|
ஈசான்ய ஞான தேசிகர்: பாலாற்றின் கரையோரத்தில் உள்ள ராயவேளூரில் 1750ம் ஆண்டில் ஈசான்ய ஞானதேசிகர் அவதரித்தார். இவரது பெற்றோர் திருநீலகண்ட தேசிகர், உமாபார்வதி. முருகப்பெருமானை வேண்டி பிறந்தவர் என்பதால் ’கந்தப்பன்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஆன்மிக நாட்டத்துடன் இருந்த இவர் தந்தையிடம் கல்வி கற்றார். ஏழு வயதில் குடும்ப வழக்கப்படி ’ஆசார்ய அபிஷேகம்’ என்னும் சடங்கை நடத்தி ’கந்தப்ப தேசிகர்’ என பெயர் மாற்றம் செய்தனர்.
கந்தப்பருக்கு திருமணம் நடத்த பெற்றோர் விரும்பினர். “ஆன்மிக வாழ்வில் மட்டும் ஈடுபட விரும்புகிறேன்” என்றார் கந்தப்பர். பெற்றோரும் மகனைத் தடுக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி, துறவியாக மாறி கோயில் கோயிலாக யாத்திரை சென்றார். சிதம்பரத்தில் தங்கிய காலத்தில் அவருக்கு ’மவுனயோகி’ என்பவரின் அறிமுகம் கிடைத்தது. எப்போதும் மவுனவிரதத்தில் இருக்கும் அவரிடம், தீட்சை பெறும் எண்ணத்தில் கந்தப்ப தேசிகர் அவருக்கு பணிவிடை செய்தார். ஒருநாள் புயலுடன் கடும்மழை பொழிந்த போது, கந்தப்ப தேசிகரின் மனதில் பளிச்சென ஞானம் ஏற்பட்டது. அதற்கு காரணம் குருநாதரான மவுனயோகி தீட்சை அளித்ததே. அதன்பின் உலகத்தைப் பற்றிய உணர்வை இழந்தார். தியானத்திலிருந்து கண் விழித்த மவுனகுரு, சீடருக்கு தன் சொந்த உடைகளை அளித்து அணியச் செய்தார். குருவின் உடையை தொடுவதே பாக்கியம் என்றால் அணிந்து கொள்வதை என்ன சொல்வது? மவுனயோகி சமாதி நிலை அடையும் காலம் வரை அங்கிருந்தார். அதன்பின் திருவண்ணாமலை அருகிலுள்ள வேட்டவலம் என்னும் பகுதியிலுள்ள குகையில் தங்கி தவத்தில் ஈடுபட்டார். அங்கு முத்துசாமி உடையார் என்னும் பக்தர் தேசிகருக்குப் பணிவிடை செய்தார். பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த உடையார், ஒருநாள் தன் வயலில் உழுது கொண்டிருந்தார். அப்போது பொற்காசு பானை ஒன்று கிடைக்க, உடையார் செல்வந்தர் ஆனார். கேள்விப்பட்ட ஊர்மக்கள், கந்தப்ப தேசிகரை மொய்க்கத் தொடங்கினர். தங்களுக்கும் புதையல் கிடைக்க அருள்புரியும்படி வேண்டினர். பணத்தாசை கூடாது என்று எவ்வளவு சொல்லியும் மக்கள் விலகாததால் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருந்த கோரக்கநாதர் குளத்தை இருப்பிடமாக அமைத்துக் கொண்டார். அங்கு அருணாசல செட்டியார் என்னும் அன்பர் தேசிகருக்கு பணிவிடை செய்யத் தொடங்கினார். செட்டியாருக்குக் குழந்தைப்பேறு இல்லை.தினமும் இரவு நேரத்தில் கந்தப்ப தேசிகர், திருவண்ணாமலையிலுள்ள சித்தர்களுடன் உரையாடுவது வழக்கம். ஒருநாள் இரவில் சித்தர்கள் மூலிகைகளைக் கொடுத்து, அவற்றைச் செட்டியாரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர். அதன் பின்னரே செட்டியாருக்குக் குழந்தைப்பேறு வாய்த்தது. இந்நிலையில் ஒருநாள் திருவண்ணாமலை சிவபெருமான் உடையாரின் கனவில் தோன்றினார். தேசிகரின் இருப்பிடத்தை தெரிவித்து, அங்கு செல்லுமாறு உத்தரவு விட்டார். அதே நாளில் தேசிகருக்கும் கனவில் தோன்றி உடையார் வரவிருப்பதையும் தெரிவித்தார். அதன்பின் தேசிகருக்கு மீண்டும் பணிவிடை செய்ய ஆரம்பித்தார் உடையார். திருவண்ணாமலை பகுதிக்கு கலெக்டராக இருந்தார் ஐடன்துரை என்னும் ஆங்கிலேயர். அவர் தேசிகரை சந்திக்க வந்தார். அப்போது அவரது இருபுறமும் புலிகள் படுத்திருந்தன.
