|
நரசிம்ம கர்ஜனை கலைமகளாகிய வாணியை கலங்கடித்தது. இருந்தாலும் பிரம்மனின் தந்திரம் எனக் கருதியவள் தன் கோபத்தில் இருந்து இரு அசுரர்களைப் படைத்து யாகசாலை நோக்கி அனுப்பினாள். பனை போல உயரமான அவர்கள் ஒரு காலால் உதைத்தால் யாகசாலை நீர்மூலமாகும் என்னும் அளவிற்கு உக்கிரமானவர்களாக இருந்தனர். ஆனாலும் மகாவிஷ்ணு அவர்களை தன் கைகளால் அழுத்திப் பிசைந்தார். அவர்களின் உடல் தெறித்து விஷ்ணுவின் மேனி எங்கும் ரத்தம் பட்டு பவளவண்ணப் பெருமாள் என்னும் நாமத்திற்கு உரியவரானார்.
வாணி ஏமாற்றம் அடைந்தாள். கபால மாலை அணிந்து கண்களால் பயமுறுத்தும் சிவந்த நாக்கு கொண்ட காளியை ஏவினாள். ஆனால் மகாவிஷ்ணுவைக் கண்டதும் காளியின் ஆவேசம் மறைந்தது.
மகாவிஷ்ணு, ”வாணியின் கோபம் நியாயமானது என அறிந்து தான் வந்தாயா? வேள்விக்கு இடையூறு செய்வது பெரும் பாவம் என உனக்கு தெரியாதா?” எனக் கேட்க மவுனம் காத்தாள் காளி. இந்நிலையில் எட்டு கைகளுடன் விஷ்ணு காட்சியளிக்க பணிந்து வணங்கிச் சென்றாள்.
வாணியின் ஒவ்வொரு அஸ்திரமும் பொய்யாகி விடவே, தானே புறப்படத் தீர்மானித்தாள். தன் வாகனமான அன்னத்தின் மீது மீது செல்வதை விட, பெரு வெள்ளமாக அங்கே செல்வது யாகத்தை தடுக்கவும், தன் சக்தியின் வலிமையை புரிய வைக்கவும் செய்யும் என எண்ணினாள்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தை ஒட்டி கம்ப நதியும், பாலாறு ஓடின. அசுவமேத யாகத்திற்காக காஞ்சி வருவோர் இவற்றில் நீராடவும், பருகவும் சீரான நீரோட்டத்தை உருவாக்கியிருந்தான் வருணன்.
இரு கரைகளை தொட்டபடி ஓடிய ஆற்றங்கரையில் தேர்கள் நின்றிருக்க, மன்னாதி மன்னர்கள் நீராடி வேள்வியில் பங்கேற்க தயாராகி இருந்தனர். அந்த ஆற்றின் உற்பத்தி இடமான நந்தி மலை மீது நின்ற வாணி, மந்திர சக்தியால் பெருமழையை வரவழைத்தாள். வெள்ளப் பெருக்கால் காஞ்சி நகரத்தையே விழுங்கும் ஆவேசத்துடன் ஓடி வந்தாள்.
இதை அறிந்த பிரம்மன் தியானத்தில் அமர்ந்தபடி, ”எம்பெருமானே! உன் வழிகாட்டுதலால் நிகழும் வேள்வி இது.. உனக்கான வேள்வியும் கூட.. நீயே காப்பாற்ற வேண்டும்” என பிரார்த்தித்தான். மகாவிஷ்ணுவும் இடுப்பில் கவுபீனம் மட்டும் அணிந்து ஆற்றின் குறுக்கே படுத்தான், மகாவிஷ்ணுவே பரம்பொருள் என்பதையும், அந்த பரம்பொருளின் சக்தி வடிவுகளில் ஒன்றான வாணி அதன் ஒரு அங்கமாகவும் இருக்கும் நிலையை உணர்த்தவே வாணியும் செயல் இழந்தாள். தன் எண்ணம் நேரானதாக இருப்பினும் ஆத்திரத்தால் அனைத்து முயற்சிகளும் தோற்றதை உணர்ந்தாள்.
வாணி திருந்திட பிரம்மனின் வேள்வியும் தடைகளைக் கடந்து இனிதாக நடந்தது. வேள்விக்கான செயல்கள் அவ்வளவும் சரிவர பிசகின்றி நடந்தன. பூமியில் அத்திகிரி என்னும் தலமானது அஸ்வமேத வேள்வியை பிரம்மதேவனே செய்ததால் வேள்வியின் பயனாக ஆதிமூலமான எம்பெருமான் அதில் எழுந்தருளினார். புதிய சிருஷ்டி தண்டத்தையும் பிரம்மனிடம் அளித்தான். யாக நெருப்பில் விஸ்வரூபமாக காட்சி தந்த மகாவிஷ்ணுவை சகலரும் ’ஹே நாராயணா... ஹே மாதவா...ஹே வைகுண்டா” என அழைத்து வணங்கினர். மகாவிஷ்ணுவின் இந்தக் கோலம் கண்ட பிரம்மன் வேண்டுகோள் ஒன்றை விடுத்தான்.
