|
கந்தனும், ரெங்கனும் நண்பர்களாக இருந்தனர். கந்தன் தன் மனைவி வள்ளியுடன் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். அவனிடம் ஆயிரம் பொற்காசுகள் இருந்தன. அதை ஒரு பானையில் வைத்து நண்பன் ரெங்கனுடன் சேர்ந்து ஓரிடத்தில் புதைத்தான். பணத்தின் மீது ஆசை எழுந்ததால் அதை திருடினான் ரெங்கன். ஊர் திரும்பிய கந்தன் பானை இல்லாததை கண்டு வருந்தினான். ’பணத்தை மீட்க வழி சொல்கிறேன். மூன்று மாத காலம் நாம் இருவரும் காசி செல்ல இருப்பதாக நண்பரிடம் தெரிவியுங்கள்’ என்றாள் கந்தனின் மனைவி வள்ளி. கந்தனும் விஷயத்தை ரெங்கனிடம் தெரிவித்தான்.
அன்று மாலை மூன்று பானைகளில் கற்களை நிரப்பி, அவற்றின் வாயை மஞ்சள் துணியால் கட்டி வள்ளி தயாராக வைத்து இருந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே ரெங்கனும் வந்தான். “அண்ணா! நாங்கள் வெளியூர் சென்றபோது, இந்த மூன்று பானைகள் நிறைய தங்கக்காசுகள் கிடைத்தன. முன்பு போல உங்கள் உதவியுடன் நாளை புதைக்க இருக்கிறோம்” என்றாள்.
திடுக்கிட்ட ரெங்கனோ வீட்டுக்கு ஓடினான். திருடிய பானையை பழைய இடத்தில் புதைத்தான். நண்பன் காசிக்கு புறப்பட்டதும், நான்கு பானைகளையும் திருட திட்டமிட்டான். அன்றிரவு குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற கந்தன், பொற்காசு உள்ள ஒரு பானையை மட்டும் எடுத்து வந்தான். மறுநாள் ரெங்கனிடம், “என் மனைவிக்கு உடம்பு சரியில்லை; அதனால் காசிக்கு போகவில்லை. நேற்றிரவு தங்க காசு பானையை எடுத்து விட்டேன்” என்று தெரிவித்தான். புத்தி உள்ளவனே பிழைப்பான் அல்லவா? |
|
|
|