|
ஒரு ஊரில் பலர் குடிகாரர்களாக இருந்தனர். யார் சொல்லியும் அவர்கள் திருந்தவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு வந்த துறவி ஒருவர் அற்புதம் நிகழ்த்துவதாக தெரிவித்தார். அனைவரும் குளக்கரையில் கூடினர். சிறு கல் ஒன்றைக் காட்டி, “இதை குளத்தில் எறிந்தால் என்னாகும்?” எனக் கேட்டார். “மூழ்கி விடும்” என்றனர் மக்கள். “ஆனால் பெரிய கல்லைக் கூட குளத்தில் மிதக்க வைக்க என்னால் முடியும்” என்றார் துறவி. சீடர்களிடம் மரப்பலகை ஒன்றை எடுத்து வரச் சொல்லி, அதில் பாறாங்கல்லை கட்டி குளத்திற்குள் தள்ளினார். கட்டையால் கல் மிதந்தது. “இதில் என்ன அற்புதம் இருக்கிறது? மரக்கட்டையில் எதைக் கட்டினாலும் மிதக்குமே” என்றனர் மக்கள்.
“சிறு கல்லும் மூழ்குவதைக் கண்டீர்கள். ஆனால் மரக்கட்டையில் வைத்தால் பாறாங்கல் கூட மிதக்கிறது. இதன் பொருள் என்ன? நல்லவருடன் நட்பு வைத்தால், ஒருபோதும் உங்களை மூழ்க விட மாட்டார்கள். இதை தெரிவிக்கவே வந்தேன்’ என்றார். அவரை தங்கள் ஊரிலேயே தங்க வைத்தனர். அவரது உபதேசங்களை ஏற்ற இளைஞர்கள் மனம் திருந்தினர். |
|
|
|