தேசிகர் புலிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஐடன்துரை தன்னைச் சந்திக்க காத்திருப்பதை அறிந்து, “நண்பர்களே.. இங்கிருந்து செல்லுங்கள். விருந்தாளி காத்திருக்கிறார் பாருங்கள்” என்று சொல்லி சிரித்தார். புலிகளும் அங்கிருந்து விலகிச் சென்றன. அருகில் அமர்ந்த ஐடன்துரை நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார். காசநோயால் அவதிப்பட்ட ஐடன்துரை, தேசிகரின் அருளால் குணம் பெற்றார். தன்னுடைய சொத்துக்களை எல்லாம் தேசிகரிடம் ஒப்படைக்கவும் தயாரானார். “சன்யாசிக்கு பணம் தேவையில்லையே? பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் ஒருவருக்கு கொடுத்தால் பயன்படும்” என்றார் தேசிகர். புரியாமல் விழித்த துரையிடம், “அண்ணாமலையார் தான் பெரிய குடும்பஸ்தர். அவருக்கு கொடுங்கள்” என்றார். அதன் பின் திருவண்ணாமலை கோயிலைப் புதுப்பிக்கும் செலவை ஏற்றதோடு, தேரோட்டத்தையும் நடத்தினார் ஐடன்துரை. ஒருநாள் ஐடன்துரை திருக்கார்த்திகை தீபத்தை தரிசிக்க புறப்பட்டார். வழியில் மழை காரணமாக ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. தன் குருநாதரான தேசிகரை வழிபட்டு, குதிரையுடன் ஆற்றுக்குள் இறங்கினார் ஐடன்.
மறுகரையில் பிணமாக ஒதுங்குவார் என அங்கிருந்தவர்கள் நினைத்தனர். அப்போது தியானத்தில் இருந்த தேசிகர் “வெள்ளத்தில் சிக்கியுள்ள சீடனைக் காப்பது என் கடமையல்லவா” என்று சொல்லி கையை உயர்த்தினார். அங்கு இருந்தவர்களுக்கு விஷயம் புரியவில்லை. சற்று நேரத்தில் குதிரையில் வந்திறங்கிய ஐடன்துரை, ’ஆற்றுவெள்ளத்தை குருவின் அருளால் தான் கடக்க முடிந்தது’ என்று சொன்ன பிறகே உண்மையை உணர்ந்தனர் மக்கள். தேசிகரின் மடம் வடகிழக்கு மூலையில் இருந்ததால் ’ஈசான்ய (வடகிழக்கு) ஞான தேசிகர் எனப்பட்டார். 79 வது வயதில் சமாதிநிலை அடைந்தார். மடத்துக்கு அருகில் இருந்த வில்வமரத்தடியில் பூதஉடல் வைக்கப்பட்டது. மகான் ரமணர் அவ்வப்போது இங்கு வருவதுண்டு. |
|
|
|