|
காசிநாதன் பெரிய கொடையாளியாக இருந்தார். கஷ்டம் என ஒருவர் வந்து கேட்டு விட்டால், அரிசி, பருப்பு என அள்ளிக் கொடுப்பார். மருத்துவ செலவுக்கு பணம் கொடுப்பார். அவரது மனைவி விசாலம், எச்சில் கையால் காக்கையை விரட்டாத கருமி.
ஒரு நாள் ஏழைகள் சிலர் உதவி கேட்டு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கேட்டதைக் கொடுத்தார் காசிநாதன். விசாலத்துக்கு கோபம் வந்தது. “இப்படி வாரி வழங்கினால், நாமும் ஒரு நாள் பிறரிடம் கையேந்தும் நிலை வரும்” என எச்சரித்தாள். “கடவுள் எனக்கு கொடுத்ததில் ஒரு பகுதியை தான் ஏழைகளுக்கு கொடுக்கிறேன். இதிலென்ன தவறு,” என்றார் காசிநாதன். ’பட்டால் தான் புரியும்’ என நினைத்தபடியே விசாலம் மவுனமாகி விட்டாள்.
ஒரு நாள் விசாலத்தின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வந்ததால் இருவரும் புறப்பட்டனர். வண்டி ஓட்டும் பணியாளர் அன்று வரவில்லை என்பதால் நடந்தே சென்றனர். வெயில் சுட்டெரித்தது. “இப்படி என்னை பாடாய்ப்படுத்தி அழைத்துச் செல்கிறீரே! எங்காவது ஒதுங்க நிழல் இருக்கிறதா?” எனக் கேட்டாள் விசாலம்.
“உன் நிழல் முன்னால் விழுகிறதே! அதில் ஒதுங்க கூடாதா” என்று சிரிக்காமல் சொன்னார் காசிநாதன். “அவரவர் நிழலில் ஒதுங்க முடியுமா? என்ன பேசுகிறீர்கள்?” என விசாலம் ஆத்திரப்பட்டாள். ”பாலும், பழமும் சாப்பிட்டு வளர்த்த, உன் உடலின் நிழல் கூட உதவிக்கு வரவில்லை. பெட்டியில் பூட்டி வைத்த பணமா உதவப் போகிறது” என விளக்கம் கொடுத்தார். விசாலமும் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். தர்மம் ஒன்றே உற்ற துணையாக நம்மை பாதுகாக்கும். |
|
|
|