|
ராமன் எதையும் அறிவு பூர்வமாக ஏற்று, மூளைக்கு வேலை கொடுத்தானே தவிர மனதில் சிறிதும் சலனப்படவில்லை. ’நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம்’ என தசரதர் சொன்ன போது அவனது முகம் எப்படி மலர்ந்ததோ அப்படியே ’நாளைக்கு உன் தம்பி பரதனுக்கு பட்டாபிஷேகம், நீ காட்டுக்கு செல்ல வேண்டும்’ என சொன்ன போதும் இருந்தது. தந்தையார் உத்தரவுப்படி காட்டுக்குப் போக முடிவெடுத்தான் ராமன். ஆனால் கைகேய நாட்டுக்கு போன தம்பிகள் பரதனும், சத்ருக்னனும் அயோத்திக்கு திரும்பும் வரை காத்திருந்தால் தந்தையின் உத்தரவை அவமதிப்பது போலாகுமே என்றும் வருந்தினான். இதற்குள் நடந்ததை கேள்விப்பட்ட கோசலை சிரித்தாள். ராமனின் தாய் அல்லவா! கைகேயி மீது கூட அவளுக்கு கோபம் வரவில்லை. ஏற்கனவே தசரதன் அளித்த வரங்களைத் தான் கைகேயி இப்போது பயன்படுத்திக் கொள்கிறாள். இதில் என்ன தவறு? என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது. பரதன் முடிசூட்டப் போகிறான் என்றும் கூட சஞ்சலப்படவில்லை.
முதலில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற போது மகிழ்ந்தவள் தான் அவள். சக்கரவர்த்தியின் மூத்த மகன் அவருக்குப் பின் அரியணை ஏறுவது வழிவழி வந்த சம்பிரதாயம், அவ்வளவு தான் என்ற உணர்வும் கொண்டிருந்தாள். அயோத்தி சாம்ராஜ்யத்தை ராமன் எப்படி ஆளப் போகிறான் என்ற தவிப்பும் அவளுக்கு இருந்தது. அது தாய்மையின் தவிப்பு. ஆனாலும் ராமனின் வீரத்தில், புத்திகூர்மையில் நம்பிக்கை இருந்தது. அதே சமயம், ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் மனதை உலுக்கியது. ஆனாலும் இது பற்றி சிந்திப்பதை கைவிட்டாள். பட்டாபிேஷகம் நடந்தால் மக்களின் மனம் மகிழ எப்படி அரசாள்வானோ, அதே போல காட்டிலும் தனிக்காட்டு ராஜாவாக இருப்பான் என நம்பினாள். அவள் மனதில் கைகேயி பற்றிய சிந்தனை ஏற்பட்டது.
ராமனுக்குப் பட்டாபிஷேகம் என அறிவிப்பு வந்த போது கைகேயி சந்திப்போரிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாளே! ஒரே நாளில் இவள் மனம் மாறிட என்ன காரணம்? என்ன தான் கூனி கூறினாலும், அதிலிருந்து விடுபட்டு தனியே சிந்திக்க வேண்டியவள் அல்லவா கைகேயி! அப்படியிருக்க கூனியின் சொல் கேட்டு, புத்தி மாறி, தசரதனை வீழ்த்தக் காரணம் என்ன? என்றெல்லாம் யோசித்தாள். ஒரு எல்லைக்கு மேல் இந்த சிந்தனையை அவள் வளர்க்க விரும்பவில்லை. காட்டுக்குச் செல்லும் முன் ராமன் சிறிய தாயான கைகேயியைச் சந்தித்தான். “தந்தையார் உத்தரவுப்படி காட்டுக்குச் செல்கிறேன்” என்றான். ஆனால் அவள் பதில் சொல்லவில்லை. தன்னைப் பெற்ற பிள்ளை போல வளர்த்தவள், இப்படி பார்க்க கூட விரும்பாமல் திரும்புகிறாளே என வருந்தினான் ராமன். தவறு என அறியாமல் சிலர் செயல்பட்ட பின் வருந்துவதில்லையா, அது போலத் தான் கைகேயியின் நிலையும் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. “பரதன் இருந்தால் அவனிடமும் சொல்லி விட்டு புறப்படுவேன் தாயே. அண்ணன் என்ற முறையில் யோசனைகள் சொல்லி, சிறப்பாக நாடாள ஆசி வழங்குவேன். அவன் அரியணை ஏறியதும், நான் ஆசிர்வதித்ததாகச் சொல்லுங்கள்” என கேட்டுக் கொண்டான்.
