|
எப்போதும் பகவான் நினைவோடு இருக்க வேண்டியது அவசியம்தானா? தன் சந்தேகத்தை ஞானி ஒருவரிடம் கேட்டான் மன்னன். சில காலம் கழித்து பதில் சொல்வதாகச் சொன்னார், ஞானி. ஒரு மாதத்திற்குப் பிறகு மன்னரைத் தமது வீட்டுக்கு அழைத்த ஞானி, அங்கே வந்தால் அவரது கேள்விக்கு பதில் சொல்வதாகச் சொன்னார். மன்னரும் ஞானியின் வீட்டுக்குச் சென்றார். அவரை வரவேற்று அமரச் செய்த ஞானி, தன் அருகே நின்ற குரங்கை ஒரு குச்சியால் அடித்து, ""போய்ப் பழங்கள் எடுத்து வா! என்றார். குரங்கும் சென்று பழங்களை எடுத்து வந்தது. ""இவற்றை மன்னருக்குக் கொடு! சொன்ன ஞானி, மறுபடியும் குரங்கை அடித்தார். ""அரசர் அசதியாக வந்திருப்பார். அவருக்குக் கால் பிடித்துவிடு! "வேந்தருக்குக் குடிக்க நீர் கொடு! மன்னருக்கு விசிறிவிடு! ஒவ்வொரு கட்டளைக்கும் குரங்குக்குக் குச்சியால் அடிவிழுந்தது.
ஞானி சொன்னதையெல்லாம் செய்தது குரங்கு, மன்னர் அனைத்தையும் பார்த்தார். அவருக்குக் குரங்கின் மீது பரிதாபம் வந்தது. ""குரங்குதான் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் தட்டாமல் செய்கிறதே.. அப்புறம் அதனை அடிப்பதும் கழுத்தில் கயிறைக் கட்டிவைத்திருப்பதும் அவசியம்தானா? பாவம் இல்லையா? ஞானியிடம் கேட்டார். மென்மையாகப் புன்னகைத்த ஞானி, தன் கையில் இருந்த குச்சியைத் தூரவீசினார். குரங்கின் கழுத்தில் இருந்த கயிறையும் அவிழ்த்துவிட்டார். ஒரு சில நிமிடம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த குரங்கு, அடுத்த நிமிடம் அங்கும் இங்குமாகத் தாவத் தொடங்கியது. அரசரின் கிரீடத்தைப் பிடித்து இழுத்தது. அவரது தோளில் அமர்ந்து, தலையைப் பிடித்து இழுத்தது.. அவரது முதுகைப பிறாண்டியது... மூக்கைக் கடிக்கத் தாவியது. பயத்தில் அலறினார் அரசர். சட்டென்று எழுந்து குச்சியை எடுத்தார். ஞானி. அடுத்த கணம் குரங்கு அப்படியே திகைத்து நின்றது. ஒடுங்கி அடங்கியது. ""மன்னா, நம்முடைய மனதும் இந்தக் குரங்கைப் போன்றதுதான், பகவான் மீது பரிபூரணமான பக்தி என்கிற கொம்பினை நாம் பற்றிக் கொண்டிருக்கும் வகையில் அது அடங்கி இருக்கும். நம்முடைய கட்டுப்பாடில் இருக்கும். அந்தக் கொம்பினை நாம் உதறினால், மறுகணம் அது தன் இஷ்டப்படி ஆடி நம்மை அவதிக்கு உள்ளாக்கும்! ஞானி சொன்னதை ஏற்றார் அரசர்.
|
|
|
|