Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீவைகுண்டம்!
 
பக்தி கதைகள்
ஸ்ரீவைகுண்டம்!

வைகுண்ட வாசலில் பிளிறியபடி நின்ற இந்திரனாகிய யானையைப் பார்த்து துவார பாலகர்களான ஜெய, விஜயர்கள் திடுக்கிட்டனர்.

பள்ளி கொண்டிருக்கும் மாலவனின் காதில் மட்டுமல்ல மகாலட்சுமியின் காதிலும் சப்தம் விழுந்தது.

”தேவி உன் திருவிளையாட்டின் எதிரொலி என நினைக்கிறேன்” என்றான் மாலவன்.

”வாணியின் கோபமும், வேகமும் எனக்கு வியப்பைத் தருகிறது” என்றபடி யானை முன் வந்து நின்றாள் மகாலட்சுமி.

யானையின் விழிகளில் கண்ணீர்.  

”இந்திரா கலங்காதே...பூவுலக மாந்தர்களின் நலனுக்கான இந்த விளையாட்டில் உனக்கு பங்கு கிடைத்ததற்காக  சந்தோஷப்படு... உன் சாபம் தீர நான் வழிகாட்டுகிறேன். பூலோகத்தில் சிம்மாசலம் என்ற மலை உள்ளது. அதன் தொடர்ச்சியில் தண்டகாரண்யம் வனம் உள்ளது. அங்கு விஷ்ணு பக்தனான பிரகலாதன், நரசிம்மரை தியானித்தபடி தங்கியுள்ளான்.  

அவன் கருவிலேயே ஹரி பக்திக்கு ஆளாகி இலக்கணம் படைத்தவன். அவனைச் சந்தித்து 32 எழுத்துக்கள் கொண்ட நரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்று, அதை இடையறாது தியானி! இதனால்  உன் தோஷம் நீங்கும். அப்படி நீங்கினால் உன்னால் ஹரி க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தை அடைய முடியும். அங்கே சென்ற நிலையில் நீ நரசிம்மரை தியானிப்பாய். அதன் பின் உனக்கு  விமோசனம் கிடைக்கும். அழியாப் புகழ் பெறத் தக்க நிகழ்ச்சி அங்கு அரங்கேறும்” என மகாலட்சுமி இந்திரனுக்கு வழிகாட்டினாள். இந்திரனும்  தண்டகாரண்யத்தில் பிரகலாதனைச் சந்தித்து  ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசிக்க வேண்டினான். அதை தியானித்தபடி காஞ்சிபுரத்தை அடைந்தது யானை! இம்மண்ணை மிதித்ததும் உடம்பெங்கும்  பரவசம் ஏற்பட்டது. இத்துடன் மனதை அடக்கி தியானிப்பதும் சுலபமானது. அதன் விளைவாக எழுந்தருளிய நரசிம்மமூர்த்தி,  இந்திர யானையை தன் கைகளால் பிளந்து வீச, பிளவுபட்ட உடல் துண்டு இரண்டும் கூம்பு வடிவில் ஒன்றுபட்டு குன்று உருவானது.
அக்குன்றைச் சுற்றிலும் அத்திமரங்கள் இருந்த நிலையில், குன்றின் மீதும் வளரத் தொடங்கின. இதனால் அந்த குன்று ’அத்தி கிரி’ என்றானது.

அத்திகிரியில் நரசிம்மரும் மலைக் குகையில் இருக்க, இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த திருமால் கிரியின் மீது தேவராஜனாக கோயில் கொண்டான்.  இவரை 24 படிகள் ஏறி தரிசிக்க வேண்டும். இந்த படிகள் காயத்ரி மந்திரத்தின் உட்பொருளை அடிப்படையாக கொண்டவை.

சாப விமோசனம் பெற்ற இந்திரன் புறப்பட்ட போது இன்னொரு அதிசயம் நடந்தது. முகப் பொலிவு, தேஜஸ் கொண்ட இரு அந்தண சிறுவர்கள் அத்திமர வனத்தில் இருந்தனர்.

அவர்கள்  சிரிங்கிபேரர் என்னும் பிராமண ரிஷியின் மகன்கள்.  கவுதம முனிவரிடம் சீடர்களாக வேதம் கற்றவர்கள். இவர்களின் பின்னாலும் ஒரு சாபக்கதை உண்டு.

குருகுலத்தில் சீடர்கள் குருவுக்கு சேவை புரிவர். ஒரு மாணவனை வேகமாக கரை சேர்க்க இது உதவும்.  புத்திக்கூர்மை இல்லாத சீடர்கள் கூட சேவையால் குருவருளுக்கு பாத்திரமாவர்.

