|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » யாவும் நான் தருவேன்! |
|
பக்தி கதைகள்
|
|
“இனிமே பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதாதீங்க. ஆமா சொல்லிட்டேன். நாம கேட்டதக் கொடுப்பாங்கறது எல்லாம் பொய். அவ எதையும் தர மாட்டா“ வார்த்தைகளின் கொடுமை தாங்காமல் காதைப் பொத்தினேன். என்றாலும் என் கண்கள் கலங்கின. நான் செய்த பாவத்தின் விளைவு என் தாயைப் பற்றி கொடிய சொற்களை காலை வேளையில் கேட்க வேண்டியிருக்கிறது. கண்ணீர்த் திரையின் ஊடே முன்னால் அமர்ந்து கத்தியவரைப் பார்த்தேன். அவருக்கு ஐம்பது வயதிருக்கும். தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார். ஒரு மகன். ஒரு மகள்.
“எங்க ஆபீஸ்ல மேனேஜர் வேலை காலியாச்சு. அதுக்கு என்னையும் சேத்து அஞ்சு பேருக்குள் போட்டி. எனக்கு அந்த வேலையக் கொடுன்னு மீனாட்சிகிட்டக் கெஞ்சினேன். பிச்சையெடுத்தேன். பத்து நாள் விரதமிருந்து கோயிலுக்கு நடந்து போனேன். என்ன பிரயோஜனம்? வேலை எனக்குக் கெடைக்கலையே!”
“அத விடுங்க. என் பையனுக்கு மெடிக்கல் சீட் கெடைக்கணும்னு கெஞ்சிக் கேட்டேன். ப்ளஸ் டூல நல்ல மார்க்கும் எடுத்தான். நீட் பரீட்சையில ரேங்க் சரியா கெடைக்கல. நாப்பது நாள் விரதம். எல்லாம் வீணாப்போச்சு. சீட் கிடைக்கல.”
“இது மாதிரி கேட்ட எதையும் கொடுக்கல. பணம், புகழ், சந்தோஷம் எதுமில்ல. அவள எதுக்கு கும்பிடணும் சொல்லுங்க? அவ மனசு கல்லு சார். நம்மளத் தவிக்க விட்டு வேடிக்கை பாக்கறது அவளுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு.” எழுந்து நின்று வணங்கினேன்.
“போதுமய்யா. போதும். இனி பச்சைப் புடவைக்காரியைப் பற்றித் தவறாகப் பேசினால்.. ஒன்று நான் செத்துடுவேன். இல்லை உங்களைக் கொன்னுடுவேன். போய் வாருங்கள். பிறகு பார்க்கலாம்.”
அலுவலகத்தில் வேலை மலை போல் இருந்தாலும் எதையும் செய்ய மனம் இல்லை. பக்கத்தில் உள்ள பூங்காவில் போய் அமர்ந்தேன். நண்பர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகியது.
அப்போது மாலை ஐந்து மணி என்பதால் அவ்வளவாகக் கூட்டமில்லை. கணவனும், மனைவியுமாக இருவர் என்னை நோக்கி வந்தனர். அருகில் வந்ததும் அந்தப் பெண் கணவரிடம் “நீங்கள் நடந்து விட்டு வாருங்கள். நான் இங்கு சிறிது நேரம் உட்கார போகிறேன்.” என்று சொல்லி என் அருகில் அமர்ந்தாள். அவள் நிறைவான அழகு. நன்றாக மஞ்சள் பூசிய முகம். வட்டமான குங்குமம். என்னை பார்த்து லேசாக சிரித்தாள்.
“நண்பன் சொன்னதை நினைத்து ஏன் மருகுகிறாய் என அறியவே வந்தேன்.”
“தாயே நீங்களா?”
விழுந்து வணங்கினேன்.
“என் மனதைக் கல் எனச் சொன்னவன் உண்மையில் சோம்பேறி. அலுவலகத்தில் பதவி உயர்வுக்குப் போட்டி போடுபவன் அதற்காகத் தன்னைத் தயார்படுத்த வேண்டாமா? மகன் மருத்துவம் படிக்க கோயிலுக்கு நடந்து வந்தால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சி வேண்டாமா? பணம் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். அறிவைக் கசக்கி வேலை செய்ய வேண்டும். புகழ் வேண்டுமென்றால் சாதிக்க வேண்டும். எதையும் செய்யாமல் என்னைப் பழிக்கிறானே!”
“அவர் செய்தது தவறு தான் தாயே! ஆனால் நீங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று.. ..”
“மனிதர்களாகிய நீங்கள் ஆசைப்பட்டதை அடையும் சக்தியை உங்களின் மனதில் புதைத்துக் கொடுத்திருக்கிறேன். அதை உள்ளே தேடாமல் வெளியே தேடினால்..”
