|
குருநாதர் ஒருவர், தன் சீடனை அழைத்து, ”வெளியூர்களுக்கு சென்று மக்களுக்கு தர்ம சிந்தனைகளை உபதேசித்து வா! ஆனால் உத்தமபுரி கிராமத்துக்கு மட்டும் போகாதே,” என்றார். “குருவே! அங்கு மட்டும் ஏன் போகக் கூடாது?” எனக் கேட்டான். ”பெயரில் தான் உத்தமம் இருக்கிறது. ஆனால் அங்கு தீயவர்களே அதிகம்” என்றார் குரு. ”அப்படியானால் அங்கு தான் முதலில் செல்வேன். நல்லவர்களுக்கு உபதேசம் தேவையில்லை. அவர்கள் இயல்பாகவே நற்செயலில் ஈடுபடுவர். தீயவர்கள் தான் திருந்த வேண்டும்” என்றான் சீடன். “அவர்கள் உன்னை அடித்தால் என்ன செய்வாய்?” என்றார் குரு “வாங்கிக் கொள்வேன்” என்றான். “கொல்ல முயன்றால்...” என்றதும், “உயிர் விடவும் தயார்” என்றான். “கொன்றே விட்டால்...” என்றதும்,“அதை விட எனக்கு வேறென்ன வேண்டும் குருவே! தர்ம சிந்தனைகளை பரப்பியதால் கடவுள் அருளால் மோட்சம் கிடைக்கும்” என்றான். “பயத்தை தூக்கி எறிந்த நீ வாழ்வில் சாதிப்பாய். உத்தமபுரிக்கு உடனே புறப்படு” என ஆசியளித்தார் குரு.
|
|
|
|