|
பீஷ்மரிடம், ""எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார் தருமர்.
பீஷ்மர் சொன்னார்: ""காசி மன்னரது நாட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த வேடன் ஒருவன், கடுமையான விஷம் தோய்ந்த அம்பை எடுத்துக்கொண்டு காட்டில் மான் வேட்டைக்குப் போனான். ஓரிடத்தில் ஏராளமான மான்களைக் கண்டு, துரத்திச் சென்று அம்பைத் தொடுத்தான். அம்பு குறி தவறி பெரிய மரம் ஒன்றில் குத்தி நின்றது. ஒரு சில விநாடிகளில் அம்பிலிருந்த கடுமையான விஷம் மரம் முழுவதும் பரவியது. மரத்தில் இருந்த காய்களும் இலைகளும் கனிகளும் உதிர்ந்து கீழே விழுந்தன, மரம் காய்ந்துபோனது.
அந்த மரத்தின் பொந்தில் நீண்ட காலமாக வசித்து வந்த கிளி ஒன்று, மரத்தின் மீதுள்ள பற்றினால், அங்கிருந்து வெளியேறவில்லை. தர்மத்தில் பற்றுள்ள அந்தக் கிளி, வெளி யே போய் இரை தேடவில்லை, பட்டுப்போன அந்த மரத்துடன் சேர்ந்து தானும் காய்ந் தது. அதைக் கண்ட தேவேந்திரன் வியப்பு அடைந்தான்.
உடனே தேவேந்திரன் ஒரு மானிட வடிவம் எடுத்து, கிளியை நெருங்கிக் கேட்டான். ""கிளியே! உனது நற்குணத்தைப் போற்றுகிறேன். பட்டுப்போன இந்த மரத்திலேயே நீ ஏன் இன்னும் தங்கி இருக்கிறாய்? வேறு ஏதாவது காய்கனிகளுடன் கூடிய மரமாகப் பார்த்துப் போகக் கூடாதா?
அவனை நமஸ்கரித்த கிளி, ""தேவர்களின் தலைவனே! நீ தேவேந்திரன் என்பதை என் தவத்தின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்!” என்றது.
""கிளியே! இந்தக் காட்டில் பச்சைப் பசேலென்று எவ்வளவோ மரங்கள் இருக்கின்றனவே! காய்ந்து கிடக்கும் இந்த மரத்தை ஏன் காவல் காக்கிறாய்? பட்டுப்போன இந்த மரத்தை விட்டுவிடு!” என்றான்.
கிளிபெருமூச்சுவிட்டுத் துயரத்துடன் பேசத் தொடங்கியது: ""தேவேந்திரா! அநேக நற்குணங்கள் பொருந்திய இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன். இந்த மரம்தான் இதுவரை என்னைக் கட்டிக் காத்தது. பகைவர்களிடமிருந்து என்னைக் காத்ததும் இதே மரம்தான். இப்படி நெடுங்காலமாக என்னைக் காக்கும் இந்த மரத்தை, விட்டுவிடும்படி நீ சொல்லலாமா? நல்ல நிலையில் இருந்தபோது இங்கிருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டு, நிலைமை மாறி, கெட்ட நிலை வந்தவுடன் இந்த இடத்தைவிட்டுப் போவது எந்த விதத்தில் நியாயம்? தர்ம விஷயங்களில் எல்லா தேவர்களும் உன்னிடம் வந்து தெளிவு பெறுகிறார்கள். அப்படிப்பட்ட என்னை நன்றி மறக்கச் சொல்லலாமா?” என்றது.
தேவேந்திரன் உள்ளம் விம்மினான். ""கிளியே! நன்றி மறவாத உனது செய்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சரி.... உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்!” என்றாள்.
""இந்த மரம் பழையபடி தழைத்துக் குலுங்க வேண்டும்!” என்று கேட்டது கிளி.
தேவேந்திரன் உடனே அந்த மரத்தின் மீது அமிர்தத்தைப் பொழிந்தான். கண்மூடித் திற ப்பதற்குள் பழையபடி தழையும், பூவும், கனிகளுமாக மரம் செழித்து விளங்கியது. அங்கேயே தொடர்ந்து வசித்த கிளி, தனது ஆயுட்காலம் முடிந்ததும், இந்திரலோகத்தைஅடைந்தது.
|
|
|
|