|
திருக்கோட்டியூர்!
இதன் ஒருபுறம் சேது நாடு, இன்னொரு புறம் பாண்டிய நாடு...ஊடாக செட்டி நாடு...இன்றிருப்பது போன்ற இந்த பிரிவு நிலை ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் இருக்கவில்லை. பாண்டியர்களாலும், சிலகாலம் பாண்டியர்களை அடக்கி ஆண்ட சோழர்களாலும் ஆளப்பட்ட பகுதியாக இருந்தது.
இதன் புராண வரலாறு ஆச்சரியம் தருவதாகும். ஒருவகையில் காஞ்சியின் அத்திகிரி கோயிலுக்கு மிக இணையானது. அத்திகிரியின் முதல் மூர்த்தம் நரசிம்மம்! அந்த கோலத்தை ஹிரண்யனை அழிக்கச் செல்லும் முன் தேவர்களுக்கு இங்கே தான் மகாவிஷ்ணு காட்டினார்!
ஹிரண்ய சம்ஹாரத்திற்கு எது தான் வழி? என மும்மூர்த்திகளும், தேவர்களும் கூடி வழி கண்ட இடம்! ஹிரண்யனாலேயே நெருங்க முடியாத இடமாகவும் இது இருந்தது! காரணம் கதம்ப மகரிஷி! கதம்பர் வைகுண்ட பதவிக்காக தவத்தில் மூழ்க விரும்பினார். ஹிரண்யனுக்கு இது தெரிந்தால் தவம் புரிய விடமாட்டான். எனவே, அவன் நெருங்க முடியாத பகுதியாக தன் தவசக்தியால் இப்பகுதியை மாற்றவே, தேவர்களும் இங்கு ஒன்று சேர வசதியானது.
அதனாலேயே மூவர், தேவர் என சகலரும் ஒன்று கூடும் விசேஷம் இங்கு நிகழ்ந்தது. ஹிரண்யனை அழிப்பேன்; கவலை வேண்டாம் என மகாவிஷ்ணு வரம் அளித்து வதமும் செய்தார்.
வதங்களில் ஹிரண்ய வதம் இங்கு சிந்திக்கதக்கது. தேவ சக்தி, அசுர சக்தி என இரண்டுக்குமான தன்மையை ஹிரண்ய வதம் மூலம் துல்லியமாக அறியலாம். இதில் தேவசக்தியின் விஸ்வரூப உருவமே நரசிம்மம்.அதன் முதல் வெளிப்பாடு அத்திகிரியில் என்றால், அதன் திருக்காட்சி திருக்கோட்டியூரில் தான் நிகழ்ந்தது. இதன் எதிரொலியாக எட்டுத்திக்கும் இத்தலப் பெருமை விளங்க வேண்டும் எனக் கருதி, எட்டு அங்கம் கொண்ட அஷ்டாட்சர விமானம் மயன் மற்றும் விஸ்வகர்மாவால் நிறுவப்பட்டது. இந்த எட்டு அங்கத்திலும் எம்பெருமானின் அஷ்டாட்சர சாரமும் கோபுர வடிவில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் கீழே எம்பெருமானும் நின்ற அமர்ந்த கிடந்த நடந்த கோலங்களைக் காட்டி எழுந்தருளினார்.
ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குள் தானும் அடக்கம் என்பதை உணர்த்துவது போல சுயம்புவாக ஒரு லிங்கமும் தோன்றியது.
ஞானகாரகனான கேதுவும், யோககாரகன் ராகுவும் இங்கே நரசிம்ம கோலம் அருகில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மொத்தத்தில் இக்கோயில் பல சான்னித்யங்களின் கலவை. அதனாலேயே இங்கு விளக்கேற்றி மன இருள் அகற்றி இகபர வாழ்வுக்கென கேட்பதை ஸ்ரீமன் நாராயணன் அளிக்கிறான்.
