|
சீடர்களின் உதவி இல்லாமல், தன் தேவைகளை கவனித்து வந்தார் புத்தர். ஆனால் முதுமை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் சீடர் ஒருவரை நியமிக்க விரும்பினார். சீடர்கள் அனைவரும் அவரது கட்டளைக்காக காத்திருந்தனர். ஒருநாள் ஆனந்தர் என்னும் சீடர் ஓரிடத்தில் மவுனமாக அமர்ந்திருந்தார். அவரை ஆர்வமுடன் பார்த்தார் புத்தர். உடனே மற்ற சீடர்கள், ”ஆனந்தா! உம்மைத் தான் குருநாதர் பார்க்கிறார். நீரே அவருக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை அடையப் போகிறீர்” என்றனர். அப்போதும் ஆனந்தர் வாய் திறக்கவில்லை. ”ஆனந்தனை யாரும் வற்புறுத்தாதீர்கள்” என்றார் புத்தர். அதைக் கேட்டு பதறினார் ஆனந்தர். ”சுவாமி! நான் உங்களுக்கு தொண்டு செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு நான்கு விஷயங்களை நீங்கள் ஏற்கவும், மறுக்கவும் வேண்டும்” என நிபந்தனை விதித்தார். என்னடா சீடன் நிபந்தனை விதிக்கிறானே என அனைவரும் திகைத்தனர். “முதலில் மறுக்க வேண்டியதைச் சொல்” என்றார் புத்தர்.
“உங்களுக்கு யாராவது உணவு அளித்தாலோ, ஆடைகள் தந்தாலோ அதை எனக்கு தருவது கூடாது. உங்களுக்கு யாராவது ஆசனம் அளித்தால் அதில் என்னை அமரச் சொல்லக் கூடாது. உங்களுக்கு யாராவது பூஜை செய்ய அழைத்தால், என்னை தங்களுடன் அழைத்துச் செல்லக் கூடாது” என்றார். ”சரி.... சம்மதிக்க வேண்டிய விஷயங்களை சொல்” என்றார் புத்தர். “எனக்கு பூஜை செய்ய யாராவது அழைத்தால் அதை தாங்களே ஏற்க வேண்டும். உங்களைத் தரிசிக்க யாரையாவது நான் அழைத்து வந்தால், அவருக்கும் தரிசனம் அளிக்க வேண்டும். நான் மனபலம் இழந்த நேரத்தில், தைரியம் சொல்ல வேண்டும். நான் அருகில் இல்லாத போது, யாருக்காவது உபதேசம் செய்தால் மீண்டும் எனக்காக ஒருமுறை சொல்ல வேண்டும்” என்றார். தன்னை சிந்திக்காத சீடனைக் கண்டு ’ஆனந்தா...’ என புத்தர் நெகிழ்ந்தார். இறுதி வரை புத்தருக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை அடைந்தார் ஆனந்தர்.
|
|
|
|