|
தேவலோகத்தில் சிவனுக்கும் உமாதேவிக்கும், "தம்மில் யார் சிறந்தவர் அழகில்? எனப் போட்டியானது.
""நான்தான் வசீகரன், அழகன்! என்றெல்லாம் சிவன் சொன்னார்.
""இல்லையில்லை நான்தான் அழகின் பூர்ணத்துவம் பெற்றவள்! என் முக அழகே சிறந்தது என்று உமாதேவி கூறினாள்.
இருவருக்கும் தங்கள் அழகு பற்றி வாக்கு வாதம் நிகழ்ந்தது. அப்போது தேவர்கள், பிரம்மதேவன், மகாவிஷ்ணு இந்திரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.
""நீங்களே, சொல்லுங்கள்.... யார் அழகு ரூபம்? என்று பிரம்மா, விஷ்ணு, இந்திரன் போன்றோரிடம் கேட்டாள் இறைவி உமாதேவி.
சிவனை உயர்த்திச் சொன்னால் பரமேஸ்வரியான உமையவளின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். உமாதேவியை அழகில் சிறந்தவள் என்று சொன்னால், சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாக நேரும் என அஞ்சியவர்களாய் சற்றுப் பின்னடைந்தார்கள்.
பிரம்மா, விஷ்ணு, மற்றவர்களும், ""அனைத்தையும் படைத்திட்ட பேரிறைவன் விஸ்வகர்மாவை அழைத்துக் கேட்டால், இந்த வாக்கு வாதம் ஒரு முடிவுக்கு வரும் என்றனர்.
யாவரும் விஸ்வகர்மாவை வணங்க, அவர் தோன்றினார். வாக்கு வாதத்தை தேவர்கள் விளக்கினர். விஸ்வகர்மா, ""நீங்கள் இருவரும் எங்களைப் பார்க்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் உங்கள் இருவரைப் பார்க்கிறோம். ஆனால், உங்களையே நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதன்பின் நீங்களே யார் அழகு எனத் தீர்மானித்துக் கொள்வீர். என்றார். சொல்லியதும் அங்கிருந்த ஒரு பாறையை நிலைக்கண்ணாடியாக்கினார் விஸ்வக்கர்மா! ""ஒவ்வொருவராய் பார்த்துக் கொள்ளுங்கள் உங்களை அழகை என்றார்.
முதலில் சிவன் தன் உடலைக் கண்ணாடியில் பார்த்தார். விரி தலை ஜடா முடியும். மார்பில் மான்தோலும், இடையில் முழங்காலுக்கு மேலே புலித்தோல் போர்த்தியுள்ளதையும் பார்த்தார். சிவன் தன்னுருவைப் பார்த்து வெட்கமடைந்து குனிந்தவாறு தள்ளி நின்றார். அடுத்து உமாதேவி தன்னழகைப் பார்த்து ஆனந்தம் கொண்டாள். உமையவளே அழகெனச் சிவன் கூற, உமாதேவி மேலும் பரம சந்தோஷமானாள்!
அதன் விளைவாக பூவுலகில் மகிழ்ச்சிப்பூ மலர்ந்தது. உயிர்கள் யாவும் ஆனந்தத்தில் திளைத்தன. |
|
|
|