Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருப்பதி வெங்கடேசர்
 
பக்தி கதைகள்
திருப்பதி வெங்கடேசர்

’திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும்’ என்பர். வீட்டிலோ, தொழிலிலோ, பணியிலோ உயர்வை எதிர்பார்க்கும் அன்பர்கள் திருப்பதி பெருமாளை தரிசித்த பின் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதை கண்கூடாக காண்கிறார்கள். ஆந்திராவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள புகழ் மிக்க திருத்தலம் திருப்பதி. மூலவர் வேங்கடமுடையான். இவருக்கு வேங்கடவன், வெங்கடாசலபதி, பாலாஜி, சீனிவாசப் பெருமான், ஏழுமலையான், பிரபு, கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், துன்பங்களைத் தீர்க்கும் தெய்வம், துருவ மூர்த்தி, துருவ பேரம், ஸ்ரீவாரி என பல திருநாமங்கள் உண்டு. மகாவிஷ்ணு தானாகவே விரும்பி எழுந்தருளிய திருத்தலங்கள் திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், நாங்குநேரி, புஷ்கரம், பத்ரி, சாளக்கிராமம். இதில் திருப்பதி விசேஷமானது.

ஏழுமலைகளுக்கு உரியவர் என்பதால் பெருமாளை ’ஏழுமலையான்’  என அழைக்கிறோம். ஆறு மலைகளைக் கடந்து ஏழாவது மலையில் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், விருஷபாத்திரி, அஞ்சனாத்ரி, ஆனந்த கிரி, வேங்கடாசலம் என்பவையே ஏழு மலைகள்.
பெருமாள் குடி கொண்ட இடம் மேல் திருப்பதி என்றும், தாயார் அருளும் இடம் கீழ்திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இவர் உலகின் பணக்காரக் கடவுள் எனப்பட்டாலும், அவர் அருள்புரிவது யாருக்குத் தெரியுமா? உண்மையான ஏழை பக்தருக்கு! ’பணம் வேண்டும்... புகழ் வேண்டும்... சொத்து சுகம் வேண்டும்’ என்ற ஆசை இல்லாமல், ’திருவடியை அடைய வேண்டும்’ என்ற எண்ணத்துடன் வருவோரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறான். வளமான வாழ்வு அளித்து உரிய நேரத்தில் தன் இருப்பிடமான வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறான்.

ஏழுமலையானுக்குத் தினமும் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. அதுவும் உடைந்த மண்சட்டி என்பது ஆச்சரியமான தகவல். மண்பாண்டத் தொழிலாளியான பீமன் என்பவரின் பக்தியை உலகிற்கு வெளிப்படுத்தவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணுதே இங்கு பெரும்வேலை. பக்தர்களையும் உண்டியல் எண்ணும் பணியில், தேவஸ்தான நிர்வாகத்தினர் ஈடுபடுத்துகிறார்கள். இதில் பங்கேற்க தேவஸ்தான இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அளிக்கும் தகவல்கள் மூலம்,  ’உண்டியல் எண்ணுவதற்கு தகுதியானவரா’ என்பதை தேவஸ்தானம் தீர்மானிக்கும்.

திருப்பதியில் மட்டும் ஏன் இப்படி பணமழை கொட்டுகிறது? பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்வதற்காக குபேரனிடம் பெருமளவு தங்கம் கடன் வாங்கிய ஏழுமலையான், அதை திருப்பி செலுத்தும் உபாயமாக ’ கலியுகத்தில் யார் பாவம் செய்கிறார்களோ அவர்களின் பாவக் கணக்குக்கு ஏற்ப பணம் வசூலித்து கடனைத் தீர்ப்பேன்’ என வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி உண்டியல் காணிக்கையை வசூலிக்கிறார். குபேரனிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? ஆகாசராஜனின் மகளான பத்மாவதியை விரும்பிய ஏழுமலையான் திருமண ஏற்பாட்டை தொடங்கினார். அப்போது மகாலட்சுமி தாயார் அவரை விட்டு பிரிந்திருந்ததால் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். ஏழ்மை நிலையில் திருமணத்தை எப்படி விமரிசையாக நடத்துவது எனத் தவித்தார்.
நாரதரிடம், ’எப்படியாவது பணம் திரட்டி திருமணம் நடத்த உதவுங்கள்’ எனக் கேட்டார்.  

வானுலக தேவர்கள் அனைவரையும் திருப்பதிக்கு வருமாறு தகவல் அனுப்பினார் நாரதர்.  குறிப்பிட்ட நாளில் குபேரன் உள்ளிட்ட அஷ்ட திக்பாலர்கள், நவக்கிரகங்களின் அதிபதிகள் ஏழுமலைக்கு வந்தனர்.  யாரிடம் கேட்டால் பணம் கிடைக்கும் என தெரியாதவரா நாரதர்? குபேரனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன், ’குபேரனே... நீயே சரியான தேர்வு. உலகின் செல்வந்தன் நீ தான்... வைகாசி வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை  சுபநாளில் ஸ்ரீநிவாச – பத்மாவதி திருமணம் நடக்கவிருக்கிறது. தற்போது மகாலட்சுமியை பிரிந்து இருப்பதால் சீனிவாசர் பணமின்றி தவிக்கிறார். திருமணச் செலவுக்கான பணத்தை நீயே கொடுத்து உதவ வேண்டும். வட்டியுடன் திருப்பித் தருவார்’ என்றார். சம்மதித்த குபேரன் கடனாக ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் கொடுத்தான். ஏழுமலையானும் கடன் பத்திரம் எழுதி,”குபேரா! நீ கொடுத்த கடனுக்கு வட்டி செலுத்துவேன். கலியுகத்தின் கடைசியில் வட்டியுடன் அசலையும் சேர்த்துக் கொடுப்பேன்’ என்றார். ஏழுமலையான் வாங்கிய கடனுக்காக உண்டியல் காணிக்கையை மக்கள் செலுத்துகின்றனர்.  ’பக்தர்களிடம் வசூலித்துத் தருவேன்’ என்று ஏழுமலையான் கொடுத்த வாக்கை உண்டியலுக்கு அருகில் எழுதியும் வைத்துள்ளனர். ’கோவிந்தா... கோவிந்தா...’ என்ற நாமம் சொல்லி ஏழுமலையானை வணங்குவோம்! குறைவில்லா வாழ்வு பெறுவோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar