|
மச்சமுனி: குளக்கரை ஒன்றில் சிவனும், பார்வதியும் பேசிக் கொண்டிருந்தனர். நீரில் நீந்திய கருவுற்ற மீன் ஒன்று, அவர்களின் பேச்சை கேட்கத் தொடங்கியது. தெய்வீக சக்தி கொண்ட அந்த மீனின் கருவில் இருந்து பாலகன் ஒருவன் தோன்றினான். தாய் மீனுக்கும் மனித வடிவம் கொடுத்தாள் பார்வதி. இருவரும் சிவபார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். மச்சம் என்றால் மீன். எனவே “மச்சேந்திர நாதன்” என பெயர் பெற்றான் அந்த பாலகன். பிற்காலத்தில் மச்சமுனிவராக விளங்கினார். மக்களிடம் பிட்சையாக உணவு பெற்று வாழ்ந்தார். யாருக்கு கொடுப்பினை இருக்கிறதோ அவர்கள் மட்டுமே பிட்சை இட்டனர். இதனால் அவர்களின் முன்வினை பாவம் நீங்கியது. அறியாமை அகன்றது. சிவனருள் கிடைத்தது. மற்றவர்களோ முனிவரை ஒரு பிச்சைக்காரராக கருதி அவமதித்தனர்.
ஒருநாள் மச்சமுனிவர் பிட்சைக்கு சென்ற போது, ஒரு பெண் எதிர்ப்பட்டாள். விதிவசத்தால் அவளுக்குக் குழந்தை இல்லை. மச்சமுனிவரின் அருமை அறியாத அப்பெண், முகம் சுளித்தபடி பழைய சோறிட்டாள். ”நில்லுங்கள் தாயே..” என்றார் மச்சமுனி. அவளும் நின்றாள். “பிட்சையிட்டதும் வணங்க வேண்டும் என்பது கூட தெரியாதா?” எனக் கேட்டார். ” நான் ஏன் வணங்க வேண்டும்?” என்றாள் ஆணவத்துடன். ”என் போன்ற முனிவர்களை வணங்குவது வழக்கம் தானே” என்றார். அலட்சியத்துடன் சிரித்தபடி, ”அப்படியானால் என் குறையை தீர்க்க முடியுமா?” எனக் கேட்டாள். ”முடியும் அம்மா” என கண் மூடியபடி, திருநீறு எடுத்து சிவனை தியானித்தார். ”சிவ நாமத்தைச் சொல்லி திருநீறை வாயில் இடுங்கள். பிள்ளைப்பேறு கிடைக்கும். பிறக்கும் பாலகனைக் காண நிச்சயம் வருவேன் தாயே” என்றார். இதைக் கவனித்த பக்கத்துவீட்டுப்பெண் ஓடி வந்தாள். ”அடி..பைத்தியக்காரி! இந்த சாம்பலால் எப்படி குழந்தைப்பேறு கிடைக்கும்? யார் எதைக் கொடுத்தாலும் வாங்குவாயா? அவன் மந்திரவாதியாக இருந்தால் என்ன செய்வாய்? இன்றிரவு தூங்கும் போது அவன் தங்கும் இடத்திற்கு உன்னை அழைத்தால், சுயநினைவு இல்லாமல் நீ நடந்து போவாய் தெரியுமா?” என பீதி ஏற்படுத்தினாள். இருவரும் பேசிக் கொண்டே, மாட்டுக் கொட்டிலை அடைந்தனர். அங்கு வெந்நீர் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. திருநீறைத் தரையில் தூவினால் கூட ஆபத்து என எண்ணியவளாக, அடுப்புத் தீயில் தூவினாள். சில காலம் கழிந்தது. திருநீறு வாங்கிய பெண்ணைப் பார்க்க வந்தார் மச்சமுனிவர். வாசலில் நின்று குரல் கொடுத்தார்.
”அம்மா.. சுபசெய்தி ஏதும் இருக்கிறதா?” எனக் கேட்டார். திடுக்கிட்ட அவள், நடந்ததை முனிவரிடம் தெரிவித்தாள். மச்சமுனிவர் மாட்டுக்கொட்டிலை நோக்கி ஓடினார். அவளும் பின்தொடர்ந்தாள். ”சித்தன் வாக்கைப் பொய்யாக்க விடமாட்டான் சிவபெருமான். புனிதமான திருநீறை அலட்சியப்படுத்திய உனக்கு குழந்தைப்பேறு இனி கிடைக்காது.” என ஆணையிட்டார். ”நான் சிவபக்தன் என்பது உண்மையானால் இந்தக் கோ அகத்திலுள்ள (கோ+அகம்= பசுக்களின் இருப்பிடம்) சாம்பலில் இருந்து குழந்தை உருவாகட்டும்.” என்றார். சாம்பலில் இருந்து அழகிய ஆண் குழந்தை வெளிப்பட்டது. பரவசத்துடன் “கோவகனே.. கோவகனே..’ என அழைத்தார். இச்சிறுவனே பிற்காலத்தில் ’கோரக்கர்’ என்னும் சித்தராக விளங்கினார். |
|
|
|