாகுமோ? |
|
|
|