Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரதா.. வரதா ..
 
பக்தி கதைகள்
வரதா.. வரதா ..

இந்த பூஉலகில் மோட்சம் தரவல்ல புனித க்ஷேத்திரங்கள் ஏழு! ’அயோத்தி, மதுரா, ஹரித்வார், உஜ்ஜயினி, காசி, காஞ்சி, துவாரகை’  இந்த ஏழில் காஞ்சி தென்புலம் சார்ந்தது மட்டுமல்ல. புராண, வரலாற்று, பூகோள சிறப்புகளுக்கு களமாக விளங்குகிறது காஞ்சி என்னும் காஞ்சிபுரம். இன்றுள்ள பூகோள அமைப்பில் ஆன்மிகத் தலமாகவும்,  குறுநகரமாகவும் காஞ்சிபுரம் கருதப்பட்ட போதிலும் ’நகரம் என்றால் அது காஞ்சி’ என்று வரலாற்று ஆய்வாளர்களாலும், ஞானியர், துாதுவர் போன்றவர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. ஆதிசங்கரரின் ஷண்மத ஸ்தாபனம் என்னும் ஆறு சமயக் கொள்கைக்கு எடுத்துக்காட்டாக ’வைணவம், சைவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம், சவுரம்’ என்னும் ஆறுவகைக்கும் கோயில்கள் இங்கு உண்டு. சமணர், பவுத்தர்களும் கோயில்கள் கட்டினர்.  இவைகளுக்கெல்லாம் உச்சமாய் ஆன்மிக எழுச்சியாய் இன்று நிகழ்ந்து கொண்டிருப்பதே அத்திவரதரின் நித்ய தரிசனம்! ’அத்திகிரி மகாத்மியம்’ என்னும் இந்த அத்திவர மகாத்மியத்தை ஆதாரங்களோடும், பக்தியோடும் காண விழைவதே இந்த ’வரதா வரம்தா’ தொடரின் நோக்கம்.

தமிழகம் அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகவும் தொண்டை மண்டலத்தில் பல்லவ தேசமாயும் திகழ்ந்தது. பல்லவ நாட்டின் தலைநகர் காஞ்சி. அதற்கு  எவ்வளவோ பெயர்கள்!’விஷ்ணுபுரம், சிவபுரம், பிரம்மபுரம், காமபீடம், தபோவனம், ஜகச்சாரம், சகலசித்தி, கன்னிக்காப்பு, தொண்டீரபுரம், தண்டகபுரம்’ என பல பெயர்கள் இருந்தன.
வைணவத் தலங்களில் பெரிய கோவிலாம் ஸ்ரீரங்கத்துக்குப் பின் உள்ள கோவிலாகவும், காஞ்சியே கருதப்படுகிறது. இதனால் ’அத்திகிரி, அட்டபுயம், திருவெஃகா, ஊரகம், நீரகம், திருத்தண்கா, திருவேளுக்கை, பாடகம், நிலாத்திங்கள் துண்டம், காரகம், கார்வனம், கள்வனூர், பரமேச விண்ணகரம், பவள வண்ணம் என பல பெயர்கள் இருந்தாலும் ’ஹரி ேக்ஷத்திரம், புண்ணியகோடி க்ஷேத்திரம், வைகுண்ட க்ஷேத்திரம், ஹஸ்தி சைல க்ஷேத்திரம், திரிஸ்ரோத க்ஷேத்திரம்’ என்ற பெயர்களால் வைணவர்கள் அழைக்கின்றனர்.  

தற்போது ’காஞ்சி’ என அழைக்கப்படுகிறது. காஞ்சம், கஞ்சம் என்பது தங்கத்தை குறிக்கும். உலோகங்களில் தங்கம் மட்டும் மாறாத் தன்மை உடையது. பஞ்ச பூதங்களால் ஏதும் செய்ய இயலாத அழிவற்ற தன்மை உடையதாய் இது விளங்குகிறது. தங்கம் முதல் சகல செல்வங்களுக்கும் உரியவள் மகாலட்சுமி. இவள் விஷ்ணுவின் மார்பிலேயே தங்கி  இருப்பவள். அதே சமயம் பக்தர்களுக்கு எப்படி விஷ்ணுவின் காலடியில் கிடந்து  சேவை சாதிக்கிறாளோ, அப்படி அவர்கள் காலடியில் செல்வம் கிடக்கச் செய்பவளாகவும் இருக்கிறாள். அந்த வகையில் காஞ்சிபுரம் மகாலட்சுமிக்கு உரியதும் கூட...  இங்கு வாழ்வோர் இவள் அருளுக்கு எளிதில் பாத்திரமாவர். காஞ்சிக்கு இன்னொரு பெயர் அத்திகிரி. இந்த பெயர் வரக் காரணமாகவும், இம்மண்ணுக்கு மகாவிஷ்ணு வரங்கள் தரும் வரதராஜாவாக வரக் காரணமாகவும் இருந்தவளும் இவளே! அதை சொல்வதே ’அத்திகிரி மகாத்மியம்’ என்னும் அத்திவரத புராணம்! ற்கடலில் ஒருநாள் தாமசம் என்னும் உறக்கம் நீங்கிய நிலையில் மகாவிஷ்ணுவாகிய அந்த மாலவன் இருந்த தருணம்!

