|
கோதாவரி நதிக்கரையில் வசித்த கேசவ பட்டர், அவரது தந்தையின் நினைவு நாளில் முன்னோருக்கு கடன் செய்தார். அப்போது அந்தணர் ஒருவர் கேசவரின் வீட்டுக்கு வந்தார். அவருக்கு அறுசுவை உணவும், காணிக்கையும் கொடுத்து அனுப்பினார். அந்தணர் கிளம்பிய சிறிது நேரத்தில், பட்டருக்கு விபரீதம் நிகழ்ந்தது. அவரது முகம் மட்டும் கழுதை முகமாக மாறியது. பயத்தில் அலறிய பட்டர், அகத்திய முனிவரின் ஆசிரமம் நோக்கி ஓடினார். அவரை விழுந்து வணங்கினார்.
விஷயத்தை சொல்லும் முன்பே, அகத்தியர் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். ”இன்று உன் தந்தையின் நினைவு நாளாயிற்றே....” என்றார் அகத்தியர். ”ஆம்” என தலையசைத்த பட்டரின் கண்களில் கண்ணீர். ”நினைவு நாளில் பாவி ஒருவனுக்கு உணவு அளித்ததால் நேர்ந்த கொடுமை இது. இருந்தாலும் உன் கவலை தீர்க்கும் மருந்து திருப்பதியில் உள்ளது. அங்குள்ள ஆகாச கங்கை தீர்த்தத்தில் நீராடி ஏழுமலையானைத் தரிசனம் செய். பழைய வடிவம் பெறுவாய்” என்றார் அகத்தியர். ஆகாச கங்கையின் மகிமையால் கேசவ பட்டரின் ஆசை முகம் திரும்ப வந்தது. |
|
|
|