|
காட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு எலி அங்கே மூச்சு இரைக்க ஓடி வந்தது. பூனைக்கு பயந்து ஓடிவந்த அது, முனிவரிடம் தன்னையும் பூனையாக்க வேண்டியது. முனிவர் அருளினார். சில நாட்கள் கழித்து, ஒரு நாய் விரட்ட, பூனை நடுங்கியபடி வந்தது. இப்போது அதன் கோரிக்கை நாயாவது. அதையும் முனிவர் தந்தார். மேலும் சில நாட்கள் கழித்து நாய் ஓடிவந்தது. அதை விரட்டியபடி புலி! அதேதான்... நம் நாயும் புலியானது. புலியை ஒருநாள் வேடன் துரத்த, பயந்து வந்த புலி, முனிவர் அருளால் ஒரு வேடன் ஆனது. வேடன் ஆனதும் குடும்பம், வாழ்க்கை என்று தவித்து ஒரு கட்டத்தில் சோர்ந்து வந்து சேர்ந்தது. முனிவர் கருணை மிக்கவர். இப்போதும் இரங்கினார். வேடன், கேட்டது என்ன தெரியுமா? ""சுவாமி தயவு செய்து என்னை ஆரம்பத்தில் இருந்ததுபோல் எலியாக்கிவிடுங்கள்! என்றதுதான்.
நாமும் இந்த எலிபோலத்தான், கஷ்டப்படும்போதெல்லாம் இவரைப்போல இல்லையே அவரைப்போல் இல்லையே, கடவுளே, ஏன் என்னை இப்படி வைத்திருக்கிறாய் என்öல்லாம் புலம்புகிறோம். நாம் விரும்புவதுபோல் மாற்றம் வந்துவிட்டால், போதும் என்று திருப்தி அடைந்துவிடுகிறோமா? என்றால் ஊஹூம் அடுத்த கோரிக்கை ஆரம்பமாகிவிடுகிறது. இதில் இருந்து அது, அதில் இருந்து மற்றொன்று என்று மாறி மாறி வட்டமான வாழ்க்கையில் தொடங்கிய இடத்துக்கே வந்து ஓய்ந்து அமர்கிறோம். அதைவிட, ஆண்டவன் நம்மை எப்படி வைத்திருக்கிறானோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்வோம். நாம் எப்படி இருந்தால் நல்லதோ அப்படியே இறைவன் நம்மை வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும் புதிராகத் தோன்றும் இந்த வாழ்க்கையே புனிதம் என்பது புரியும். இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதிலேயே மனம் திருப்திப்படும் அந்த திருப்தி வந்துவிட்டால் போதும் வாழ்க்கை, தினம்தினம் தித்திக்கும்.
|
|
|
|