|
மலர்ந்த முகத்துடன் இருந்த பரதன், அயோத்தியின் எல்லையைத் தொட்டதும் முகம் வாடினான். உடன் வந்த சத்ருக்னனும் அப்படியே ஆனான்.
இத்தனை நாளாக கைகேய நாட்டில் மாமன் வீட்டில் தங்கிய பரதன், அயோத்திக்குத் திரும்பும் நாளுக்காக காத்திருந்தான். ஆமாம்..இனி தினமும் ராமனைக் கண்டு மகிழலாம் அல்லவா!
ஆனால், அயோத்திக்கு என்னாயிற்று? மரம், செடி, கொடிகள் கூட வாடியிருக்கிறதே? பூக்களில் கூட புத்துணர்வு இல்லையே! எதிர்ப்படும் மக்களும் முகம் திருப்பிக் கொண்டு அலட்சியம் செய்கிறார்களே! பரதனால் தாங்க முடியவில்லை.
ஏன் இந்த மாற்றம்? தேரை விரைவாகச் செலுத்தச் சொல்லி அரண்மனைக்குள் ஓடினான். உடன் தொடர்ந்தான் சத்ருக்னன். எதிர்ப்பட்ட வீரனை விசாரித்த போது, ராமன் காட்டிற்கு போனதும், பரதனுக்கு முடிசூட்ட இருப்பதும் தெரிய வந்தது. ராம பட்டாபிஷேகத்திற்காக அமர்க்களப்பட்ட அயோத்தி நிலை மாறிய அவலத்தையும் தெரிவித்தான்.
அவ்வளவு தான்...! சகோதரர்கள் இருவரும் கோபம் கொண்டனர். ராமன் மீது பரதன் கொண்ட பாசத்தை சத்ருக்னன் நன்கு அறிவான். கைகேய நாட்டில் கூட தங்களுடன் ராமனும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என பரதன் சொன்னது நினைவுக்கு வந்தது.
நடந்தவை அனைத்தையும் இருவரும் தெரிந்து கொண்டனர். இதற்கெல்லாம் காரணம் கூனி என்பதால் சத்ருக்னன் அவளைத் தாறுமாறாக திட்ட நினைத்தான்.
பரதனுக்கு கூனியை நன்றாகத் தெரியும். தனக்கு நல்ல தாதியாக விளங்கியவள் அவள். தாலாட்டு பாடிய இன்னொரு தாயும் அவளே. தன் எஜமானி கைகேயிக்கு விசுவாசமான வேலைக்காரியாக நடந்ததன் விபரீத விளைவே இது என புரிந்தது. சத்ருக்னனைத் தடுத்த அவன். ”வேண்டாம்! கூனியைக் கோபிக்காதே. இப்படிச் செய்வது ராமன் அண்ணனுக்குப் பிடிக்காது. அவள் வெறும் வேலைக்காரி தான். என் தாயார் மீதும், என் மீதும் கொண்ட அளவற்ற விசுவாசத்தால் அப்படி செய்திருக்கிறாள். அவளை நோவதால் பயன் இல்லை.”
ஆனால் சத்ருக்னன் மனம் அடங்கவில்லை. ”அப்படியென்றால் வேலைக்காரியின் பேச்சைக் கேட்ட உங்கள் தாயாரைத் தான் கோபிக்க வேண்டும். திடீரென அவர் மனதில் வன்மம் ஏன் புகுந்தது? நீங்கள் சொன்னது போலவே கூனி வேலைக்காரி தான் என்றால் அந்தளவில் நிறுத்த வேண்டாமா? ’தாதிக்கு உரிய பணி என்னவோ அதை மட்டும் பார்’ என தடுக்க வேண்டாமா?” பரதன் யோசித்தான். தன் தாயார் முன்னேற்பாட்டுடன் தான் இப்படி செய்திருப்பார்? தன்னை கைகேய தேசம் அனுப்பி விட்டு, இங்கே நாடகமாடி ராமனை காட்டிற்கு விரட்டினாரோ? ராமன் இல்லாத அயோத்திக்கு என்னை அரசனாக்கிப் பார்க்க நினைத்தாரோ? இருக்காது. தாயின் மனம் நன்றாகத் தெரியும். நான் ராமனை மீறி எதுவும் செய்தது கிடையாது. ஆகவே என்னை சமாதானப்படுத்துவது முடியாத விஷயம் என்பதை அவர் நன்கு புரிந்திருப்பார்.
