|
ஒருமுறை கைலாயத்தில் சிவன் இல்லாத நேரத்தில், பார்வதி தன் உடம்பில் பூசிய மஞ்சளை எல்லாம் எடுத்து ஒரு சிறுவனை உருவாக்கினாள். அதற்கு உயிர் கொடுத்து தனது காவலனாக நியமித்தாள். அவரே விநாயகப் பெருமான். இந்நிலையில் பார்வதியைத் தேடி வந்தார் சிவன். அவர் யார் என்ற உண்மை அறியாத சிறுவன், ”அன்னை பார்வதியின் அனுமதி இல்லாமல் அனுமதிக்க முடியாது” என்றான். கோபத்தில் சிவன், ” உலகை ஆளும் என்னையே தடுக்கிறாயா?” என கர்ஜித்தார். சிறுவனும் சிறிதும் பயமின்றி வாளை எடுத்து சிவனின் கழுத்தருகே நீட்டினான். சிறுவனின் கழுத்தை சிவன் திருகவே, அவன் இறந்தான். இதையறிந்த பார்வதி, “இந்த பிள்ளை யார் என்பதை அறியாமலேயே இப்படி கொன்று விட்டீர்களே! என்னால் உருவாக்கப்பட்ட இவனே நமக்கு முதல் பிள்ளை” என்றாள்.
”தேவி! அனைத்து உண்மைகளையும் அறிவேன். கஜமுகாசுரன் என்னும் அசுரன் உயிர்களை துன்புறுத்தி வருகிறான். அவனுக்கு முடிவு கட்டப் போகிறான் இந்தச் சிறுவன். ஆண், பெண் சம்பந்தம் இல்லாமல் பிறக்கும் ஒருவனால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்பது விதி. அதை மீறாதபடி அசுரவதத்திற்கு தகுதி கொண்டவன் இவனே. வடக்கு நோக்கி தலை வைத்து படுத்திருக்கும் யானை ஒன்றின் தலையை இவனுக்கு பொருத்தினால் போதும். உடனே உயிர் பெறுவான்” என்றார். மஞ்சளில் இருந்து பிறந்ததால், மஞ்சளால் ஆன விநாயகரை வழிபடுவது சிறப்பு. ’மங்களம்’ என்ற சொல்லுக்கு ’மஞ்சள்’ என்று பொருள் உண்டு. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடக்க மஞ்சள் பிள்ளையார் பூஜிப்பர். விநாயகர் சதுர்த்தியன்று மஞ்சள் பிள்ளையார் செய்து பூஜித்து, நீர் நிலைகளில் கரைப்பது நல்லது.
|
|
|
|