அவன் மார்பே வாசஸ்தலமாய் இருப்பினும், காலடி  கருணை மிகுந்தது என்பதால் அக்காலத்தில் அமர்ந்திருந்த லட்சுமி தேவி எம்பெருமானோடு உரையாடலானாள்.
”பிரபுவே... என்னுள் சில கேள்விகள்... கேட்கலாமா?” ”தாராளமாக கேள் தேவி..” ” பதினான்கு லோகங்களோடு கோள்களுடன் சகலத்தையும் படைத்து, அவைகளுக்கென மாறாத இயக்க விசையையும் அமைத்து உறக்கத்தில் ஆழ்ந்த நிலையிலேயே இயக்கிடும் வல்லமையை கற்பனை செய்து கூட  பார்க்க இயலவில்லை” ”எதற்கு இந்த பீடிகையும் ஆயாசமும்”  ”காரணம் இருக்கிறது”  ” முதலில் அதைச் சொல்” ”ஈரேழு புவனங்களில் பூஉலகு தான் தங்களுக்கு மிக விருப்பமானதோ?” ”எதை வைத்து கேள்வி உன்னுள் எழும்பியுள்ளது?” ”நிஜமாக தங்களுக்குத் தெரியாதா...  நான் உங்கள் மார்போடு அகலாது கிடப்பவள்... நான் ஒன்றை நினைக்கும் முன்பே தங்களுக்கு தெரிந்து விடுமே..?”

”இது உனக்கும் பொருந்துமே தேவி...நீயும் நான் நினைப்பதை அறிந்து விடலாமே...?”

”பொருந்தாது... என்னை நீங்கள் அறியலாம். ஆனால் உங்களை தவிர அன்றி வேறு யாராலும் உங்களை அறியவே முடியாது”

”சரி.. விஷயத்திற்கு வா.. பூமியின் மீது எனக்கு அதிக விருப்பமா என்பது தானே உன் கேள்வி?

”ஆம்..”

”நான் விருப்பம், விருப்பமின்மை என்னும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன். இது தெரிந்திருந்தும் நீ கேட்கிறாய் என்றால் அதனால் வரும் காலகதியில் திருவிளையாடல்கள் நடக்க இருக்கின்றன என்பதே உட்பொருள்.”

” புரிகிறது. இப்படி சொல்லும் சாக்கில் திருவிளையாட்டு புரிய சித்தமாகி விட்டதை புரிந்து கொண்டேன். எனக்கு முதலில் பதில் சொல்லுங்கள்..”

”சொல்கிறேன். பூவுலகை நான் மட்டுமல்ல... அவ்வுலகில் ஜனனம் எடுத்த பலரும் மிக விரும்புகின்றனர். எனது ராம அவதாரத்தின் முடிவில் நான் அனுமனையும், ஜாம்பவானையும் இந்த வைகுண்டத்திற்கு அழைத்தேன். ஆனால் இருவருமே மறுத்து விட்டனர். காரணம் கேட்டேன். ஐயனே!   இன்பம் மட்டுமே தருவது சொர்க்கம், துன்பம் மட்டுமே தருவது  நரகம்

– உமது வைகுண்டமோ பிறவியே இல்லாத முக்தி பேற்றை தந்து உம்மோடு கலக்கச் செய்வது... பூஉலகம் ஒன்று தான் இன்பம், துன்பம்  கலப்பாக இருப்பது. இங்கே பக்தி புரிந்தாலே போதும் உங்கள் பேரருளுக்கு பாத்திரமாகி அர்த்தம் மிகுந்த வாழ்வு வாழ முடியும். இதை விடவா முக்தியும் மோட்சமும் பெரியது...? எங்களுக்கு பெரும் துன்பம் தரும் நரகமும் வேண்டாம். இன்பம் தரும் சொர்க்கமும் வேண்டாம்.  உங்களையே மறக்கச் செய்து உங்களுடன் கலக்கச் செய்திடும் வைகுண்ட முக்தியும் வேண்டாம்.

சர்வ காலமும் ’ராம் ராம் ராம்’ என சொல்லிக் கொண்டும், அப்படி சொல்வோருக்கு உதவிக் கொண்டும் வாழ்வதே வாழ்வு. எனவே எங்களுக்கு அதை அருளிடுக என இருவரும் கேட்டுப் பெற்றனர். அதனால் சொல்கிறேன் அப்படிப்பட்ட பக்த உள்ளங்கள் வாழ்ந்திடும் பூவுலகை நானும் விரும்புகிறேன் என்றார். லட்சுமியும் புன்னகைத்தபடி, ”அதனால் தான் உங்களின் உருவத்தை அர்ச்சாரூபமாக (சிலை வடிவில்) உள்ள பிரணவாகார ஸ்ரீரங்க விமானத்தை நீங்கள் பிரம்மனுக்கு அளிக்க, அவன் அதை சூரியனின் பேரனான இக்ஷவாகுவுக்கு அளித்திட பின், அது தங்களின் ராம அவதாரத்தில் தங்களாலேயே பூஜிக்கப்பட்டு பின் விபீஷணன் மூலமாய் ஸ்ரீரங்கத்தை அடைந்து அது பூலோக வைகுண்டம் என்றானதோ?”

”சரியாகச் சொன்னாய்... எனது பூலோக சான்னித்யம் மையம் கொண்டிருப்பது அங்கே தான்..”

”அத்தனை பெரிய பூஉலகுக்கு அந்த ஸ்ரீரங்கத் தலம் மட்டும் போதுமா?”

லட்சுமி என்ன சொல்ல வருகிறாள் என்பது பெருமாளுக்கு புரிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar