|
கண்ணனும், அவனது தாயும் மூடநம்பிக்கை மிக்கவர்கள். இருவரும் நன்றாக சாப்பிடுவார்கள். ஆனால் கண்ணனின் மனைவி மல்லிகாவுக்கு மட்டும் தினமும் அரைவயிறு கஞ்சி தான். ஒருநாள் மிளகுக்குழம்பு வைத்தாள் மல்லிகா. சுவையாக இருந்ததால் சற்று அதிகமாக சாப்பிட்டாள். இதையறிந்து கோபித்த மாமியார், மல்லிகாவை ஒரு சாக்கில் கட்டி வைத்து சுடுகாட்டில் எரிக்கச் சொல்ல, கண்ணனும் சம்மதித்தான். நள்ளிரவில் மயானத்தில் மூடையை இறக்கிவிட்டு, விறகு தேடிச் சென்ற போது, அங்கு வந்த நல்லவர் ஒருவர் மல்லிகாவை விடுவித்தார்.
சாக்கில் செத்த ஆடு ஒன்றைக் கட்டி வைத்துச் சென்றார். விறகுடன் வந்த கண்ணனோ, ஆடு இருந்த மூடையை எரித்து விட்டான். தப்பித்த மல்லிகா அன்றிரவு காளி கோயில் ஒன்றில் தஞ்சம் புகுந்தாள். களைப்பால் தன்னை மறந்து தூங்கினாள். கனவில் காட்சியளித்த காளி, “மல்லிகா! உன் தீ வினை இன்றோடு விலகியது. இனி உனக்கு நல்ல காலம் தான்! இங்கே சில ஆண்டுகள் தங்கியிரு. நினைத்ததை வரவழைக்கும் வரத்தை தருகிறேன்.” என்றாள். மல்லிகாவும் தனக்கு தேவையான உணவு, உடையை பெற்றாள். வசதியான வீட்டை வரவழைத்து நிம்மதியாக வாழ்ந்தாள். சில ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் மாமியாரின் நினைவு வரவே, அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்பினாள். ஒரு வண்டி நிறைய பட்டுப்புடவை, நகைகள், உணவு வகைகள் என வரவழைத்து மாமியாரை பார்க்கச் சென்றாள். தேவதை போல இருந்த மருமகளை அடையாளம் தெரியவில்லை.
“அத்தை! நான் தான் உங்க மல்லிகா! என்னைக் கொன்றதும் சொர்க்கத்திற்கு போனேன். அங்கே இருந்த மாமனார், இந்த பொருட்களை உங்களுக்காக என்னிடம் கொடுத்து அனுப்பினார். உங்களை பார்க்கவும் ஆசைப்படுகிறார். இதைப் போல ஆயிரம் மடங்கு சொத்து அவரிடம் இருக்கிறது. அவற்றை கொண்டு வந்தால் இன்னும் சுகமாக வாழலாம்” என்றாள். மூடநம்பிக்கை கொண்ட மாமியாரும் நம்பினாள். கணவரைக் காண சொர்க்கத்திற்கு செல்ல தயாரானாள். சாக்கில் கட்டி வைத்து தன்னையும் எரிக்கும்படி வேண்டினாள். மகனும் அப்படியே செய்தான். அதன்பின் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தாள் மல்லிகா. “என் அம்மா எப்போது பூலோகம் வருவார்?” என அவ்வப்போது கேட்ட கண்ணனிடம், ’எனக்கென்ன தெரியும்! மாமா உங்கள் அம்மாவை விட்டால் தானே ஆச்சு” என்பாள். அவனும் அதை நம்பிக் கொண்டிருந்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உண்மை தானே. |
|
|
|