அவள் அப்போதும் வாய் திறக்கவில்லை. அவளை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க விரும்பாமல் கீழே விழுந்து வணங்கி புறப்பட்டான். அடுத்து மற்றொரு சிறிய அன்னையான சுமித்திரையை சந்தித்தான். கண்களில் நீர் பெருக, “ராமா, இந்தக் கொடுமைக்கு எப்படி உடன்பட்டாய்? கைகேயியின் மகன் பரதன் இதற்கு சம்மதிப்பான் என்றா நினைக்கிறாய்? நிச்சயம் இல்லை. என் இரு பிள்ளைகளில் ஒருவனான லட்சுமணன் உனக்கு நிழலாக இருப்பது போன்று, இன்னொரு மகன் சத்ருக்கனன், பரதனுக்கு உறுதுணையாக இருப்பான். உன் நற்குணங்களை எப்படி பரவசத்துடன் லட்சுமணன் சொல்வானோ, அதே போல பரதனைப் பற்றி சத்ருக்கனன் பலவாறாக வியந்து சொல்வதுண்டு. இதனால், பரதனின் மனம் எப்படிப்பட்டது என அறிவேன். அவன் அரியணை ஏற மாட்டான்” என ராமன் காட்டுக்குச் செல்வதில் விருப்பமில்லை என்பதை தெரிவித்தாள். ஆனால் ராமன் புன்சிரிப்புடன், “அம்மா! இது அரச கட்டளை. மீறவோ, தவிர்க்கவோ முடியாது என பரதனிடம் சொல்லி சம்மதிக்க வையுங்கள். நான் காட்டுக்கு செல்வது உறுதி. அதை யாரும் மாற்ற முடியாது. மன்னியுங்கள்,” என வணங்கி ஆசி கேட்டான்.
பிறகு தாய் கோசலையிடம் வந்தான். அவனைப் பார்த்ததும் கோசலையின் கண்களில் ஒளி மின்னியது. “ராமா, நாட்டைத் துறந்து காட்டுக்குச் செல்லப் போகிறாய், அப்படித் தானே?” என கம்பீரமாக கேட்டாள் கோசலை. ராமன் இதை எதிர்பார்க்கவில்லை. அவளை சமாதானப்படுத்துவது சவாலாக இருக்கும் என வருந்திய அவனுக்கு இது மகிழ்ச்சியான அதிர்ச்சியாக இருந்தது. “அம்மா. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்ற வேண்டியவனாக இருக்கிறேன்” “ராமா! மகிழ்ச்சியுடன் சென்று வா. இதற்கு காரணமான யார் மீதும் கோபம் கொள்ளாதே. யாரையும் வெறுக்காதே. வீட்டில் யாராவது வெளியூர் சென்றால், ஊருக்குப் போகும் வரை பட்டினியாக இருக்க முடியாது என்பதற்காக கட்டு சாதக் கூடையுடன் அனுப்புவது வழக்கம். அதில் உண்ணவும், சமைக்கவும் பொருட்கள் இருக்கும். ஆனால் நீ 14 ஆண்டுகள் அல்லவா காட்டில் தங்கப் போகிறாய்! உனக்கு எந்த கட்டுசாதக் கூடையை கொடுப்பது?” என கண் கலங்கினாள்.
ராமன் புன்முறுவலுடன் நின்றிருந்தான். “நீதியையும், தர்மத்தையும் கட்டுசாதமாக உன்னுடன் அனுப்புகிறேன். அதனால் அநீதி என்னும் பசியும், அதர்மம் என்னும் தாகமும் ஏற்படாது. ஆகவே 14 ஆண்டுகளும் நலமுடன் இருப்பாய்” என்றாள். இந்த கட்டுசாதம் 14 ஆண்டுகள் மட்டுமல்ல, ராம அவதாரம் முழுமைக்கும் பலமாக இருந்தது!
|
|
|
|