|
பொதுவாக 14 ஆண்டுக்குப் பிறகும் ஒருவர் ஒரு சொத்தின் மீதான உரிமையை நிலைநாட்டவில்லை என்றால் சொத்து உரிமை மற்றவருக்கு போகும். இந்த வகையில் காட்டுக்குப் போன ராமனால் திரும்ப வர முடியாது என்றும், அதன் பின் அயோத்தி ஆட்சி நிரந்தரமாக பரதனின் கைக்கு வந்து விடும் என்றும் கூனியின் போதனையால் நம்பினாள் கைகேயி. அதனால் தான் அப்படி ஒரு நிபந்தனை விதித்தாள். ஆனால் ராமனோ 14 ஆண்டுகள் காத்திருக்காமல் அப்போதே தம்பி பரதனுக்கு அரசுரிமையை விட்டுக் கொடுக்க முன் வந்தான். முழு மனதோடு காட்டிற்குப் போன ராமன், பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்துக்குச் செல்ல விரும்பினான். ராஜகுரு வசிஷ்டர், விஸ்வாமித்திரருடன் பழகி இருந்ததால், அவர்கள் மூலமாக பரத்வாஜ ரிஷியைப் பற்றி அறிந்திருந்தான்.
அவரது ஆசிரமம் கங்கை நதிக்கரையில் உள்ள தண்டகாரண்யத்தில் இருந்தது. நதியைக் கடப்பதற்கு ஓடம் ஒரு வசதியான சாதனமாக இருந்தது. அவற்றை இயக்கும் ஓடக்காரர்களின் தலைவன் குகன். தன் பகுதிக்கு ராமன் வந்திருப்பதை அறிந்த குகன் ஓடி வந்தான். அவன் ஏற்கனவே ராமனைப் பற்றிக் கேள்விப்பட்டாலும், அவனை தரிசிப்பதே பாக்கியம் என ஏங்கியவர்களில் குகனும் ஒருவன். ”ஸ்ரீராமா... தங்களின் வருகையால் இப்பகுதி மகிமை பெற்றது. நாங்கள் நடந்ததைக் கேள்விப்பட்டோம். தாங்கள் காட்டிற்கு அனுப்பப்பட்டீர்கள் என்பதை விட, தந்தையின் பேச்சை மதிப்பவர் என்பதை அறிந்து மகிழ்கிறோம்” எனறான் குகன். ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல விரும்புவதைக் கண்டு, ”ஐயனே! தாங்கள் கடந்து செல்ல நானே ஓடம் செலுத்துகிறேன்” என வேண்டினான். ராமனும் அவனது அன்பு கண்டு மகிழ்ந்தான். அவன் அளித்த உணவு, பரிசுகளைக் கண்டு நெகிழ்ந்தான். உடனிருந்த சீதை, லட்சுமணனும் மகிழ்ந்தனர். ”அப்படியே ஆகட்டும்” என ராமன் அவனது தோள் தொட்டு சம்மதித்தான்.
உடனே குகன் ஆட்களை அனுப்பி ஓடத்தை அலங்கரிக்க ஆணையிட ஓடமும் அங்கு வந்தது. சிறிது ஓய்வுக்குப் பின்னர் மனைவி, தம்பியுடன் ஓடத்தில் ஏறப் போனான் ராமன். தடுத்த குகன் ”ஐயனே... என்னை மன்னியுங்கள். தாங்கள் படகில் காலடி வைக்கும் முன் பாதங்களைக் கழுவ வேண்டும்” என்றான். குகனின் பேச்சு புதிராக இருந்தது. சீதையும், லட்சுமணனும் குழப்பம் அடைந்தனர். ”என் ஐயனே, அயோத்தி நகரை விட்டு காட்டுக்குள் நுழைந்து வந்தீர்கள். அப்போது தங்களின் கால்தூசு பட்டு ஒரு கல் அகலிகையாக உருமாறியது எனக் கேள்விப்பட்டேன்” ”அதற்கென்ன? பாதங்களைக் கழுவுவதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டான் ராமன். சிரித்த குகன். ”ஐயனே... நதியில் செல்லும் போது பெரிய மீன்கள் குறுக்கிடலாம். அப்போது கற்களை வீசி விரட்டுவோம். இப்போது அந்தக் கற்களின் மீது தங்கள் பாதம் பட்டு அவை பெண்ணாகி விட்டால் என்ன செய்வேன்?” என அப்பாவியாகக் கேட்டான்.
