|
மகாசுவாமிகளின் பிட்சா வந்தனத்திற்காக, இயன்ற பொருட்களை மடத்திற்கு பக்தர்கள் கொடுக்கும் வழக்கம் உண்டு. ஒருநாள் ஒரு தம்பதியர், பிட்சாவந்தனம் செய்ய அரிசி, காய்கறிகளை எடுத்துக் கொண்டு மடத்திற்கு புறப்பட்டனர். அவர்களின் வீட்டில் சமையல் செய்யும் பெண்மணி, பொருட்களை எல்லாம் சேகரிக்கவும், எடுத்து வைக்கவும் உதவியாக இருந்தார். சுவாமியின் பக்தையான அவருக்கு தன்னால் முடிந்த காணிக்கையை தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் ஏழையான அவரால் என்ன கொடுக்க முடியும்? அப்போது அத்தம்பதியர் காணிக்கை கொடுப்பதற்காக சில்லரை நாணயங்களை ஒரு தட்டில் எடுத்து வைத்தனர். இதைக் கண்ட சமையல் பெண், தன் முந்தானையில் முடிந்த நாலணாவை (25 காசு) கையில் எடுத்தாள். ”தெய்வமே! என்னால் முடிந்தது இது தான். அன்புடன் ஏற்க வேண்டும்” என பிரார்த்தித்தார். யாருக்கும் தெரியாமல் தட்டில் இருந்த நாணயங்களோடு சேர்த்தார்.
மடத்திற்குச் சென்ற தம்பதியர், சுவாமிகளை வணங்கி பொருட்களை தாம்பாளத்தில் வைத்தனர். தாம்பாளத்தை சுவாமிகள் துழாவி குறிப்பிட்ட நாலணாவை மட்டும் கையில் எடுத்தார். ’இதற்கு மட்டும் ஏன் அத்தனை மதிப்பு?’ என திகைத்தனர் தம்பதியர். ”உங்கள் வீட்டு சமையல் மாமி கொடுத்த தங்கக் காசு பத்திரமாக வந்து சேர்ந்தது என மறக்காமல் சொல்லுங்கோ!” என்றார். இவர்களும் தலையசைத்தனர். சுவாமிகளின் ஆசி பெற்று அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டனர். சமையல்கார பெண்மணியிடம் அவர்கள் தெரிவித்த போது,. அவரது விழிகளில் கண்ணீர்! ”நான் கொடுத்த நாலணா காசைத் தங்கக்காசாக ஏற்றுக் கொண்டாரா அந்தக் கருணைக்கடல்” என்றார். தங்க மனம் கொண்ட சுவாமிகள் இருந்த திசை நோக்கி விழுந்து வணங்கினார். - திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|