|
குலசேகர பாண்டியன் மதுரையை ஆட்சி செய்தார். ஒருநாள் மன்னர் நகர் வலம் வரும் போது, அந்தணர் ஒருவர் மனைவியிடம் பேசினார். ”நான் காசி யாத்திரை போகிறேன். அதுவரை உத்தமரான நம் மன்னர் உன்னைப் பாதுகாப்பார்” என்றார். மக்கள் தன் மீது கொண்ட நம்பிக்கையை எண்ணி மகிழ்ந்தார். தினமும் அந்த வீட்டைக் கண்காணித்தார் மன்னர்.
சில மாதங்களுக்கு பின்னர் ஒருநாள், அந்த வீட்டுப்பெண் யாரோ ஒரு ஆணுடன் பேசுவதை மன்னர் கேட்டார். ஆனால் அந்தணர் தான் அப்போது பேசிக் கொண்டிருந்தார். உண்மை அறியாத மன்னர், அந்நியமான மனிதர் இருப்பதாக எண்ணி சந்தேகத்துடன் கதவைத் தட்டினார். அந்தணர் உள்ளே இருந்து வருவதை ஜன்னல் வழியாக மன்னர் பார்த்தார். ”ஐயோ! தவறுதலாக கதவைத் தட்டி விட்டோமே?” என எண்ணி தெருவிலுள்ள எல்லா வீட்டு கதவுகளையும் தட்டி விட்டு ஓடினார்.
திருடன் தான் கதவைத் தட்டியிருக்க வேண்டும் என நினைத்த மக்கள், மறுநாள் மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் அமைச்சர் களிடம், ”நள்ளிரவில் வீட்டுக் கதவுகளைத் தட்டி தொல்லை கொடுத்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” எனக் கேட்டார். ’அவன் கையை வெட்ட வேண்டும்’ என்றனர் அமைச்சர்கள்.
உடனே வாளை எடுத்த மன்னர் தன் கையை வெட்டி ’தானே குற்றவாளி’ என்பதை விளக்கினார். அதன்பின் மன்னருக்கு பொன்னால் ஆன கை பொருத்தப்பட்டு ’பொற்கை மாறன்’ என்ற பெயர் பெற்றார். அந்தக் காலத்தில் நீதியை நிலைநாட்டிய விதத்தை பார்த்தீர்களா!
|
|
|
|