|
தந்தையாரின் கட்டளையை நிறைவேற்றும் ஏற்பாடுகளில் ஈடுபட்டான் ராமன். தாயார் கோசலை தந்த ’கட்டுசாதம்’ அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் காட்டுக்குச் செல்லத் தயாரானான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்லும் சமயத்தில், பரதன் அயோத்தியை அரசாள வேண்டும் என்பது சிறிய அன்னையின் நிபந்தனை. ஆனால் பரதன் அப்படிப்பட்டவனா? தன் மீது எத்தனை மரியாதை வைத்திருக்கிறான்! இங்கே ஏற்பட்ட மாற்றத்தை எப்படி எதிர்கொள்வான்? ஏற்கனவே தன்னை அண்ணனாக மட்டுமல்லாமல், குருவாக கருதுபவன் ஆயிற்றே! அவன் இதை ஏற்காவிட்டால், தந்தையார் அளித்த வரங்கள் அர்த்தம் இல்லாமல் போகுமே! வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தனக்கு தானே பாவம் சேரும்!
ஆகவே பரதன் வரும் முன்பாக அயோத்தியில் இருந்து புறப்பட வேண்டும். இப்போது தந்தையாரும் உடல்நலம் குன்றி இருக்கிறார். மகனைப் பிரிய போகிறோமே என்ற வருத்தமும் அவருக்கு இருக்கும். ஏற்கனவே விஸ்வாமித்திர மகரிஷியுடன் தான் சென்ற சொற்ப காலப் பிரிவைக் கூட தாங்க இயலாதவர் அவர். இந்த நீண்டகாலப் பிரிவை மனப்பூர்வமாக அவரால் ஏற்க முடியாது. அதனால் தான் அவர் சோர்வாகி விட்டார். வருத்தம் முகத்தில் மட்டும் இல்லாமல், உடல் முழுவதும் தெரிகிறது! அரண்மனை மருத்துவரை வரச் சொல்லிப் பார்க்கலாம். ஆனால் அதற்கு நான் நேரத்தைச் செலவிட முடியாதே? அதோடு அவருக்கு ஆறுதலாக உடன் இருந்தால், காலம் தாழ்த்தும் உத்தியாக மற்றவர்கள் கருத நேரிடுமே! அதற்கு இடம் தரக் கூடாது” என பலவிதம் எண்ணம் ராமனின் மனதில் ஓடியது. அப்போது வருத்தமுடன் வந்த லட்சுமணன், ”அண்ணா... நம் தந்தையார் உத்தரவை உடனே நிறைவேற்றத் தான் வேண்டுமா?” என கேட்டான்.
”என்ன கேட்கிறாய் லட்சுமணா? நான் எப்போதாவது தந்தையாரின் பேச்சை மீறியிருக்கிறேனா?” என புதிராகப் பார்த்தபடி கேட்டான். ”உண்மை தான் அண்ணா! ஆனால் எதைக் கேட்பது, எதைக் கேட்கக் கூடாது என்ற நிலை வேண்டாமா? இது உங்களின் வாழ்க்கைப் பிரச்னை. 14 ஆண்டுகள் என்பது எத்தகைய உன்னதமான காலம்! இதை தொலைக்க எப்படி மனம் வந்தது?” ”பெரியவர்கள் சொல்லுக்கு நிச்சயம் அர்த்தம் இருக்கும். அது கடுமையாக தோன்றினாலும், அதன் பின்னர் நம்முடைய நலன் தான் பிரதானமாக இருக்கும். ஆகவே அதை ஏற்க வேண்டுமே தவிர, விமர்சிப்பது கூடாது” ”அண்ணா! நீங்கள் இவ்வளவு உத்தமராக இருப்பது கண்டு மனம் நெகிழ்கிறது. பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கதான் நம்மால் முடியுமே தவிர தீர்மானமாகச் சொல்ல முடியாது. நீங்கள் சொன்னபடி பெரியவர்கள், பின்விளைவைத் தீர்மானமாக உணர்ந்த பிறகே நமக்கு உத்தரவிடுகிறார்கள். சூழ்நிலைக்கேற்ப அவர்களிடம் கடுமையோ, வெறுப்போ தோன்றுமே தவிர, உண்மையில் நோக்கம் நன்மை தருவதாகவே இருக்கும்”
ராமன் தம்பியை பெருமிதத்துடன் பார்த்தான். அவன் பக்குவப்பட்டு இருப்பதில் அவனுக்குப் பெருமை தான். அவனை தட்டிக் கொடுத்தபடி நகரத் தொடங்கினான். ”நானும் உங்களுடன் வருகிறேன்” என உறுதியான குரலில் கேட்டான் லட்சுமணன். திடுக்கிட்ட ராமன். ”என்ன... நீயும் வருகிறாயா? தந்தையின் உத்தரவு எனக்கு மட்டும்தானே? உனக்கு இல்லையே?” ”நீங்கள் வேறு, நான் வேறு அல்ல என்றே இதுவரை வாழ்ந்திருக்கிறோம். ஒருவேளை எனக்கு இப்படி ஒரு கட்டளை பிறப்பித்தால், நீங்கள் என்னை விட்டுக் கொடுத்திருப்பீர்களா?” ராமனால் பதில் சொல்ல முடியவில்லை. ”எல்லாம் தெரிந்த விஸ்வாமித்திரரே உங்களோடு என்னையும் சேர்த்து தானே காட்டுக்கு அழைத்துச் சென்றாரே தவிர, உங்களை மட்டும் அல்லவே! ஆகவே நானும் வருகிறேன்.”