”எம்பெருமானே! அபூர்வமான இந்த வேள்வியின் தனிச்சிறப்பு தங்களின் அக்னி பிரசன்னம் தான்! இதை காண தரிசித்த அனைவரும் பாக்கியசாலிகள். அதே வேளை வரும் நாட்களில் பூமியில் வாழ்பவர்கள் இந்த தரிசனம் வாய்க்காமல் போய் விட்டதாக வருந்தக் கூடும். எனவே தாங்கள் காட்சியளித்த கோலத்திலேயே கோயில் கொள்ள வேண்டும் என வரம் தர வேண்டுகிறேன்” மகாவிஷ்ணுவும் அந்த நொடியே வரதராஜனாக காட்சியளித்தான்.
இந்திரனால் அத்திகிரி உண்டாகிய போது நரசிம்மரூபம் கோயில் கொண்டது. இப்போது பிரம்மனால் அத்திகிரி வரதராஜரும் அங்கு கோயில் கொண்டார். கிருத யுகத்தில் வைகாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி, அஸ்த நட்சத்திரத்தன்று வரதராஜ கோலம் உருவாக்கப்பட்டு ஸ்தாபிதம் செய்தனர்.
யாகத்தீயில் தோன்றியதால் சுவாமியின் திருமேனி தகித்தது. அதனை குளிர்விக்க பால், தயிர், நெய்யால் அபிஷேகம் செய்தனர். அப்போது தேவர்கள் பெருமிதப்படும் விதமாக அரிய பரிசுகளை அளித்தனர்.
விஸ்வகர்மா கஜேந்திரன் போல வெள்ளை யானை ஒன்றைத் தந்தான். இந்திரன் முத்துக்குடை தந்தான். பிரம்மனோ நவரத்தினம் பதித்த கிரீடம் கொடுத்தான். அஸ்வினி தேவர்கள் பொன்மாலை சாற்றினர். கந்தர்வர்கள் தங்கள் மகரயாழை தந்ததோடு கானம் இசைத்தனர். ஆதிசேஷன் ரத்தினமாலையை பரிசளித்தான். பிரம்மன் இறுதியாக மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்திற்கு மாணிக்கக் கல் சாற்றி வரங்கள் அளிக்கும் வரதராஜனாக வழங்கினான்.
மொத்தத்தில் வாணியின் கோபத்தால் அரிய திருத்தலம் உருவானது. பிரம்மனும் சிருஷ்டி தண்டம் பெற்று படைப்புத் தொழிலை உற்சாகமாகத் தொடங்கினான். சரஸ்வதியாகிய வாணிக்கும் உற்சாகம் ஏற்பட்டது. பிரிந்த இருவரையும் இணைக்க விரும்பி மகாவிஷ்ணுவை பிரார்த்தித்தான் வசிட்டன். மகாவிஷ்ணுவும் எழுந்தருளி. ”வாணி... உன் கோபம் தணிந்ததா?” எனக் கேட்டான். லட்சுமியும் அவளை அணைத்தபடி, ”வாணி! வற்றாத செல்வம் உன்னுடையது தான்! பிறகே என்னுடைய நிதிகள்” என்றாள்.
”போட்டி என வந்தால் செருக்கு, பொறாமை, ஆற்றாமை, ஆவேசம் என கீழ் உணர்வுகள் வந்து விடுகிறது. அதை அடக்கி பொறுமை காப்பதே பெருமை என்பதற்கு நடந்த சம்பவங்கள் உதாரணமாகி விட்டன” என்றாள்.
”அத்திகிரி வரதனை நினைக்கும் போது லட்சுமி, வாணி இருவரும் மானிடர்களால் சிந்திக்கப்படுவீர்கள். அதைப் போல பூவுலகில் தலையானது வேள்வி என்பதும் அப்போது சிந்திக்கப்படும்” என்றான் விஷ்ணு. மேலும், ”வாணி நீ இங்கு வேகவதி என்னும் பெயரில் மிருதுவாகப் பாய்ந்து கடலில் சங்கமிக்கும் உனக்கு பிரம்மனும் தன்னில் சரி பாதி என்னும் உரிமையை வழங்கி ஆசீர்வதிப்பான்” என்றான்.
வாணியும் வேகவதி நதியாகி அத்திகிரி எனப்படும் காஞ்சியில் பாய்ந்து கடலை அடைந்தாள். பிரம்மனும் அவளை ஆட்கொண்டான். இதனால் வேகவதி நீராடல் பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் என்னும் அருட்தன்மை கொண்டதாயிற்று. அதன் பின் கிருதயுகம் முடிந்து கலிபுருஷனின் ஆட்சி தொடங்கியது. போட்டி, பொறாமை, பேராசை, துர்புத்தி, காமாந்தகம், சூது, வாது இவையே அவனது மந்திரிகளின் அம்சங்கள். இவையும் தங்களின் வேலையைக் காட்ட ஆரம்பித்தன. |
|
|
|