|
திருமாலுடன் உரையாடும் போது ஸ்ரீரங்கம் பற்றி குறிப்பிட்ட லட்சுமி, பூவுலகிற்கு இந்த தலம் (ஸ்ரீரங்கம்) மட்டும் போதுமா எனக் கேட்டாள். திருமாலின் அழகுமுகத்தில் ஒரு புன்னகை. அந்த புன்னகைக்கு பொருள் தெரிந்திருந்தும் தெரியாதவள் போல பேசலானாள். ”பிரபோ... என் கேள்விக்கு சிரித்தால் ஆயிற்றா? மானுடம் உய்வு பெற ஸ்ரீரங்கம் போல பல அரங்கங்கள் இருந்தால் அல்லவா பூவுலகில் பக்தி தழைக்கும். அமைதி, ஆரோக்கியம் என எல்லா செல்வங்களையும் பெற்று வாழ முடியும்?” ”இந்த கேள்வியை நீ தெரிந்து தான் கேட்கின்றாயா... இல்லை பூவுலகில் மனிதர் பக்திபுரிய உகந்த தலங்களை என் வாயாலேயே அறிய விரும்புகிறாயா?” ”அப்படித் தான் வைத்துக் கொள்ளுங்களேன்...” ”தலம், தீர்த்தம், விருட்சம் என்னும் மூன்றாலும், தெய்வதம் விளங்கப் பெற்றிடும் தலமான காஞ்சியை நீ எங்ஙனம் மறந்தாய்? கோயில் என்றால் ஸ்ரீரங்கம், மலை என்றால் திருமலை. அது போல தலம் என்றால் காஞ்சியல்லவா? அங்கே நான் வரங்களை வாரி வழங்குகின்ற வரதராஜனாய் திகழ்வதை நீ அறியாதவளா?”
”அறிவேன்...காஞ்சி மண்டல எல்லைகளை எண்ணும் போதே பிரமிப்பு உண்டாகுமே? ஐம்பது கோடி யோசனை விசாலம் உள்ள பூமி மண்டலத்தில் ஸ்ரீசக்தி பீடங்களில் அரிதிலும் அரிதான மூன்று பீடங்களில் காமராஜ பீடம் என்னும் சக்திபீடம் அமையப் பெற்ற தலம் அல்லவா காஞ்சி! அலையடிக்கும் சமுத்திரமே கிழக்கு எல்லை, தென்பெண்ணையாறே தெற்கு எல்லை, கல்லாறே மேற்கு எல்லை, புஷ்கரணி என்னும் திருக்குளமே வடக்கு எல்லை... நான்கு எல்லையிலும் தீர்த்தங்கள். இதில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கிடும் அருட்தன்மை என காஞ்சியம்பதி திகழ்வதால் தான் இத்தலத்தில் வரதராஜனாய் கோயில் கொண்டீரா?” ”அருட்தன்மை கொண்ட தீர்த்தங்கள் என சொன்னால் போதுமா? இந்த தீர்த்தங்களின் சிறப்பை நீ கூறவில்லையே...” ”எனக்கு தெரிந்ததை, நான் உணர்ந்ததை அதாவது உங்கள் உள்ளத்துக்குள் இருப்பதை கூறட்டுமா?”