இவ்விருவரும் ஒருநாள் பூஜைக்காக அங்கிருந்த ’அனந்த சரஸ்’ குளத்தில் தீர்த்தமும், சமித்து என்னும் மரக்குச்சிகளையும் எடுக்கச் சென்றனர். குளத்து நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்த நிலையில், குச்சிகளுக்காக மரத்தின் மீது ஏறிய போது மரப்பல்லி ஒன்று நீரில் விழுந்து தத்தளித்தது. சீடர்கள் அதை கவனிக்கவில்லை.
பல்லி விழுந்த நீருடன் முனிவரிடம் சென்றனர்.  அக்னி ேஹாத்ரியான அவர் யாகம் வளர்த்து தினமும் வேள்வி நடத்துபவர்.  யாக குண்டத்தை மந்திர நீரால் சுத்தம் செய்ய முயன்ற போது பல்லி செத்து மிதந்தது! முனிவர் அதிர்ந்தார்.
அனைவரும் நலமாக வாழத் தானே முனிவர் வேள்வி நடத்துகிறார். ஆனால் அதன் தொடக்கமே ஒரு பல்லியின் மரணத்தோடு இருக்கலாமா? கோபமாக  சீடர்களை பார்த்தார்.

”இப்படியா... ஒரு உயிர்  இறந்தது கூட தெரியாமல் இருப்பீர்கள்? இனி நான் இங்கே வேள்வி நடத்த முடியாது. ஒருநாள் கூட விடாமல் செய்த வேள்வி பூஜை தடைபட்டு விக்னமும் உண்டாகி விட்டது” என வருந்தியவர், சீடர்களை பல்லிகளாக மாறும்படி சபித்தார்.  

இவர்கள் தான் ஹேமன், சுக்லன் என்னும் பெயர் கொண்ட சிருங்கிபேரரின் புதல்வர்கள்! இருவரும் இந்திரன் சாப விமோசனம் பெற்ற நேரம் அங்கு வந்தனர்.
”யார் நீங்கள்... உங்களிடம் தான் என்ன தேஜஸ்! இங்கு என்ன செய்கிறீர்கள்?”  இதற்கு ஹேமன் பதிலளித்தான்.

”நாங்கள் ரிஷி புத்திரர்கள்... ஹேமன் என் பெயர்.  இவன் பெயர் சுக்லன். கவுதம ரிஷியின் சாபத்திற்கு ஆளாகி பல்லிகளாக மாறி  அத்தி வனத்தில் இருந்தோம். யானை உருவில் வந்த உனக்கு நரசிம்மரால் சாப விமோசனம் உண்டான சுபவேளையே எங்களுக்கும் விமோசனத்தை அளித்தது.  

எங்களுக்கு மட்டுமல்ல... அறியாமல் பிழை செய்து சாபம் பெற்ற அனைவருக்கும் இந்த அத்திகிரி விமோசனம் அளிக்கும்.  

குருசாபம் எப்படிப்பட்டது என்பதும், நல்லோர் சாபம் கூட  நன்மையில்  முடியும் என்பதும் நம் மூலம் உலகிற்கு தெரிய வரும்” என ஹேமன் விளக்கம் தர இந்திரன் மகிழ்ந்தான். அன்போடு அவர்களின் தலையை வருடினான்.

”எம்பெருமானின் திருவிளையாடல்கள் நமக்கு மட்டுமின்றி, மனித குலத்திற்கே பாடமாகி விட்டதை உணர்கிறேன். தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் ஒன்றே பேச வேண்டும். உறுதிபட நன்றே பேச வேண்டும். இதற்கு மனதில் உறுதி இருக்க வேண்டும். சரஸ்வதி தேவியார் விஷயத்தில் சராசரி மனிதனைப் போல நடந்து சாபத்திற்கு ஆளாகி விட்டேன். சாபத்தால் துன்பம் நேர்ந்தாலும் இப்போது மகிழ்கிறேன். இல்லாவிட்டால் இப்படி ஒரு திருத்தலம்  வாய்த்திருக்குமா?” என நெகிழ்ந்த இந்திரன் அந்தண சீடர்களோடு அனந்த சரஸ் குளத்திற்கு சென்றான்.

”பாற்கடலுக்கு ஈடான இந்த குளம் எதிர்காலத்தில் உயிர்களுக்கு அருள் தரும் பொக்கிஷமாக இருக்கும். இனி நாம் மூவரும் உலகிலுள்ள அனைவராலும் சிந்திக்கப்படுவோம்” என்றபடி நீராடி எழுந்தான்.  பின் சீடர்கள் கவுதம முனிவரின் ஆசிரமம் நோக்கியும், இந்திரன் வைகுண்டம் நோக்கியும் புறப்பட்டனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar