|
திறமை எவ்வளவு தான் ஒருவரிடம் இருந்தாலும் மூன்று எழுத்து நம்மை அழித்து விடும் என்று சொல்லியிருந்தேன். அது தான் ’மதம்’ என்ற தீயசக்தி. அறிவு, அன்பு, கடமை, உண்மை, தெளிவு, துணிவு போன்ற மூன்றெழுத்துக்கள் வாழ்வை வளப்படுத்தும். ஆனால் மதம் என்ற வார்த்தைக்கும் மூன்று எழுத்து தான். இது நிம்மதியை கெடுத்து வெற்றி என்ற மூன்றெழுத்தை நம்மிடமிருந்து பறித்து விடும். மதம் என்ற சொல்லுக்கு கர்வம், ஆணவம் என்பது பொருள். ’அவனுக்கு கர்வம் தலைக்கேறி விட்டது’ என்ற சொல்லக் கேட்டிருக்கிறோம். யானை எவ்வளவு அழகான, பலமான ஒரு படைப்பு. யானை முகம் கொண்ட விநாயகரை முழுமுதற்கடவுளாக வழிபடுகிறோம். கோயில்களில் யானை வரும் போது அந்தக் காட்சியின் அழகே அழகு! ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால்? சற்று யோசியுங்கள்! அதே போன்று என்ன தான் நல்ல பண்புகளும், அறிவும் இருந்தாலும் கர்வம் தலைக்கேறினால் அழிவது நிச்சயம்.
நாம் படிக்கிறோம். அறிவு பெறுகிறோம். வேலையில் சேர்கிறோம். பலரும் போற்றுகிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கிறது. இந்த நிலையில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வெற்றி நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அந்த வெற்றி ஒருவருக்கு கர்வம், தலைக்கனத்தை கொடுக்கக் கூடாது. நான் படித்தவன் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் ’நான் தான் மெத்தப் படித்தவன்; எனக்கே எல்லாம் தெரியும்’ என நினைக்கும் போது தான் பிரச்னை வருகிறது. பர்த்ருஹரி இயற்றிய சுபாஷிதம் என்ற ஒரு நீதி ஸ்லோகம் நினைவுக்கு வருகிறது. ’வித்யா ததாதி வினயம். வினயாத்யாதி பாத்ரதாத் பாத்ரத்வாத் தனம் ஆப்நோதி தனாத் தர்மம் சமுத்சுகம்’ அதாவது கல்வி அடக்கத்தை தரும். அடக்கத்தால் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல பெயரால் நல்ல வேலை கிடைக்கும். அந்த வேலையின் மூலமாக நல்ல செல்வம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் செல்வத்தால் தான் நல்ல சுகம் கிடைக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
சற்றே யோசியுங்கள். ’எனக்கு தெரியும்’ என்ற மனநிலைக்கும் ’எனக்குத் தான் தெரியும்’ என்ற மனநிலைக்கும் எவ்வளவு வித்தியாசம்? எனக்குத் தெரியும் என்று நினைக்கும் போது நாம் நியாயமாக பெருமைப் படுகிறறோம். ஆனால் எனக்குத் தான் தெரியும் என நினைக்கும்போது மற்றவர்கள் சொல்லும் வேறுபட்ட கருத்துக்களை மனம் ஏற்காது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என படித்திருக்கிறோம். இந்த அற்புதமான வார்த்தைகளை நாம் ஏற்றால் அடக்கம் என்னும் பண்பு தானாக வரும். ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஜப்பானில் ஒரு பெரிய ஜென் துறவி (ஙூஞுண Mச்ண்tஞுணூ) இருந்தார். அவர் மெத்த படித்தவர். பலரும் அவரை அணுகி சந்தேகத்தைக் கேட்டு தெளிவு பெற்றனர். தனக்கே எல்லாம் தெரியும் என்றிருந்த ’மேதாவி’ ஒருவர் துறவிக்கு தன்னைவிட என்ன தெரிந்திருக்கப் போகிறது என நினைத்தார். இருந்தாலும் அனைவரும் போகிறார்களே என்று தானும் அவரைச் சந்தித்தார்.
