|
குரூரம்மா
சிறுவன் ஒருவன் குறும்பு செய்யும் மனநிலையில் இருந்தான். அவனது அம்மாவால் அதனை தாங்க முடியவில்லை. “வேண்டாம் உன்னி கிருஷ்ணா.. நிறைய முறை சொல்லிட்டேன்.. இன்னொரு முறை இப்படி செய்யாதே.. எனக்கு கோபம் வரும்..” என்றாள் குரூரம்மா. “வந்தால் என்ன செய்வியாம்?” என்றான் உன்னி. வரவர இவன் செய்யும் அட்டகாசத்துக்கு அளவில்லை. கோபத்தில் திட்டும்போதே அவள் சிரமப்பட்டு பிரித்த பொரி, உமியை மீண்டும் ஒன்றாக்கி விட்டு கடகடவெனச் சிரித்தான். கோபம் தலைக்கேறிய குரூரம்மா, சட்டென அங்கிருந்த பெரிய பானையை எடுத்தாள். நெல்லை பொரிக்கும் பானை அது. கன்னங்கரேல் என்று கரி ஒட்டியிருந்தது. உன்னி கிருஷ்ணனை அதற்குள் அமுக்கி, அதன் வாயில் மற்றொரு பானையைக் கவிழ்த்தாள். கொஞ்ச நேரம் அவன் தொல்லையின்றி வேலை பார்க்கலாம் என நினைத்தாள். பொரியில் இருந்து உமியை பிரிக்க ஆரம்பித்தாள். இத்தனைக்கும் அம்மாவுக்கு உதவியும் செய்வான். பூப்பறிப்பது, சமையலுக்கு ஒத்தாசை செய்வது என்றும் இருப்பான். சில நேரம் கோபப்படுத்தவும் செய்வான். பானைக்கு உள்ளே இருந்து கத்திக் கொண்டே இருந்தான் உன்னி. திடீரென சத்தம் நிற்கவே அம்மா பதறினாள். பானையை திறந்து “என் செல்லமே எழுந்திரடா” என்று கெஞ்சினாள். ’க்ளுக்’ என்று சிரித்தபடி எழுந்தவன் மறுபடியும் பொரி, உமியை கலைந்து விட்டு ஓடினான்.
அந்த ஊரில் வில்வமங்களத்து சுவாமி என்றொரு துறவியும் இருந்தார். முன்பு ஒருநாள் அவருக்கு காட்சியளித்த கிருஷ்ணர் “என்ன வரம் வேண்டும் கேள்” என்றார். ”எனது பூஜையை தினமும் நேரில் வந்து ஏற்க வேண்டும்” என்றார். . “அப்படியே ஆகட்டும்” என்றான் கிருஷ்ணன். அன்றாட பூஜையை ஏற்கும் கிருஷ்ணன் அன்று வரவில்லையே என வருந்தினார் துறவி. சோகத்தில் அழும் நிலைக்கு ஆளானார். அப்போது கிருஷ்ணன் அவரிடம் ஓடி வந்தான். “அடடா... என்ன உன் உடம்பு எங்கும் கரியாக இருக்குதே?” என்று பதறினார் துறவி. குரூரம்மா பானைக்குள் சிறை வைத்த விஷயத்தை தெரிவித்தான். அதுவே தாமதத்துக்கு காரணம் என்றான்.
ஆமாம்... வில்வமங்களத்து சுவாமிக்கு எந்த நாளில் கிருஷ்ணர் வரம் தந்தாரோ, அதே நாளில் குரூரம்மாவுக்கும் தரிசனம் அளித்து “என்ன வரம் வேண்டுமோ கேள்” எனக் கேட்டிருந்தான்.
கணவரை இழந்த குரூரம்மாவுக்கு குழந்தையும் இல்லாததால் கிருஷ்ணனே குழந்தையாக தன்னிடம் வளர வேண்டும் என வரம் கேட்டிருந்தாள். “இதோ பாரு கிருஷ்ணா! கோகுலத்தில் யசோதையை தவிக்க விட்டது போல என்னை விட்டுப் போகாதே” என்றும் தெரிவித்தாள்.
கிருஷ்ணனும் ஒரு சாதாரண குழந்தை போல வரவே, ’உன்னி கிருஷ்ணன்’ என்று பெயரிட்டு வளர்த்தாள்.
அன்று முதல் குரூரம்மா வீட்டில் சாதாரணக் குழந்தையாக வளர்ந்தான். அக்கறையுடன் பராமரித்தாள். இருவரும் சந்தோஷமாக விளையாடுவார்கள். சமயத்தில் கோபப்படுத்தவும் செய்வான்.
கிருஷ்ண பக்தையான குரூரம்மா 1570ம் ஆண்டு பிறந்தவர். சிறுமியாக இருக்கும் போதே கிருஷ்ணர் மீது பக்தி கொண்டாள். வயதான பிராமணர் ஒருவருக்கு மணம் முடித்தனர்.
பதினாறு வயதில் கணவரை இழந்தாள்.
அப்போது நம்பூதிரி குடும்பங்களில், கணவரை இழந்த பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்கலாம். மற்றபடி பிரார்த்தனை, பூஜை செய்ய மட்டும் அனுமதிப்பர். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் அபார பக்தி இருந்தது. சமையல் முடிந்ததும் பிரார்த்தனை செய்வாள். தவறாமல் விரதம் இருப்பாள்.
பக்தி தவிர வேறு எதுவும் மனதில் இல்லை. அனைவரையும் தன் குழந்தைகளாக கருதி பற்று இல்லாமல் வாழ்ந்தாள்.
’அழகிய கருப்பு நிற கோபாலன் என் முன்னே வருக’ என பாடிக் கொண்டே இருப்பாள். குரூரம்மா செய்யும் செயல்களில் உறவினர்கள் குற்றம் கண்டுபிடித்தனர்.
அவளை தனிமைப்படுத்தினர். தன் பக்தை, தனிமையில் இருப்பதை கிருஷ்ணர் பொறுப்பாரா? அதனால் ’உன்னிகிருஷ்ணன்’ என்னும் பெயரில் அவளிடம் வளர்ந்தார்.
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டியதால் “அம்மா” என அனைவரும் அழைத்தனர்.
ஒருநாள் கதவு திறக்காமல் பூட்டியே கிடந்தது. அக்கம்பக்கத்தினர் “அம்மா .. அம்மா..” என்று கத்தியபடி கதவை உடைத்து உள்ளே சென்றனர். பூஜையறையில் தீபம் மட்டும் எரிந்தது. என்ன நடந்தது என்பது புரிந்தது. குரூரம்மாவின் உடல் கூட அங்கில்லை. உன்னி கிருஷ்ணனுடன் வைகுண்டம் போய்விட்டாள்.
நாளடைவில் அந்த வீடு சிதிலமடைந்தது. 350 ஆண்டுகளுக்கு பின் பிரசன்ன முறைப்படி இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ’குரூரம்ம கிருஷ்ண ஆலயம்’ இங்குள்ளது.
|
|
|
|