|
மனிதன் ஆசைப்படலாம்; பேராசை கூடாது. வாழ்வில் சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், முன்னுக்கு வர உழைப்பதில் தவறில்லை. ஆனால் நான் மட்டுமே முன்னேற வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் கூடாது. அதாவது தன்னலம் கலந்த வெறி.
இதற்கு உதாரணமான பராக்கிரமசாலி துரியோதனன், மாவீரன் நெப்போலியனை இப்போது பார்ப்போம்.
பரத கண்டத்தின் சக்கரவர்த்தியாக இருந்தவர் துரியோதனன். ஆசிய கண்டமே அந்தக் காலத்தில் ’பரத கண்டம்’ என பெயர் பெற்றிருந்தது. இவ்வளவு பெரிய நிலப்பகுதியை ஆள்பவர் எவ்வளவு பெரிய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்! ’துரியோதனன்’ என்ற சொல்லுக்கு ’யாராலும் தோற்கடிக்க முடியாதவன்’ என்பது பொருள்.
துரியோதனனின் தாய் காந்தாரி தன் கண்களை கருப்புத்துணியால் கட்டியிருப்பாள். காரணம் அவளின் கணவர் திருதராஷ்டிரன் பார்வையற்றவர் என்பதால் உலகத்தை பார்க்க அவள் விரும்பவில்லை. பதிபக்தியால் இப்படி கண்ணைக் கட்டி வாழ்ந்தாள். இந்நிலையில் துரியோதனன் ஒரு வரம் பெற்றிருந்தார். நிர்வாண நிலையில் அவனை, காந்தாரி பார்த்தால் உடம்பு வஜ்ரம் போல உறுதி பெறும் என்பதே அந்த வரம். இதனால் யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்பதை அறிந்த கிருஷ்ணர் சூழ்ச்சி செய்தார். ”துரியோதனா! பெற்ற தாயிடம் யாராவது வெற்று உடம்பைக் காட்டுவார்களா? எனவே இடுப்பு முதல் தொடை வரை ஆடையால் மறைத்து மற்ற பகுதிகளைக் காட்டு” என்றார். துரியோதனனும் சம்மதித்தான். அதனால் அவனது உடம்பின் மற்ற பாகங்கள் வஜ்ரம் போல உறுதி பெற, மறைத்த பகுதி மாற்றம் பெறவில்லை. இதன்பின் போரில் துரியோதனனின் தொடையை குறி வைத்து பீமன் தாக்கவே உயிர் பிரிந்தது.
சத்திரிய தர்மத்திற்குக் கட்டுப்பட்ட மாவீரன் துரியோதனன். ’பாண்டவரில் பலசாலியான பீமனை வீழ்த்துவேன்’ என்று சபதம் எடுத்தவன். அவன் நினைத்திருந்தால் ’பாண்டவரில் யாரையாவது ஒருவரைக் கொல்வேன்’ என்றும் கூட சபதம் செய்திருக்கலாம். கதாயுதம் ஏந்தி போர் புரிவதில் பீமனை காட்டிலும் துரியோதனனே கெட்டிக்காரன். கிருஷ்ணரின் சூழ்ச்சியால் தான் துரியோதனன் வீழ்ந்தான் என்கிறது மகாபாரதம்.
துரியோதனன், கர்ணன் இடையே உள்ள நட்பு குறித்தும் கேள்விப்பட்டிருப்பீர்கள். துரியோதனனின் மனைவியும், கர்ணனும் சொக்கட்டான் ஆடும் போது ஏற்பட்ட தர்மசங்கடமான நிலையிலும் ’எடுக்கவா கோர்க்கவா’ என துரியோதனன் கேட்டதை அறிந்திருப்பீர்கள். வீரத்துக்குத் தடையாக ஒருவரின் பிறப்பு இருப்பது கூடாது என்பதை நிரூபிக்க அங்கதேசம் என்னும் பகுதியை அளித்து கர்ணனை மன்னராக அறிவித்தார் துரியோதனன்! அர்ஜூனனோ குழம்பிய மனதுடன் போர்க்களத்தை விட்டு ஓட நினைத்த போது, கிருஷ்ணர் பகவத்கீதையை உபதேசம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் துரியோதனனோ தன்னுடைய க்ஷத்ரிய தர்மத்திலிருந்து பிசகாமல் கடைசி வரை போரிட்டார். இருந்தாலும், லோபம் என்ற கீழான புத்தியால் முடிவைத் தேடிக் கொண்டார். எவ்வளவு சொல்லியும் பாண்டவருக்கு நியாயமாகச் சேர வேண்டிய நாட்டைத் தர மறுத்தார் துரியோதனன்.
’ஐந்து கிராமங்களையாவது கொடு’ எனக் கேட்டும் ஏற்கவில்லை. அதன் பின் இறுதியாக ’ஐந்து தெருக்களையாவது கொடு’ எனக் கேட்டும் சம்மதிக்கவில்லை. ’ஐந்து ஊசிமுனை அளவு கூட கொடுக்க மாட்டேன்.
நாடு எனக்கே சொந்தமானது’ என்றார் துரியோதனன்! இதுவே துரியோதனனின் அழிவுக்கு காரணம்!
சரி... உலக சரித்திரத்தை எடுத்துக் கொள்வோம்.
வீரனாக இருந்தும், தன் காலடியின் கீழே உலகை கொண்டு வரும் திறமை இருந்தும், ’தான் மட்டுமே வாழ வேண்டும்’ என்னும் பேராசையால் அழிந்தவர் நெப்போலியன்.
1769ல் சாதாரண குடும்பத்தில் பிறந்து, 24ம் வயதில் உலகின் சிறந்த போராளி என பெயர் பெற்றவர். வீரம், உயராத உழைப்பால் ஐரோப்பாவிலுள்ள நாடுகளை எல்லாம் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். பல நாடுகளை கைப்பற்றினாலும், இறுதியாக அவரது கவனம் ரஷ்யாவின் பக்கம் திரும்பியது. இந்த பேராசை அறிவுக்கண்ணை மறைத்தது. குளிர்காலத்தில் ரஷ்யா மீது படையெடுத்ததால் பெற்ற வெற்றிகளை எல்லாம் ஒருசேர இழந்தார் என்பது வரலாறு! இதுவே சுயநலத்தின் வெளிப்பாடு.
சரி... எப்படி இதை மனிதன் வெல்வது? நியாயமான ஆசை சுயநலமாக மாறாமல் இருப்பது எப்படி?
அதற்கான வழிகள் இதோ.
நமக்காக வாழாமல், பிறருக்காக வாழ வேண்டும். இந்த நிலையை அடைய எதிர்பார்ப்பு இன்றி, உதவியவர்களை நன்றியுடன் நினைக்க வேண்டும். இதனால் அவர்களைப் போல நாமும் பிறருக்கு உதவுவோம் என்ற எண்ணம் வரும். இரண்டாவது, வாழும் காலத்தில் எப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என நினைப்பதை விட, பூமியை விட்டு போகும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை உணருங்கள்.
மூன்றாவது, மற்றவர் மீது இரக்கப்படுங்கள். பிறரது நியாயமான தேவைகளை நிறைவேற்ற எந்த வழியில் நாம் உதவுவது என யோசியுங்கள். நான்காவது, மனிதப்பிறவி கடவுள் நமக்கு அளித்த பரிசு. மற்றவர்களுக்கு உதவுவதே கடவுளுக்கு செய்யும் நன்றிக்கடன் என்று நம்புங்கள். ஐந்தாவது, இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழும் மனநிலையை உருவாக்குங்கள்.
|
|
|
|