|
பெருமாள் பக்தன் ஒருவன், பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். அங்கே திருமால் சயனத்தில் இருந்தார். அவரைக் கண்டு பணிந்தான், பக்தன். ""பெருமாளே! பூலோகத்தில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன்” என்றான். ஒன்றும் தெரியாதவர்போல், ""ஓ அப்படியா? அது என்ன என்று சொல்!” என்றார், எம்பெருமான். ""ஐயனே! பூவுலகில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சண்டை எங்கும் எதிலும் நிலவுகிறது. உண்மையிலேயே உயர்ந்தவர் யார் என்பது எனக்குப் புரியவேயில்லை!” என்றான். ""நீ என்ன நினைக்கிறாய்?” கேட்டார், பகவான். பக்தன் வெகுநேரம் யோசிக்கவே, ""ஒருவேளை மனிதர்கள் அல்லாமல், கடல், மலை போன்றவை பெரியவையாக இருக்குமோ?” அறியாவதர்போல் கேட்டார், பெருமாள்.
""இல்லை ஐயனே. கடல், குறுமுனிவர் அகத்தியர் வயிற்றிலேயே அடங்கிவிட்டது. மலையை உமது மருகன் முருகன் தகர்த்தெறிந்தது உங்களுக்குத் தெரியாதா? நான் நன்றாக யோசித்துவிட்டேன் - பூவுலகில் மட்டுமல்ல, ஈரேழு பதினான்கு உலகிலும் பகவானே, தங்களைத் தவிர, வேறு பெரியவர் யாருமே இல்லை!” சொன்னான், பக்தன். அவன் சொன்னதைக் கேட்டதும் புன்னகைத்த புருஷோத்தமன், ""இல்லை, இல்லை... என்னைவிடவும் ஏராளமான பெரியவர்கள் பூவுலகில் இருக்கிறார்கள்!” என்றார். பதறிப்போன பக்தன், ""பகவானே என்ன சொல்கிறீர்கள்? உங்களைவிடப் பெரியவர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்டான். ""ஆம் பக்தா... உன்னைப் போன்ற பக்தர்கள்தான், என்னைவிடப் பெரியவர்கள்.. என்ன நடந்தாலும் எல்லாம் என் செயல் என நினைத்து, என்னையே சதாசர்வகாலமும் நம்பும் பக்தர்கள்தான் என்னைவிடப் பெரியவர்கள்!” ஆச்சரியப்பட்ட பக்தன், ""அது எப்படிப் பெருமானே?” எனக் கேட்டான். உடனே பெருமாள் தேவலோகக் கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். ""பக்தனே! இதில் உன் மார்பைப் பார்” என்றார். பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏனெனில் பகவான் அவனது மார்புக்குள் சிறு அளவில் குறுகி நின்றார். ""பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டை விரலளவாக மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறாயே.... இத்தகைய பக்தர்களல்லவா என்னைவிடப் பெரியவர்கள்?” புன்னகை தவழ பகவான் சொல்ல, அவரைப் பணிந்து வைகுந்தத்துக்குள் நுழைந்தான் பக்தன். |
|
|
|