|
நாராயண பிராந்தன் என்னும் ஞானி சுடுகாட்டில் தியானம் செய்யும் வழக்கம் கொண்டவர். பிராந்தன் என்றால் ’பித்தன்’. ஊராரும் அவரை ’பைத்தியம்’ என்றே நினைத்தனர். ஆசை என்பதே இல்லாத அவரது பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பினாள் காளி. ஒரு அமாவாசை அன்று சுடுகாட்டின் அதிபதியான காளி, நடனமாடத் தயாரானாள். அதற்காக தேவதைகள் அனைவரும் கூடினர். அங்கு தியானத்தில் இருந்த பிராந்தனிடம், ”அடேய்! எங்கள் தலைவியான காளிதேவி சற்று நேரத்தில் வரவிருக்கிறாள். அவளைப் பார்த்தாலே உனக்கு குலை நடுங்கும். அவள் வருவதற்குள் ஓடிவிடு” என்றனர்.
பிராந்தன் சிரித்தபடி, ”யார் வந்தால் எனக்கென்ன! சுடுகாடு அனைவருக்கும் பொதுவான இடம். இதில் காளிக்கு மட்டும் உரிமை ஏது? நான் எங்கும் போக மாட்டேன்” என மறுத்தார். சற்று நேரத்தில் பெரும் சத்தத்துடன் வந்தாள் காளி. இடி முழங்கும் ஓசையுடன் ஆடத் தொடங்கினாள். தேவதைகள் எல்லாம் அச்சத்துடன் நின்றனர். ஆனால் பிராந்தன் மட்டும் அமைதியுடன் இருந்தார். காளி ஆடி முடித்ததும், ”இவ்வளவு நேரம் பொம்மலாட்டம் ஆடியதால் கால் வலிக்கிறதா தாயே! ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” எனக் கேட்டார் பிராந்தன். ஏளனமாகப் பேசிய பிராந்தனை, சூலத்தால் கொல்லப் போகிறாள் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அவளோ, ” என் கோர உருவம் கண்டால் தைரியசாலியும் நடுங்குவான். ஆனால் அமைதியாக பார்த்த நீ, ’பொம்மலாட்டம்’ என்று கேலியும் செய்கிறாய். உனது தைரியத்தைப் பாராட்டுகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றாள்.
“வரம் வேண்டாம் தாயே! நீ இங்கிருந்து புறப்பட்டால் தான் நான் தியானம் செய்வேன்” என்றார் பிராந்தன். வரம் கேட்டே தீர வேண்டும் என பிடிவாதம் செய்தாள் காளி. கேட்க வேண்டும் என்பதற்காக, ”அப்படியானால் என் வலதுகால் சற்று வீங்கியுள்ளது தாயே! அதை இடதுகாலுக்கு மாற்றலாமா” என்றார். ”இப்படி யாரும் வரம் கேட்டதில்லை; சரி...மனம் போல் ஆகட்டும்” என்று சொல்லி மறைந்தாள் காளி. ஆசை இல்லாதவன், கடவுளுக்கு கூட பயப்படத் தேவையில்லை.
|
|
|
|