|
தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதைப் பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுகப் பற்றிக்கொண்டு, ""கண்ணா! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா! அதனால்தான் நீயும் துக்கம் தாளமுடியாமல் அழுகிறாயோ? என்று கேட்டான். ""இல்லை அர்ஜுனா! ""நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான். ""கண்ணா, நீ கடவுள்! உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது. ஆனால் என்னால், அப்படி இருக்க முடியாது என்றான், அர்ஜுனன். ""உறவு, பற்று, பாசம் எல்லாம், உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா! என்று கூறினார்.
""அப்படிச் சொல்லாதே கண்ணா! மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டுப் போகாது! ""அப்படியா! இப்பொழுதே வா... என்னோடு சொர்க்க லோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி, அர்ஜுனனை சொர்க்க லோகம் அழைத்துச் சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்க்கலோகத்தில் இருந்தான். அபிமன்யு அவனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன். ""என் மகனே அபிமன்யு என்று பாசத்தோடு கட்டி அணைக்கப் போனான். அர்ஜுனனைத் தடுத்த அபிமன்யுவின் ஆன்மா, ""அய்யா, யார் நீங்கள்? என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது. தயவுகூர்ந்து என்னை விட்டு விலகிச் செல்லுங்கள் என்றது. அதைக் கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் ""பார்த்தாயா! உறவு, பாசம், பந்தம், உணர்வு, கோபம், அன்பு, காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான். உடலை விட்டு உயிர் போய் விட்டால்- ஏதும் அற்ற உடலுக்கும் உணர்வு இல்லை. அதை விட்டுப் போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை. ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல, பிறந்த உயிர் இறப்பிற்கும் நீ காரணம், அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள். படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு. அதுவே வாழ்வில் அர்த்தமாகும் என்று கூறினான் கண்ணன். |
|
|
|