|
முன்னொரு காலத்தில் மகான் ஒருவர் தானம் செய்வதன் மகிமை குறித்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில், ஏழை விவசாயி ஒரு வரும் இருந்தார். தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணிய பலன்களை அறிந்த அந்த விவசாயி, இனி தானும் தினமும் தானம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆனால், அந்த ஏழை விவசாயிக்குத் தன்னால் என்ன தானம் செய்ய முடியும் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உபதேசம் முடிந்து அனைவரும் விலகிச் சென்றபின் அவர் அந்த மகானை அணுகித் தன் விருப்பத்தைச் சொல்லி தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அந்த மகான், ""நீ என்ன தொழில் செய்கிறாய்” என்று கேட்டார். ""நான் ஒரு விவசாயி, மிகச் சிறு இடத்தில் காய்கறிகள் விளைவிக்கிறேன்” என்றார் விவசாயி. உடனே அந்த மகான், ""அப்படியானால் நீ விளைவிக்கும் காய்கறிகளில் ஒரு சிறு அளவை தானம் செய்து வா” என்றார். விவசாயியும் ஏற்றுக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் சிறு அளவு காய்கறிகளைத் தானம் செய்துவந்தார். அவர் இறந்ததும் புண்ணிய பலன்களுக்கு ஏற்ப, மறுபிறவியில் ஒரு ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார். வளர்ந்ததும் ஞானி ஒருவர் அவரைச் சந்தித்து அவரின் முற்பிறவியை அறிந்து சொன்னார்.
""நீங்கள் போன ஜன்மத்தில் மிகச் சிறிதளவு காய்கறிகளைத் தானம் செய்ததன் பலனாக உங்களுக்கு இந்த ராஜப் பிறவி கிடைத்தது” என்று சொல்லிச் சென்றார். உடனே, ராஜாவும் ""இனி இந்தப் பிறவியிலும் நான் அதே தானத்தைச் செய்வேன்” என்று சொல்லி, தினமும் காய்கறி தானத்தைச் செய்தார். இந்தப் பிறவியும் முடிந்தது. ஆனால் அடுத்தப் பிறவியில் மீண்டும் ஏழையாகவே பிறந்தார். இந்த முறையும் ஒரு மகானை சந்தித்துத் தான் படும் துன்பங்களுக்கு என்ன காரணம் என்று கேட்டார். அந்த மகானும் அவருடைய முன் ஜன்மங்களை அறிந்து சொன்னார். அந்த ஏழைக்கோ சந்தேகம் தோன்றியது. ""ஐயா, நான் இரண்டு பிறவிகளிலும் தானம்தானே செய்தேன்? ஒரே செயலுக்கு எப்படி இருவேறு பலன்கள் உண்டாகிறது?” என்று கேட்டார். மகான் புன்னகை மாறாமல், ""நண்பனே, நீ ஏழையாய் இருந்தபோது என்ன தானம் செய்தாயோ அதையே நீ ராஜாவாக இருந்தபோதும் செய்தாய். நம்மிடம் இருக்கும் செல்வத்துக்கு ஏற்ப நம் தானத்தின் அளவும் விரிவடைய வேண்டும் அல்லவா? அப் படிச் செய்யாவிட்டால், செல்வத்தின் பலன்தான் என்ன? எனவே, உன்னிடம் இருக்கும் செல்வத்துக்கு ஏற்ப நிறைவாய் தானம் செய்” என்று அறிவுத்தினார். செல்வத்துப் பயனே ஈதல் என்னும் வள்ளுவத்தின் வாக்கு பொய்க்குமோ? |
|
|
|