|
எழுத்தாளர் திருமதி வசுமதி ராமசாமி ’காப்டன் கல்யாணம்’ என்ற தேச பக்தி நாவல் மூலம் புகழ் பெற்றவர். ஆங்கிலத்தில் எழுதும் திறமை கொண்ட இவர் எம்.எஸ். சுப்புலட்சுமி, அம்புஜம்மாள் போன்றோர் பற்றி ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார். காந்திஜியிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மூதறிஞர் ராஜாஜியிடம் தொடர்ச்சியாக மூன்றாண்டு உபநிடதம் கற்றார். ’கற்பகாம்பாள் திருவருட் சங்கம்’ என்னும் அமைப்பின் மூலம் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். காஞ்சி மகாசுவாமிகளின் மீது பக்தி கொண்ட இவர், அம்பிகை மீது ஆதிசங்கரர் பாடிய ’சவுந்தர்ய லஹரியை’ பாடுவதற்காக பெண்களின் குழு ஒன்றைத் தொடங்கினார். அதற்காக சுவாமிகளை தரிசிக்க வந்தார். ஆசி வழங்கி விட்டு, விருப்பம் ஒன்றைத் தெரிவித்தார். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் ஏதேனும் ஒரு கோயிலில் பெண்கள் குழுவாக ’சவுந்தர்ய லஹரி’ ஸ்தோத்திரம் பாடுவதோடு திருமணம் நிச்சயமான ஏழைப் பெண்ணுக்குத் திருமாங்கல்யம் வழங்கும்படி உத்தரவிட்டார். சம்மதித்த அவருக்கு சுவாமிகள் ஆசியளித்தார்.
மாதம் தோறும் தங்கத் தாலி தானம் செய்ய நிறைய செலவாகுமே? என்ற பயமும், கவலையும் ஏற்பட்டது. முதல் பவுர்ணமியன்று வசுமதியே முழுச் செலவையும் ஏற்றார். பின்னர் தாலி தானம் குறித்து கேள்விப்பட்ட நண்பர்கள் பலரும் நன்கொடை வழங்க முன்வந்தனர். என்ன ஆச்சரியம்! சுவாமிகளின் அருளால் தாலி தானம் தொய்வின்றி நடந்தது. நாளடைவில் நன்கொடை அதிகமாகவே, பலருக்கும் தாலி தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ’ஒரு நல்ல செயலைச் செய்ய மகாசுவாமிகள் என்னைக் கருவியாகத் தேர்ந்தெடுத்தாரே, அந்த மனநிறைவை என்னால் வார்த்தையில் விளக்க முடியாது!’ என பலமுறை பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார் வசுமதி ராமசாமி. இப்போது அவரது மகள் சுகந்தா சுதர்சனம் இந்த தெய்வீகப் பணியை தொடர்கிறார். மகாசுவாமிகளின் அருளும், தாயாரின் ஆசியுமே தாலி தானம் செய்ய துணை நிற்பதாகவும் கூறியுள்ளார்.
|
|
|
|