அவனது அறியாமையை ராமன் ரசித்தபடி தட்டிக் கொடுத்தான். ’இத்தனை வெள்ளந்தியாக இருக்கிறானே இவன்! தன் வாழ்நாளில் ’ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்’ என இலக்கணம் பிறழாமல் வாழும் உத்தமரின் கால் தூசியால் அகலிகை விமோசனம் பெற்றாள் என்பதை உலகுக்கு உணர்த்திய சம்பவம் தானே இது!’ என சீதையும் தனக்குள் சிரித்தாள். இந்த வகையில் அவளுக்குப் பெருமையாக இருந்தது. தன் கணவரின் வாழ்க்கைப் பண்பாடு மற்றவருக்கு தெரிந்திருப்பதில் மனைவிக்கு பெருமை தானே! ஆனால் லட்சுமணனின் கண்ணோட்டம் வேறு விதமாக இருந்தது. குகனுக்குத் தெரியாதா, அது சாபவிமோசன சம்பவம் தான் என்று? அகலிகை தவிர, ராமன் காட்டுவழியே நடக்கும் போது எத்தனையோ கல் மீது பாதம் பட்டிருக்கலாம். அப்போது அவை பெண்ணாக மாறவில்லையே! அகலிகை பற்றிய உண்மையை குகன் உணராமலா இருப்பான்? அவன் ராமனின் பாதத்தை கழுவ விரும்பியது, அந்த அபிஷேக நீரைத் தலையில் தெளிக்கவும், தீர்த்தமாக பருகவும் தான் என லட்சுமணன் ஊகித்தான். ஓடத்தில் இருக்கும் கற்களைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை!
லட்சுமணன் ஊகித்தது சரி தான்... ராமனின் பாதங்களை கங்கை நீரால் கழுவிய தீர்த்தத்தை கண்களில் ஒற்றினான் குகன். தலை மீது தெளித்தான். சிறிது குடித்தான். பிறகு, ”வாருங்கள் ஸ்ரீராமா ஓடத்தில் ஏறுங்கள்,” எனக் கூறி, நீரில் ஓடம் ஆடாதபடி உறுதியாக பிடித்தான். ராமனைத் தொடர்ந்து சீதை, லட்சுமணனும் ஏறினர். துடுப்பைச் செலுத்திய குகன், கரை சேரும் வரை ராமனையே பார்த்தான். ராமன் அவ்வப்போது கனிவாகப் பார்த்த பார்வையில் மனம் உருகினான். அக்கரை வந்ததும் ஒரு கட்டையில் படகின் முனையைக் குகன் கட்ட, மூவரும் இறங்கினர். உதவி செய்த குகனுக்கு என்ன தருவது? யோசித்த ராமன் குகனை ஆரத்தழுவி ”இன்றோடு நாம் ஐவரானோம்” என சகோதரன் என்னும் தகுதி அளித்தான். ”உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்? கூலி ஏதாவது தர வேண்டாமா?” எனக் கேட்டான். பதறிய குகன், ”ஐயனே! நாம் இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள். எனக்கு கூலி எதற்கு?” எனக் கேட்டான். ’ஒரே தொழிலா?’ சீதையும், லட்சுமணனும் வியந்தனர். ”ஆம்...ஐயனே, நீங்கள் பிறவிக் கடலைக் கடக்க உதவுகிறீர்கள். நானோ இந்த கங்கை நதியைக் கடக்க உதவுகிறேன். இந்த வகையில் இருவருக்கும் தொழில் ஒன்று தானே? நமக்குள் எப்படி கூலி கொடுப்பது?” எனக் கேட்ட போது, நெகிழ்ச்சியால் ராமனுக்கு கண்ணீர் பெருகியது. சீதை, லட்சுமணனுக்கும் தான்! |
|
|
|