|
அழகாபுரி நாட்டின் மன்னருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மகாராணியுடன் ஒவ்வொரு சிவத் தலங்களையும் தரிசித்து வந்தார். அதன் பலனாக ஓராண்டுக்குள் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ’அழகேசன்’ என பெயரிட்டார். ”மன்னா! குழந்தை பாக்கியம் கிடைத்தாலும் உன் மகன் 25 வயதில் இறப்பான்” என அசரீரி ஒலித்தது.
அதிர்ச்சியடைந்த மன்னர், அழகேசனை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். 25 வயது பிறந்ததும் குலதெய்வமான காளி கோயிலுக்குச் சென்றார். “தாயே! உலகில் உன்னால் ஆகாதது எதுவுமில்லை. என் மகனின் உயிரைக் காப்பாற்று தாயே” என வேண்டினார்.
”மகனே! விதிப்படி உன் மகன் இறப்பது உறுதி. அப்போது அவனது உயிரற்ற உடலுக்கு, திருமணம் நடத்தி காட்டிற்கு அனுப்பி வை. எல்லாம் நல்லதாக நடக்கும்” என்றாள் காளி.
விதிப்படி அழகேசனும் இறந்தான். உயிரற்ற உடலுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? இருந்தாலும், சம்மதம் தெரிவித்தால் நிறைய பொன், பொருள் அளிப்பதாக வாக்களித்தார் மன்னர். பெற்றோரை இழந்த பெண்ணான கங்கா என்பவள் அந்த ஊரில் வாழ்ந்தாள். அவளது அண்ணி பணத்திற்கு ஆசைப்பட்டு, திருமணம் செய்து கொடுப்பதாக மன்னரிடம் தெரிவித்தாள். மேலும் மணப்பெண்ணின் கண்களைத் துணியால் மறைத்து விட்டு, தாலி கட்டுவது அவர்களின் வழக்கம். அண்ணியின் எண்ணம் ஈடேற இது வாய்ப்பாக இருந்தது. கங்காவிடம் உண்மையை மறைத்த அண்ணி, அவளின் கண்களை துணியால் மறைத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள்.
அழகேசனின் சடலத்தைக் கிடத்தி அதன் கையில் தாலியைக் கொடுத்து வாங்கி, கங்காவின் கழுத்தில் கட்டினாள் அண்ணி. பின் பல்லக்கில் கங்காவையும், சடலத்தையும் காட்டிற்கு அனுப்பி வைத்தாள். அங்கு கட்டை அவிழ்த்த கங்கா, அருகில் கிடந்த மணமகன் சோர்வால் தூங்குவதாக கருதினாள். ஆனால் உடலில் உணர்ச்சி ஏதும் வெளிப்படாததால், கணவர் இறந்ததை உணர்ந்தாள். அருகில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டாள். ’நற்றுணையாவது நமச்சிவாயவே’ என ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி வழிபட்டாள். சிவனும், பார்வதியும் காட்சியளித்து அழகேசனை பிழைக்கச் செய்தனர்.
’மகளே! உன் கூக்குரல் எங்களை இங்கு வரவழைத்து விட்டது. உயிர் பெற்ற உன் கணவர் நீண்டகாலம் வாழும் பாக்கியம் பெறுவார். ஆடி அமாவாசையன்று (ஆக.31) பெண்கள் எங்களை வழிபட்டால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்” என வாழ்த்தினர். |
|
|
|