|
தண்டகாரண்யத்தில் ராமனுக்கு அற்புத அனுபவம் ஏற்பட்டது. ராவண வதத்திற்கான ஒத்திகை என்று கூட சொல்லலாம். ராவணன் சீதையைக் கடத்தப் போகிறான் அல்லவா, அதே போல இங்கும் அசுரன் ஒருவன் சீதையைக் கடத்தியது தான் அந்த ஒத்திகை. இந்த அசுரன் பெயர் விராதன். அசுரன் என்றாலே பலசாலி என்ற தலைக்கனம் வந்து விடும்! அசாத்திய உடல் வலிமையுடன், வரங்களும் துணையிருக்க, தன்னை எதிர்க்க உலகில் யாருமில்லை என்ற இறுமாப்பு கொண்டவர்கள் அசுரர்கள். ராம, லட்சுமணர் இருவரும் விஸ்வாமித்திரர் ஆசிரமத்துக்கு சென்ற போது எதிர்ப்பட்ட அரக்கர்களை விடவும், விராதன் மூர்க்க குணம் கொண்டவனாகத் தெரிந்தான். அவனைக் கண்டதும் சீதை பயந்து ராமனின் பின் ஒளிந்தாள். காட்டில் அரக்கர்கள் அட்டகாசம் செய்வதை அறிந்தாலும், தங்களைத் தாக்குவார்கள் என சீதை எதிர்பார்க்கவில்லை.
விராதனும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த துணிந்தான். கண் இமைக்கும் நேரத்தில் சீதையை தூக்கிக் கொண்டு பறந்தான். உடனே ராம, லட்சுமணர் தொடர்ந்தனர். “அரக்கனே! உன்னை நான் அனுமதிக்க மாட்டேன்“ என கத்தினான் ராமன். விராதன் அலட்சியத்துடன், “என்னை பின்தொடர்ந்தால் உங்கள் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. இவளை என்வசம் ஒப்படைத்தால் ஏதும் செய்ய மாட்டேன்“ என்றான். கண் எதிரில் சீதை சிறை பிடிக்கப்பட்டதைக் கண்ட லட்சுமணன், “அண்ணா... உத்தரவிடுங்கள், இவனைக் கூறு போட்டு அண்ணியாரை மீட்கிறேன்“ என்றான். தன் வாழ்வின் முடிவுக்கான சூழ்நிலையை உருவாக்கிய அசுரனுக்காக வருந்தினான் ராமன். அவனது பிடியில் சிக்கிய மனைவியை விடுவிக்கவில்லை. வளைத்து அம்பு தொடுக்க, அந்த சப்தம் எங்கும் எதிரொலித்தது. பூமியில் அபாயம் நிகழப் போகிறது என தேவர்கள் கலக்கம் அடைந்தனர்.
ராமனின் அம்புகள் விராதனின் உடலைத் தைத்தன. கைகள், கால்களை அசுரன் உதற, வாடிய இலைகள் மரத்தில் இருந்து உதிர்வது போல அம்புகள் விழுந்தன. சீதை அவனது பிடியில் இருந்து விடுபட்டாள். லட்சுமணனுக்கு மட்டுமன்றி, ராமனுக்கும் திகைப்பு. இவன் ஏன் இன்னும் சாகவில்லை! தாக்குதலை சமாளித்து, உயிரைக் காப்பாற்றும் சூட்சுமம் இவனுக்கு இருக்கிறது. துண்டு துண்டாக வெட்டி தான் இவனைக் கொல்ல வேண்டும் என தீர்மானித்தனர். அதன்படி மலை போல் உயர்ந்த அவனது தோள் மீது ராம, லட்சுமணர் அமர்ந்தனர். விராதன் ஓட ஆரம்பித்தான். கீழே விழுந்த சீதை, “என்னை எடுத்துக் கொண்டு அவர்களை விட்டு விடு“ என கதறினாள். சீதையின் அலறல் கேட்ட ராமன் அவனது கைகளைத் துண்டித்தார். . “ஆயுதத்தால் தாக்கினாலும் என் உயிர் போகாது. அப்படி ஒரு வரத்தை நான் பெற்றிருக்கிறேன்!“ என்றான் அசுரன். கைகளை இழந்து தடுமாறும் அவனை கூறு போட்டால் உயிர் விடுவான் என கருதினான் ராமன். அதன்படி இருவரும் வெட்டினர். அவனை ராமன் தன் காலால் உதைத்துத் தள்ள, ஒரு இளைஞனாக மாறினான். “பெருமானே! நான் ஒரு கந்தர்வன். என் பெயர் தும்புரு. ஒருநாள் தேவலோகத்தில் ரம்பையுடன் பொழுது போக்காக பேசிய போது, அங்கு வந்த குபேரனை பார்க்கவில்லை. இதை அவமானமாக கருதிய அவர் அரக்கனாக மாறும்படி சபித்தார். ஸ்ரீராமரால் நற்கதி பெறுவாய் என சாப விமோசனம் அளித்தார். அதன்படி நற்கதி அடைந்தேன். என் பாவத்தை போக்கி மன்னிக்க வேண்டுகிறேன்“ என்றான்.
ராமனும் ஆசிர்வதித்தான். அண்ணனின் பாதம் பட்டு கல், பெண்ணாக மாறிய நிகழ்வு நினைவுக்கு வந்தது. ‘ராமனின் பாதத்திற்கு தான் எத்தனை மகிமை!“ என மகிழ்ந்தான் லட்சுமணன். உண்மை தான். சீதையைத் தவிர வேறு பெண்ணை நினைக்க மாட்டேன் என அகலிகை சாப விமோசனத்தில் நிலைநாட்டினான் ராமன். ஆமாம், அவன் கால் படவில்லை. கால்தூசு மட்டும் பட்ட போது கல், அகலிகையாக மாறியது! என்ன நுட்பம் இது! மனதாலும் பெண்ணைத் தீண்டாதவன் என்பதால் தான் கால் தூசியால் தீண்டினானோ! விராதன் ஒரு ஆண் என்பதால் தான் சாப விமோசனம் அளிக்க காலால் உதைத்தான் ராமன்! ராமனின் பாதத்தால் பாவம், சாபம் எல்லாம் போகும் என்பதே நீதி!
|
|
|
|