|
பக்தியே இல்லாத மன்னன் ஒருவன் இருந்தான். அவனிடம் பக்திப் பழமான ஒருவர் மந்திரியாக வேலைக்குச் சேர்ந்தார். என்ன நடந்தாலும், ""எல்லாவற்றையும் தெய்வம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து அரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஒருநாள் அவரை அழைத்து, ""நீங்கள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று. அப்படியானால் அவர் இங்கேயும் இருப்பார்தானே... அவரை இப்போதே எனக்குக் காட்டுங்கள். இல்லை என்றால் உங்கள் தலை உருளும்! அதையும் அந்தக் கடவுள் பார்ப்பார்!” அதிகாரமாகச் சொன்னான். அதைக் கேட்ட மந்திரி பதட்டப்படாமல் சொன்னார். ""மன்னா, ஒரு குடம் பால் கொண்டு வரச் சொல்லுங்கள். உங்களுக்குக் கடவுளைக் காட்டுகிறேன்!”
அரசர் உத்தரவுப்படி பால் வந்தது. பால் பானையைத் திறக்கச் சொன்னார், அமைச்சர். ""அரசே, இதோ இந்தப்பானைக்குள் நெய் தெரிகிறது. எட்டிப் பாருங்கள்!” பரபரப்பாகச் சொன்னார், மந்திரி. வேகமாக வந்த மன்னர் எட்டிப் பார்த்தார். ""எங்கே தெரிகிறது நெய்? பால்தானே தெரிகிறது?” கோபமாகக் கத்தினார். "இல்லை மன்னா, பாலுக்குள்தான் நெய் இருக்கிறது. நன்றாகப் பாருங்கள் தெரியும்!” மந்திரி சொல்ல, அரசருக்கு எரிச்சல் வந்தது. ""என்ன உளறுகிறீர்? பாலுக்குள் இருக்கும் நெய் தெரியவேண்டுமானால், அதைக் காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சினால் அல்லவா நெய் வரும். பாலாக இருக்கும்போதே அதை எப்படிப் பார்க்க முடியும்?” கடுப்பாகக் கேட்டார் ராஜா. மந்திரி அமைதியாகச் சொன்னார், ""கடவுளைப் பார்ப்பதும் அப்படித்தான் மன்னா! முதலில் பக்தியால் மனதை நிரப்ப வேண்டும். அடியவர்கள், மகான்கள் துணையோடு அதைப் பண்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் கடவுள் தாமாகவே உங்கள் கண்ணுக்குத் தெரிவார்!” அமைச்சர் சொன்னது அரசனுக்குப் புரிந்தது. அவன் பக்திப் பாதையில் மாறினான். ஆண்டவனை அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்தான். |
|
|
|