|
காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் மடத்தில் ஒருநாள், மகான் ராமானுஜர் தன் சீடர்களுக்கு பாசுரங்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் ஒரு பாடலில் ’சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து’ என்னும் தொடர் இடம் பெற்றிருந்தது. ’பூக்கள் உதிர்ந்து கிடக்கும் திருப்பதி மலை’ என்பது இதன் பொருள். இதைச் சொல்லும் போதே ராமானுஜருக்கு கண்ணீர் பெருகியது. பதறிய சீடர்கள் காரணம் கேட்ட போது “திருப்பதியில் பூக்கும் மலர்கள் பெருமாளின் திருவடியைச் சேராமல் கீழே பயனற்று கிடக்கிறதே” என விளக்கம் அளித்தார். சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து,”குருநாதா... தாங்கள் உத்தரவிட்டால் இப்போதே திருமலைக்குச் சென்று தொண்டு செய்கிறேன்” என்றார்.
’நீயே ஆண் பிள்ளை!” என்று சொல்லி அணைத்தார் ராமானுஜர். அதன் பின் ’அனந்தாண் பிள்ளை’ என பெயர் பெற்றார். திருப்பதி மலையில் பெருமாளுக்கு சேவை செய்வதை குறிக்கோளாகக் கொண்டார். நந்தவனம் அமைத்து துளசி, மல்லிகை என பூச்செடிகளை வளர்த்தார். தினமும் மாலை தொடுத்து பெருமாளுக்குச் சாத்துவார். கிணறு ஒன்றை வெட்டி, அதற்கு குருநாதரின் பெயரையே சூட்டினார்.
ஒருநாள் திருப்பதி ஏழுமலையான் சந்திக்க வருமாறு ஆள் அனுப்பிய போது, “சற்று பொறுங்கள். பூப்பறித்துக் கொண்டிருப்பதால் வர இயலாது” என்றார். காரணம் கேட்ட போது, ”பெருமாள் உயர்ந்தவர் என்றாலும், குருநாதரின் கட்டளை அதை விட முக்கியம்” என்றார். அவரது குருபக்தியை நிரூபிக்க இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார் ஏழுமலையான்.
ஒருநாள் நந்தவனத்தில் பாம்பு ஒன்று அனந்தனைத் தீண்டியது. ”பாம்பின் விஷம் இறங்க பச்சிலை மருந்து கட்ட வேண்டுமே” என உடனிருந்தவர்கள் பதறினர். ஆனால் அவரோ, ”பாம்பு விஷம் அற்றதாக இருந்தால் திருமலை ஏரியில் நீராடி ஏழுமலையானை தரிசிப்பேன். ஒரு வேளை விஷப் பாம்பாக இருந்தால் வைகுண்டத்தில் விரஜா நதியில் நீராடி, அங்கு பெருமாளை தரிசிப்பேன்” என்றார்.
என்ன ஆச்சர்யம்! பாம்பால் பாதிப்பு ஏதுமில்லை.
பூந்தோட்டத்தில் ஏழுமலையானும், தாயாரும் தினமும் உலவி வந்தனர். ஒரு நாள் அனந்தன் அதை பார்த்து விட்டார். ஆனால் பார்ப்பதற்கு சாதாரண மனிதர்களாக தென்பட்டதால் உண்மை புரியவில்லை. அவர்களால் தோட்டத்தின் புனிதம் கெடுவதாக கருதிய அனந்தன், தாயாரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தார். ஏழுமலையான் மட்டும் தப்பினார். இந்நிலையில் பூஜைக்கு நேரமாகவே, மாலையுடன் சன்னதிக்கு ஓடினார். அங்கு தாயாரைக் காணவில்லை. நந்தவனத்தில் உலவிய தையும், கைதியாக பிடிபட்டவள் அலர்மேல் மங்கை தாயார் என்றும் தெரிவித்தார் ஏழுமலையான். இதைக் கேட்டு வருந்தினார் அனந்தாழ்வார். திருக்கல்யாணம் நடத்தி இருவரையும் சேர்த்து வைத்து, ’ஏழுமலையானின் மாமனார்’ என்னும் அந்தஸ்தை பெற்றார்.
மலையேறுபவர்களின் தாகம் தீர்க்க குளம் வெட்டத் தீர்மானித்தார். கர்ப்பிணியாக இருந்த அனந்தாழ்வாரின் மனைவியும், கணவர் மண்ணை வெட்டிக் கொடுக்க, அதை சற்று தூரத்தில் கொட்டினாள். கர்ப்பிணி பெண்ணைக் கண்ட சிறுவன் ஒருவன், தன்னையும் சேர்க்குமாறு வேண்டினான். மற்றவர் உதவி தேவையில்லை என மறுத்தார் அனந்தாழ்வார்.
“மண் சுமந்த புண்ணியம் எனக்கு வேண்டாம். உங்களின் மனைவியை சேரட்டும்” என்றான் சிறுவன். அதற்கு அனந்தாழ்வார் சம்மதிக்கவில்லை.
”தாயே! உங்களின் கணவருக்குத் தெரியாமல் உதவுகிறேன். பாதி தூரம் நீங்கள் மண்ணை சுமந்து வாருங்கள். அதன் பின் நான் சுமக்கிறேன்” என்றான். கர்ப்பிணியும் ஏற்றாள். ஆனால் சிறிது நேரத்தில் சிறுவனை நோட்டமிட்ட அனந்தாழ்வார், உண்மையை அறிந்தார். கையில் இருந்த கடப்பாறையை சிறுவன் மீது எறிய, அவனது முகவாயில் பட்டு ரத்தம் கொட்டியது. ஆனால் சிறுவன் ஓடி மறைந்தான். மறுநாள் ஏழுமலையானை பூஜிக்க வந்த அர்ச்சகர்கள், சுவாமியின் முகத்தில் ரத்தம் வழியக் கண்டனர்.
” யாரும் பதற வேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள் உண்மை விளங்கும்” என அசரீரி ஒலித்தது. அவர்களும் அழைத்து வந்தனர். அப்போது சிறுவன் வடிவில் காட்சியளித்தார் ஏழுமலையான்.
”சுவாமி! என்னை மன்னியுங்கள். பிறரிடம் உதவி இல்லாமல் குளம் வெட்டும் பணி செய்ய நினைத்தேன். அதனால் நடந்த விபரீதம் இது” என அழுதார். இதன்பின் அர்ச்சகர்கள் பச்சைக் கற்பூரத்தை முகவாயில் வைத்து அழுத்த ரத்தம் நின்றது.
|
|
|
|