|
ராதை என்ற பெண் பாண்டுரங்கனின் மீது பக்தி கொண்டிருந்தாள். அவளது கணவன் கண்ணன் ஒரு விவசாயி. அவன் வயலில் இருந்து வீடு திரும்பும் நேரத்தில் மனைவி கோயிலுக்கு போயிருப்பாள். ’கணவன் சோர்ந்து வரும் நேரத்தில் வீட்டில் இருந்து உதவாமல் இப்படி போய் செய்கிறாளே’ என மனம் சலிப்பான். ஆனால் கண்டித்தால் சண்டை வரும். கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போவாள். அதன் பின் கஞ்சிக்கும் ஆபத்து வரும்.
பசியோடு வரும் கணவன் குளித்து விட்டு, தானாக சோற்றை உண்பான். ஒரு கட்டத்தில் கடவுள் மீதே கோபம் வந்தது. வயலுக்கு போகும் வழியில் கோயில் முன் மாட்டு வண்டியை நிறுத்தினான். அங்கே மனைவி ரகுமாயியுடன் பாண்டுரங்கன் சிலைவடிவில் இருந்தார்.
“அடேயப்பா! நீ மட்டும் உன் மனைவியைப் பிரியாமல் சந்தோஷமா இருக்கியே! என் மனைவி மட்டும் என்னை கண்டு கொள்ளாமல் இருக்கிறாளே! நியாயமா! ரகுமாயி தாயே! உன்னை கருணை மிக்கவள் என்கிறார்களே! நீயாச்சும் பாண்டு ரங்கனிடம் சொல்லக் கூடாதா” என அழுதான்.
அதன் பின் மனதிற்குள், “நான் ஒரு பைத்தியக்காரன்! வெறும் சிலையிடம் பேசி என்னாகப் போகிறது” என சொல்லி விட்டு வயலுக்குப் புறப்பட்டான். ரகுமாயி, “சுவாமி! அந்த விவசாயி சொல்வது நியாயம் தானே! வயலில் வேலை முடித்து வரும் போது, வீட்டில் மனைவி இல்லாவிட்டால் அவன் என்ன செய்வான் பாவம்!” என்றாள்.
சிரித்த பாண்டுரங்கன், “நடப்பதை மட்டும் கவனி” என்றார். மறுநாள் ராதை கோயிலுக்கு கிளம்பினாள். சூறைக் காற்றுடன் மழை வந்தது. மரக்கிளை ஒன்று ஒடிந்து ராதையின் மீது விழவே ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
அப்போது மாட்டு வண்டியுடன் திரும்பிக் கொண்டிருந்த கண்ணன், மனைவியை கண்டு வைத்தியரிடம் ஓடினான்.
எலும்பு முறிந்ததால் மாவுக்கட்டு போட நேர்ந்தது. இரண்டு வாரம் வீட்டிலேயே இருந்து மனைவியை கவனித்தான். அப்போது மனதிற்குள், “இவர் தினமும் வேலை முடித்து வரும் போது,
ஒருநாள் கூட நான் வீட்டில் இருந்த தில்லையே. இவரோ, எனக்காக வீட்டில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்கிறாரே! இதுநாள் வரையில் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்!” என வருந்தினாள் ராதை. பாண்டு ரங்கனும், ரகுமாயியும் அவர்களுக்கு ஆசியளித்தனர். |
|
|
|