”கூறு... காஞ்சியின் பெருமையை காரணம் இல்லாமல் நீ பேசப் போவதில்லை என்பதையும் அறிவேன். முதலில் தீர்த்தங்களின் அருள் சிறப்பைக் கூறு...” ”கூறுகிறேன். வரதராஜராய் நீங்கள் எழுந்தருளியிருக்கும் புண்ணிய கோடி விமானத்தின் ஈசான்யத்தில் இருக்கும் அனந்த சரஸ் என்னும் திருக்குளத்தில் சனிக்கிழமையன்று நீராடுபவர்கள் காவிரியில் நீராடிய பயனையும், ஆதிசேஷனின் பரிவையும் பெறுவர். நாக தோஷங்கள் நீங்கப் பெறுவர். சரி தானே?” ”வாயு திக்கில் இருக்கும் பக்தோதய சரஸ் அளிக்கும் பயன் பற்றியும் சொல்..” ”இந்த குளத்தில் ஏகாதசி திதியில் நீராடுபவர்கள் திருப்பாற்கடலில் நீராடிய புண்ணிய பயனைப் பெறுவர்... ஆம் தானே?” ”வடக்கில் இருக்கும் இந்திர தீர்த்தம்...?” ”இந்திர தீர்த்தத்தில் புதன் கிழமை நீராடுவோர் யமுனை நதியில் நீராடிய பயனோடு இந்திரனுடைய கருணைக்கும் ஆளாவர்!’ ”மெத்தச் சரி.. அக்னி திக்கில் உள்ள பாஞ்சாலிகை குளத்தில் நீராடுபவர்கள் பற்றியும் கூறி விடு” ”கேட்டை, திருவோண நட்சத்திர நாட்களில் பாஞ்சாலிகையில் நீராடுவோர் விரஜை நதியில் நீராடிய பயனோடு, ஐஸ்வர்யங்களையும் அடைவர் என்பதல்லவா அதன் சிறப்பு?” ”அப்படியானால் இத்தலம் க்ஷேத்திரங்களில் தலையானது என்பதில் சந்தேகம் இல்லை தானே?” ”உண்மை தான்... ஆயினும் அனுபவ பூர்வமாக உணர்வதும், உணர்த்துவதும் தனிச் சிறப்பு தானே?”
”அப்படி ஒரு அனுபவத்திற்கு நாமே ஆட்படுவோமா?” ”தங்களின் சித்தம் என் பாக்கியம் அல்லவா?” ”தேவி... இந்த காஞ்சியம்பதியில் வரும் நாட்களில் பல விசேஷங்களும், வினோதங்களும் அரங்கேற உள்ளன. பூபாரத்தை பூமிதேவியாக இருந்து நீ தாங்கி நிற்கிறாய். யுகபாரமோ என் மேல்... அதிலும் இந்த கலியுகத்தில் அந்த பாரம் பஞ்ச பூதங்களின் போக்கிலேயே மாற்றத்தை ஏற்படுத்தி விடும். அவ்வாறு ஆகாமல் கலிபாரத்தை சமன் செய்யும் செயலாக நாளொரு விசேஷ வடிவும், போக்கும் கொள்ளப் போகிறேன். அதற்கான தொடக்கமே இன்று நாம் காஞ்சியம்பதி பற்றி பேசியது.” ”கலியுகத்தின் பிடியில் பஞ்ச பூதங்களின் போக்கில் மாற்றம் நேருமோ? கலிக்கு அப்படி ஒரு சக்தியா?” ”ஆம்... கலிபுருஷனின் தன்மை அத்தகையது! பேராசை, பொறாமை, கொலை, களவு, சூது, வாது, பெண் மயக்கம் என அவ்வளவும் கலியின் வெளிப்பாடுகள். இதன் நடுவில் மானுடம் கடைத்தேறவும், பக்தி நெறியைக் காக்கவும் உரியதைச் செய்ய வேண்டும் அல்லவா?” ”ஆம்.. முன்பொரு முறை நீ நிகழ்த்திய திருவிளையாடலால் தானே இந்த அத்திகிரியே உருவானது. அதை சற்று எண்ணிப் பார்” என எம்பெருமான் கூறிட மகாலட்சுமியும் அந்த எண்ணங்களுக்கு ஆட்படத் தொடங்கினாள். அத்திகிரி என்னும் வரதன் கோயில் தோன்றிய விதம் அவளுக்குள் எழும்பலாயிற்று. எம்பெருமான் வைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் நிலையில் முகத்தில் தீவிர சிந்தனை. அதைக் கண்ணுற்ற மகாலட்சுமியும் வினவலானாள். ”பெருமானே எது குறித்து இத்தனை விசாரம்?” ”பூவுலகு குறித்தே சிந்திக்கிறேன். யுகங்கள் விரிந்து உயிர்க்கூட்டம் பல்கிப் பெருகும் தருணத்தில் பக்திநெறி தழைத்திட உரியதைச் செய்ய வேண்டுமல்லவா?” ”அதில் என் பங்கு என்னவென்று கூறுவீர்களா?”