”அந்த சூழ்நிலை வேறு லட்சுமணா. அதோடு அது குறுகிய கால ஏற்பாடு. இது பதினான்கு ஆண்டுகள் உனக்கு ஒத்து வராது.” ”இல்லை, நீங்கள் என்ன தான் சமாதானம் சொன்னாலும் ஏற்க மாட்டேன்” ”நீ பிடிவாதமாக இருந்தாலும், நான் உன்னைத் தவிர்க்கத் தீர்மானித்து விட்டேன்” அடம் பிடித்தாலும் அண்ணன் ஏற்க மாட்டான் என்பதால் வேறொரு உத்தியைக் கையாண்டான் லட்சுமணன். அண்ணியார் சிபாரிசு செய்தால் அண்ணன் கேட்க மாட்டாரா என்ன? அண்ணன் காட்டில் எத்தகைய துன்பத்தை அனுபவிக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் தம்பி இருந்தால் அவருக்கு தான் ஆதரவாக இருக்கும்! இதை அண்ணியார் நிச்சயம் ஏற்பார் என்ற எண்ணத்துடன் லட்சுமணன் சென்றான். தன் கணவர் அநியாயமாக காட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்ற கவலையால் அண்ணியார் அழுது கொண்டிருப்பார் என கருதிய லட்சுமணனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது! ஆம்... சீதை கவலை இன்றி, மலர்ந்த முகத்துடன் இருந்தாள். அதோடு, ”வா, லட்சுமணா,” என்றும் வரவேற்றாள். ”எங்கே உன் அண்ணா... வருகிறாரா?”
கலங்கிய மனதுடன் பார்த்தான் லட்சுமணன். ”வந்து… அண்ணியாரே தங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க வந்தேன்” என தயங்கி நின்றான். ”சொல்..” ”அண்ணனுக்கு துணையாக காட்டிற்கு செல்ல விரும்புகிறேன்.” ”நல்ல விஷயம் தானே, கட்டாயம் போகத் தான் வேண்டும்” என்றாள் சீதை. திடுக்கிட்ட லட்சுமணன். ”நீங்கள் தானா சொல்கிறீர்கள்?” அவள் தலையசைத்தாள். ”அவருடைய நலன் எனக்கும் முக்கியம் இல்லையா? நிச்சயம் அவருடன் போய் வா” அப்போது அங்கு வந்த ராமன், ”என்னை வழியனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்களா?” என்றான். ”உங்களுடன் காட்டுக்குப் போக தயாராகிறோம்” என்ற சீதையின் பதில் லட்சுமணருக்கு வியப்பு அளித்தது. ராமனுக்கு அதை விட திகைப்பு ”நீ எங்கே வருகிறாய்?” என்று கேட்டான். ”ஏன், உங்களுடன் காட்டுக்குத் தான்” என சாதாரணமாக பதில் அளித்தாள் சீதை. ”என்ன இது? ஒரு கூட்டத்தையே சேர்ப்பீர் போல் இருக்கிறதே!” என கடுமையாக கேட்டான் ராமன். ”என்னைக் கைத்தலம் பற்றிய போது எப்போதும் கைவிடமாட்டேன் என்று தான் சங்கல்பம் எடுத்தீர்கள். இப்போது தனியே 14 ஆண்டுகள் வனவாசம் என்றால் எப்படி?” ”புரிந்து கொள்ளாமல் பேசுகிறாயே? என் தந்தையார் என்னை மட்டுமே உத்தரவிட்டார்” ”நான் இல்லாமல் நீங்களா? இருவரும் தனித்தனியே தவிப்பதை விட, சேர்ந்தே இருக்கலாம் இல்லையா? லட்சுமணனும் வருவது தான் எத்தனை பெரிய உதவி?”ராமன் சிரித்தபடி, ”சரி...அது தான் விதி என்றால் நானா தடை செய்ய முடியும்? வாருங்கள்…” என மனப்பூர்வமாக சம்மதித்தான் ராவணனின் வீழ்ச்சிக்கு இப்போதே மூவரும் வித்திட்டனர்!
|
|
|
|