ஜப்பானில் ’டீ செரிமனி’ (கூஞுச் இஞுணூஞுட்ணிணதூ) என்ற சம்பிரதாயம் உண்டு. அதாவது வீட்டிற்கு வந்த விருந்தினருக்காக குடும்பத்தலைவன் தேனீர் கொடுப்பது வழக்கம். இதை அக்கறையாகச் செய்வார்கள் ஜப்பானியர்கள். நம் மேதாவி செல்லும்போதும், அவரை உட்கார வைத்து கோப்பை ஒன்றைக் கொடுத்தார் ஜென் துறவி. பிறகு குடுவையிலிருந்து தேனீரை ஊற்றினார். கோப்பை நிறைந்து வழியத் தொடங்கியது. ஆனாலும் தேனீரை ஊற்றிக் கொண்டே இருந்தார். ”துறவியே! என்னுடைய கோப்பை நிறைந்து வழிகிறது; ஊற்றுவதை நிறுத்துங்கள்’ என்று அலறினார். துறவியோ புன்முறுவலுடன், ”எப்படி இந்த கோப்பை நிரம்பியிருக்கும்போது அது மேலும் தேனீரை ஏற்றுக் கொள்ளாதோ, அதே போலவே எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையுடன் இருந்தால் எந்த ஒரு விஷயமும் மனதில் பதியாது. எனவே தேனீர் கோப்பையை காலி செய்வது போல உங்களுக்குள் இருக்கும் கருத்துக்களைச் சற்றே ஒதுக்கி விட்டு திறந்த மனதுடன் நான் சொல்வதைக் கேளுங்கள். அப்போது தான் தெளிவு பிறக்கும்” என்றார்.
நான் தான் பலசாலி, நான் தான் அறிவாளி என நாம் எப்போது நினைக்கிறோமோ, அப்போது மதம் பிடித்த யானை போல நடப்போம். கர்வம் கண்ணை மறைக்கும். என்ன செய்கிறோம் என்ற நினைவின்றி தவறுகளைச் செய்வோம். மற்றவர்கள் நம் தவறைச் சுட்டிக் காட்டினாலும் அதை ஏற்கும் மனநிலையில் இருக்க மாட்டோம். மற்றவர்களின் நியாயமான கருத்துக்களை நிராகரிக்கும் போது அவர்கள் நமக்கேன் வம்பு என நம்மை விட்டு விலகுவர்.
’இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’
என்னும் குறள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதாவது தவறு செய்யும் போது நல்ல புத்தியை எடுத்துச் சொல்லும் நல்ல அமைச்சர்கள் இல்லாத மன்னன் எதிரிகள் இல்லாவிட்டாலும் அழிவான் என்பது இக்குறளின் பொருள்.
பத்மாசுரன் எப்படி அழிந்தான் தெரியுமா? பத்மாசுரன் பெரிய சிவபக்தன். தவம் செய்து சிவனிடமிருந்து வரம் பெற்றான். தன்னுடைய கையால் யாருடைய தலையைத் தொட்டாலும் அவர்கள் எரிந்து சாம்பலாவர் என்பதே வரம். பத்மாசுரனின் தவத்தால் மகிழ்ந்த சிவனும் வரம் அளிக்கிறார். அவ்வளவு தான்! இனி யாரும் தன்னை அழிக்க முடியாது என்று கர்வம் கொண்ட பத்மாசுரன் தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி வந்தான். விஷ்ணுவை அணுகி தங்களைக் காப்பாற்ற முறையிட்டனர். மோகினி என்ற அழகான பெண் வடிவெடுத்த விஷ்ணு அசுரனின் எதிரில் வந்தார். மோகினியைப் பார்த்த பத்மாசுரன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். மோகினியோ தனக்குச் சமமாக நாட்டியம் ஆடினால் தான் மணக்கலாம் என்று தெரிவித்தாள். பத்மாசுரனும் சம்மதிக்க மோகினியின் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து ஆடினான். அதில் மோகினி ஆட்டத்தின் நடுவில், தன்னுடைய கையைத் தன் தலை மீது வைக்க, பத்மாசுரனும் கையைத் தன் தலை மீது வைத்தான். அவ்வளவு தான், எரிந்து அழிந்தான்.
இப்படித் தான் நாம் கூட. கர்வம் தலைக்கேறினால் பின் விளைவு பற்றி யோசிக்காமல் மனதுக்குப் பட்டதைச் செய்து விட்டு பின் வருந்துகிறோம். உங்களுக்கான மனப்பயிற்சி இதோ... ’என்னுடைய துறையில் எனக்குள்ள அறிவை விட, வேறு யாருக்காவது அதிக அறிவு உள்ளதா? அவர்களை எப்போது சந்திப்பேன்? தெரியாத விஷயங்களை எப்போது கற்பேன்?’ இதற்கான பதில்களை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எழுதுங்கள். அப்போது புரியும் ’கற்றது கைமண் அளவு’ என்ற உண்மை. - திருவள்ளூர் என்.சி. |
|
|
|