சற்று சமாதானம் ஆனான் பரதன், ஆனால் சத்ருக்னன் நிம்மதி இன்றி தவித்தான். லட்சுமணன் எப்படி ராமனை பின்பற்றுகிறானோ அதே போல தானும் பரதனிடம் விசுவாசத்தை கொண்டிருந்தான்.
”வாருங்கள் அண்ணா...! அன்னை கைகேயியிடம் என்ன என்று கேட்போம்” என்றான்.
”வேண்டாம் சத்ருக்னா! கேள்விப்பட்டவரை நம் தந்தையார் தான் அண்ணனைக் காட்டிற்குச் செல்ல ஆணையிட்டிருக்கிறார். இதன் பின்னணியில் என் தாயார் பெற்ற வரம் இருந்தாலும், நேரடியாக ராமனிடம் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இதை ராமன் அறிந்திருப்பார் என்றாலும், உத்தமரான அவர் என் அன்னை கைகேயியை கோபிக்க வாய்ப்பே இல்லை. அவரிடம் ஆசி வேண்டுமானால் பெற்றிருப்பாரே தவிர, எந்தக் கேள்வியும் கேட்டிருக்க மாட்டார். ஆகவே அன்னையிடம் கேட்கும் எண்ணத்தை கைவிடு.
இது ராமன் அண்ணாவுக்குப் பிடிக்காது” ”நீங்கள் என்ன சொன்னாலும் சரி தான். யாரையும் இந்த இழப்புக்குக் காரணமாக்க முடியாது என்றாலும், எனக்கு மட்டும் மனக்குமுறல் நீங்காது. யார் எப்படி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளட்டுமே, நம் அண்ணன் ராமன் எப்படி காட்டுக்குப் போகலாம்? என் அண்ணன் லட்சுமணன் மற்றும் அண்ணியார் சீதாதேவியுடனும் தானே போயிருக்கிறார்? இது நியாயமா?” என்றெல்லாம் கேட்டான் சத்ருக்னன்.
கடைசியில் அண்ணனையே குறை சொல்லும் அளவுக்கு மனம் நோகிறானே! அங்கே போய், இங்கே போய், கடைசியில் ராமன் மீதே கோபிக்கிறானே என பரதன் திகைத்தான்.
சத்ருக்னனிடம், ”லட்சுமணனும் சரி, அண்ணியாரும் சரி, தாங்களாக முன் வந்து காட்டுக்கு சென்றிருக்க வேண்டும். யாருக்கும் தீங்கு நினைக்காத ராமன், காட்டில் காய், கனிகள் தின்று, மரத்தடியில் படுத்து, விலங்குகளை விரட்டி பதினான்கு ஆண்டுகள் வாழ வேண்டிய வேதனையை மற்றவர் பங்கிட விரும்புவாரா? இருக்காது. அவர்களாக கட்டாயப்படுத்தி அண்ணனை சம்மதிக்க வைத்திருப்பர். ஆக இதிலும் அண்ணன் மீது குறை சொல்ல முடியாது. அவரது குணம் இப்படியிருக்க தந்தையின் ஆணையை மட்டும் அவரால் எப்படி மீற முடியும்?” பிரமித்தான் சத்ருக்னன். இங்கே பரதனில் அவன் இன்னொரு ராமனைக் கண்டான்.
பரதன் தொடர்ந்தான்: ”நம் அண்ணன் ஸ்ரீராமன் வனத்திற்குச் சென்றிருக்கிறார் என்றால், அதற்கு வேறெதையும் நாம் காரணமாகக் கருத முடியாது”
”அப்படியென்றால்?
”நான் செய்திருக்கக் கூடிய ஏதோ பாவம்தான் இதற்கெல்லாம் காரணம். ஆமாம், நிச்சயமாக இதுதான் காரணம். இதற்குப் பிராயசித்தத்தை நான் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும், மேற்கொள்வேன்..” என்று உளம் நெகிழப் பேசினான் பரதன்.
சத்ருக்னன் சிந்தனை வயப்பட்டான். இப்போது பரதனை எப்படிக் கோபிப்பது!
|
|
|
|