முப்பெரும் தேவியர்களில் நீயே முதலானவள் என சரஸ்வதியிடம் உன் நாடகத்தை தொடங்கு...மற்றது தானாய் நிகழும். லட்சுமி தேவியை வேடிக்கையாகத் தூண்டினான் பரந்தாமன். சரஸ்வதிபுத்ரன் எனப்படும் நாரதன் தேடி வரவும் மகாலட்சுமியும் நாடகத்தை தொடங்கினாள். ”வா நாரதா... சரியான சமயத்தில் தான் வந்திருக்கிறாய்..” என ஆரம்பித்தாள். ”தாயே! பீடிகை பலமாக இருக்கிறதே... வைகுண்டத்தில் கூடவா சரியான சமயம், சரியில்லாத சமயம்?...” என நாரதனும் அந்த நாடகத்தில் அறியாது பங்கு ள்ளலானான். ”அது சரி.. உன் அன்னை வாணி எப்படி இருக்கிறாள்?” ”அவர்களுக்கு என்ன.. தந்தை பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலுக்கு உற்ற துணையாகவும், உலக மாந்தரின் கல்வி, கேள்விகளுக்கு அருட்கொடையாகவும் சதா காரியம் செய்து கொண்டே இருக்கிறார்..”
”என்ன இருந்து என்ன பயன்.. உலக மாந்தருக்கு பேரின்பத்தை என் செல்வம் அல்லவா தருகிறது?” – லட்சுமியின் பேச்சு நாரதனுக்கு புரிய வேண்டியதை புரிய வைத்து விட்டது. ”தாயே... நீங்களா இப்படி பேசுவது/ இது என்ன நாடகம்? – என்றான். ”நாடகம் தான்... வாணியிடம் சென்று என் கருத்தைக் கூறு. கலகம் புரிவதில் கைதேர்ந்த உன்னால் தேவலோகமே திகைக்க வேண்டும். குறிப்பாக தேவர்கள் தலைவன் இந்திரன் முதல் உன் தந்தை பிரம்ம தேவர் வரை எல்லோருக்குமே எம்பெருமானின் ஆட்டுவிப்பில் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன. இதில் தொடக்கம் மட்டுமே நீ...!” என்றாள் லட்சுமி. ”கடமைகள் என தாங்கள் கூறுவதைப் பார்த்தால் எம்பெருமான் அடுத்து ஏதும் அவதாரம் எடுக்கத் திட்டமா?” என ஆவலாகக் கேட்டான் நாரதன். ”அவதாரமில்லை. அதற்கு இணையான ஒரு செயல்பாடு...” ”அது என்ன? புரியும் படி கூறுங்களேன்” ”நாராயணன் செயல் என்பதே நடக்க நடக்கத் தானே தெரியும். முன்னதாக தெரிந்து கொள்ளும் சக்தி எனக்குமில்லை, உனக்குமில்லை, அது நமக்கு தேவையும் இல்லை. நாம் கடமையை ஆற்றுவோம். மற்றவை அந்த நாராயணராகிய வரதராஜரின் பாடு...” ”வரதராஜர் பாடு என்றால் காஞ்சியம்பதி தானே தலம்.. அந்த புண்ணிய க்ஷேத்திரத்திலா?” ”ஆம்...!” என அழகாய் தலையை அசைத்து அணுக்கமாய் சிரித்தாள் திருமகளான மகாலட்சுமி!
|
|
|
|