“கொஞ்சம் மரமண்டைக்குப் புரியும்படி சொல்லுங்களேன்.”
“அங்கே நடக்கும் காட்சியைப் பார்.”
அது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனம். விற்பனைப் பிரிவில் ஒரு முக்கியமான பதவிக்கு நேர்காணல் நடந்தது. நூறு பேர் போட்டியிட்டனர். இறுதிச் சுற்றில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடைசி கட்டத் தேர்வு. இருவருக்கும் காலியாக இருந்த ஒரு மடிக் கணினிப் பை தரப்பட்டது.
“நீங்கள் மும்பைக்குச் சென்று சிறந்த மடிக்கணினி வாங்கிவரவேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கே பதவி. எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது.”
முதலாமவன் பதவியை அடையும் வெறியில் இருந்தான். விமான நிலையத்திற்கு ஓடினான். தன் காசில் பயணச்சீட்டு வாங்கி மும்பைக்குப் பறந்தான். சிறந்த மடிக்கணினி எங்கு வாங்குவது என விசாரித்துக் கொண்டு அங்கு ஓடினான். அதை வாங்கும் அளவிற்கு கையில் காசு இல்லை. கையில் இருந்த கிரெடிட் கார்டை நீட்டினான். ஆனால் அது காலாவதியாகி இருந்தது. முந்தைய நாள் தான் புதிய கிரெடிட் கார்ட் வந்திருந்தது. அதை எடுத்து வராதது எவ்வளவு முட்டாள்த்தனம் என மனம் நொந்தான். ஓட்டலில் தங்கவும் காசில்லை. மும்பையில் இருந்த நண்பர்களின் தயவால் பஸ் மூலம் வந்து சேர்ந்தான்.
“எனக்கு வேலை வேண்டாம்.” எனக் கத்தி விட்டுக் கையில் இருந்த பையை வீசி விட்டு வீடு திரும்பினான்.
இரண்டாமவன் நிதானமாக செயல்பட்டான். பையில் ஏதாவது விஷயம் இருக்கும் என யோசித்தான். அதன் உள் பையில் ஒரு காகிதம் இருந்தது. அந்த நிறுவனம் ஒரு பயண முகவருக்கு எழுதிய கடிதம் அது.
“இந்தக் கடிதத்தை தருபவருக்கு மும்பை சென்று திரும்ப விமான டிக்கெட்டும், ஓட்டலில் தங்கும் வசதியும் செய்து தரவும். அதற்கான செலவை நாங்கள் ஏற்கிறோம்.”
அந்த முகவரைத் தேடிப் போனான். அவரும் வேண்டியதைச் செய்தார். மும்பை விமான நிலையத்தில் அவனுக்காகக் காத்திருந்த காரில் தங்க வேண்டிய ஓட்டலுக்குச் சென்றான். அங்கு ஒரு கவர் அவனுக்கு அளிக்கப்பட்டது. ஒதுக்கிய அறையைத் திறந்த போது அங்கு நான்கு கடைகளின் முகவரிகளும், ஒரு கடிதமும் இருந்தன. அதில் ‘இந்தக் கடைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விரும்பிய மடிக்கணினி வாங்கலாம். அதற்குப் பணம் தரத் தேவையில்லை. இக்கடிதம் கொடுத்தால் போதும். நாங்கள் பணம் கொடுத்துக் கொள்கிறோம் என்றிருந்தது.
சிறந்த மடிக்கணினியை தேர்வு செய்து கொண்டு விமானம் மூலம் திரும்பினான். அவனுக்கே வேலை கிடைத்தது எனச் சொல்லவும் வேண்டுமா?
“அந்த நிறுவனம் செய்ததையே நானும் செய்கிறேன். அவர்கள் கையில் பை கொடுத்தனர். வேலையைச் செய்வதற்குத் தேவையான குறிப்பு எல்லாம் அதில் இருந்தது. நான் உங்களுக்கு அறிவு, ஆற்றலை அளித்திருக்கிறேன். உழைப்பு, முயற்சியை கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்ததை வைத்துக் கொண்டு விரும்பியதை பெறலாம். பையைத் திறக்காமல் பச்சைப்புடவைக்காரியைக் குறை சொல்வதில் என்ன பயன்? இதை நண்பனிடம் சொல்.”எனக்குப் பேச்சு வரவில்லை.
“சரியப்பா உனது பையில் என்ன சேர்க்க வேண்டும் சொல். இப்போதே செய்கிறேன்.” “நண்பனைப் போல பதவி உயர்வு, பணம், புகழ், மெடிக்கல் சீட் எதுவும் வேண்டாம், காலகாலத்திற்கும் கையில் கிளி தாங்கிய கோலக்கிளிக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டும். அதற்கு வேண்டியதை பையில் போடுங்கள்..” கலகலவென சிரித்தபடி மறைந்தாள் உமையவள். |
|
|
|
|