|
அரண்மனைப் பூங்கா, நந்தவனம், தோட்டம் என பாதுகாப்பான இயற்கை அனுபவத்தை விட, காட்டுச் சூழ்நிலை மாறுபட்டு தான் இருந்தது. அரண்மனை தோட்டத்தில் பெரிய மரங்கள், செடிகள், கொடிகள் என இருந்தாலும் அவை ஒழுங்கான முறையில் இருந்தன.
காட்டில் ஒழுங்கு என்பது இல்லை. மரங்கள் அடர்ந்திருந்தன. வெயில் தெரியாதபடி குளிர்ச்சி நிலவியது. மலர்களின் மணத்தைச் சுமந்து வரும் தென்றல் மனதிற்கு இதம், உடம்புக்கு ஆரோக்கியம் அளித்தது.
முன்பு ராம, லட்சுமணர் காட்டுக்குச் சென்ற போது விஸ்வாமித்திரர் வழிநடத்தியதால் அவர்களின் பயணம் கடினமானதாக இல்லை. இப்போது சற்று சவாலாகத்தானிருந்தது. விலங்குகளின் உறுமல், கர்ஜனை, பிளிறல் அடிக்கடி காதில் ஒலித்தன.
ஆனால் விரைவிலேயே அவர்களின் பயணம் நம்பிக்கை தரும் இடத்தில் முடிந்தது. சித்ரகூடம் என்னும் அப்பகுதியில் மான்கள் துள்ளி விளையாடின. பசுக்கள் ’மா’ என வரவேற்றன. 14 ஆண்டுகளும் இங்கேயே தங்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இயற்கையின் அழகில் மயங்கிய அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆனாலும் ஒருபுறம் பசியால் களைப்பு உண்டானது. செடி, கொடிகளில் இருந்த காய், கனிகளை உண்டனர்.
முதலில் சற்று மருண்டாலும் மான் கூட்டம் நட்புடன் நெருங்கின. சீதைக்கு இந்த அனுபவம் புதுமையாக இருந்தது. ஜனகபுரி, அயோத்தியில் கிளி, மயில் மட்டுமே அவளுக்கு பரிச்சயம். ஆனால் இங்கே மான்களைக் கண்டதும் அவற்றின் மீது பாசம் கொண்டாள். அவள் எங்கே போனாலும் அவையும் கூட வருவதில் பெருமை கொண்டாள்.
அவள் நின்றால் அவை நிற்பதும், அவள் அமர்ந்தால் அருகில் அமர்வதுமாக இருந்தன. சில நேரம் மான்கள் அவளை உற்றுப் பார்க்கும் போது அவற்றின் கண்களில் லேசான சோகம் தென்பட்டது. ’இத்தனை பாசமுடன் பழகுகிறாயே, பின் ஒருநாள் எங்களை விடப் பேரழகான, பொன் மான் வந்தால் அதன் வசப்பட்டு எங்களை மறப்பாயா?’ என கேட்பது போலிருந்தது அக்கண்ணீர்! மான்களை அன்புடன் தழுவினாள் சீதை. இதற்கிடையில் தங்குவதற்கு குடில் அமைக்க ஆயத்தமானான் லட்சுமணன். தனி ஒருவனாக பணியில் ஈடுபட்டான். மூங்கில் கம்புகள், பனை ஓலைகள், உறுதியான நார்கள் கொண்டு அவன் குடில் அமைப்பதைக் கண்ட ராமன், ’இந்த கலையை லட்சுமணன் யாரிடமிருந்து கற்றான்?” என வியந்தான்.
அரண்மனையில் பிறந்து வளர்ந்த அவன் பாடம் கற்றது கூட வளாகத்துக்குள் தான். குலகுரு வசிஷ்டர் அரண்மனை நந்தவனத்தில் தான் வில்வித்தை கற்பித்தார். வில் பயிற்சிக்காக மலைப் பகுதிக்குச் சென்றால் கூட வெட்ட வெளியில் தான் போர் முறைகளை நடத்தினார். ஒருவேளை விஸ்வாமித்திர மகரிஷியின் ஆசிரமத்துக்குப் போன போது, அவரது குடிலைப் பார்த்துக் கற்றானோ? என அவன் பணி செய்வதை ரசித்தான் ராமன்.
வாசலில் திண்ணை, உள்ளே குளிர்ச்சி தரும் பனை ஓலைக்கீற்று, விசாலமான அறை, மூங்கில் சட்டத்தால் ஆன ஜன்னல்கள் என குடில் நேர்த்தியாக இருந்தது. அரண்மனை வசதிகள் இல்லை என்றாலும், அங்கு நிம்மதி கிடைத்தது. சந்தனத்தின் நறுமணத்தை விட, இயற்கை சுகந்தம் புத்துணர்வு அளித்தது.
எத்தனை நாள் தான் காய் கனிகளை மட்டும் சாப்பிடுவது? என யோசித்தாள் சீதை. மண் அடுப்பு வைத்து, விறகுகளைத் தீமூட்டி சமையலில் ஈடுபட்டாள். இதைக் கண்டு, “ஜனகபுரியின் இளவரசி, அயோத்தியின் மகாராணி! இவளுக்கு எப்படி சமையல் கலை தெரிந்தது?” என சகோதரர் இருவரும் வியந்தனர்.
“பெண்களின் இயல்பு தானே இது! அரண்மனை சமையலறைக்குச் சென்ற நேரத்தில், பார்வையாலேயே கற்ற பாடம் இது. உணவு சமைப்பது வித்தையல்ல. ஆகவே வியந்து போய் வாய் திறக்காமல், சாப்பிட மட்டும் வாய் திறந்தால் போதும்” என அடக்கமுடன் சொன்னாள் சீதை. சமையல் வேலையுடன், குடிலைப் பெருக்கி, மெழுகி சுத்தமாகவும், பொருட்களை ஒழுங்காகவும் அடுக்கினாள்.
’தம்பி லட்சுமணனோ நேர்த்தியாக குடிலை அமைக்கிறான், மனைவி சீதையோ ஆர்வமுடன் வீட்டைப் பராமரிக்கிறாள்! இத்தனைக்கும் பணியாள் மூலமாக வேலை வாங்கியவர்கள் இவர்கள்! இவர்களுடன் இருப்பதே நான் பெற்ற பாக்கியம்’ என மகிழ்ந்தான் ராமன்.
சமையலில் குறை இருந்தாலும் கூட ராமன் ரசித்து சாப்பிட்டான். சீதைக்கும் இந்த விஷயம் புரிந்தது. அரண்மனையை விட காட்டில் தான் குடும்ப வாழ்வு சிறப்பாக இருப்பதை உணர்ந்து சீதையும் மகிழ்ந்தாள். |
|
|
|