இதை எல்லாம் நன்கறிந்த ராமானுஜர் திருக்கோட்டியூருக்கு சீடர்களுடன் வந்தார். விசேஷமான மண்...காஞ்சிக்கு இணையான மண்... தேவ சான்னித்யம் மிகுந்த மண்... அஷ்டாட்சர ஒளி திகழும் மண்.... எனவே திருக்கோட்டியூர் எல்லை தொட்டதும் விழுந்து வணங்கினார். ஒரு சிட்டிகை மண் எடுத்து தலை மீது இட்டுக் கொண்டார். அப்படியே சன்னதிக்கு சென்று சவுமிய நாராயணனாக காட்சி தரும் பெருமாளை ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் வணங்கி மகிழ்ந்தார். இறையருளுக்கு பாத்திரமாயிற்று. இனி அஷ்டாட்சர மந்திர உபதேசமும், ரகஸ்யாத்ர விளக்கமும் தான் மீதம்! அதற்காக பூ, பழங்களுடன் ஆச்சார்ய நம்பியின் இல்லம் சென்றார். அவர் நித்ய வழிபாட்டில் இருந்தார். பாசுரங்கள் பாடுவது காதில் விழுந்தன. மணி சப்தம் முதல் சுகந்த வாசம் வரை எல்லாம் புதிய உலகிற்கு வந்தது போன்ற உணர்வை ராமானுஜருக்கு ஏற்படுத்தின. உடனிருந்த கூரேசர், அமுதனார், முதலியாண்டான் ஆகியோரும் மகிழ்ந்தனர். தங்களுக்கும் உபதேசம் கிடைக்கப் போகிறது. குருவுக்கேற்ற உற்ற சீடர்களாக திகழப் போகிறோம் என எண்ணினர்.
நெடுநேரம் கழிந்தது. ஆச்சார்ய நம்பி அவர்களை அழைத்தார். யார் வந்திருப்பது? எனக் கேட்டார். அவரது திருமுன் பூக்கள், பழங்களை வைத்தபடி, மந்திர உபதேசம் பெற நான் ராமானுஜன் திருக்கச்சியில் இருந்து வந்திருக்கிறேன் என்றார்.
ஆச்சார்ய நம்பியிடம் அந்தக் குரலைக் கேட்டதும் கேள்விப்பட்ட பெயராக உள்ளதே எனத் தோன்றியது. சற்று மவுனம் காத்த நம்பி, அப்படியாயின் அப்புறம் பார்க்கலாம். இப்போது அதற்கான காலமில்லை” என்றார். ராமானுஜர் முகத்தில் லேசான அதிர்ச்சி.
உனக்குத் தான் சொன்னேன் – அப்புறம் பார்க்கலாம் புறப்படு” என அதிர்ந்தார் நம்பி. சீடர்களும் அவரை எதிரொலித்தனர்.
சோகமாக ராமானுஜரும் புறப்பட்டார்.
என்ன இப்படி சொல்லி விட்டார்?” என ஆரம்பித்தார் முதலியாண்டான். ஏதாவது காரணமிருக்கும். ஆச்சார்ய புருஷர்கள் காரணமின்றி சொல்ல மாட்டார்கள். இனி இது குறித்து பேச வேண்டாம்” என ராமானுஜர் வாய்ப்பூட்டு போட்டார்.
அதன் பின் காஞ்சி சென்று சேர்ந்திட ஆறு நாள் ஆனது. வழியில் திருக்கோயிலுார் உள்ளிட்ட திவ்ய தேசங்களை சேவித்தனர்.
அதன்பின் ஒரு நல்லநாளில் காஞ்சி வரதனை வணங்கி விட்டு ராமானுஜர் முன்போல மீண்டும் புறப்பட்டார். ஆச்சார்ய நம்பி தரிசனமும் ஆனது. அதே பதிலைத் தான் அப்போதும் கூறினார். சிலநாட்கள் கழித்து சந்திப்போம் என திருக்கோட்டியூரிலேயே தங்கினார். ஒருநாள் குளத்தில் நீராடி அஷ்டாங்க விமான தரிசனத்துடன் எம்பெருமானின் திருக்கோலங்களை எல்லாம் தரிசித்து முடித்து சென்றார். இப்போதும் அதே பதில் தான்!
யார் வந்திருப்பது?”
நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்”
அப்படியாயின் அப்புறம் பார்க்கலாம்”
அப்புறம் என்றால் எப்போது? ராமானுஜர் வருந்தினாலும் காரணமில்லாமல் காரியமில்லை என்பதிலும், இந்த தேவபூமியில் எனக்கும் என்மூலம் உலகுக்கும் எதையோ உணர்த்த எம்பெருமான் விரும்புகிறான் என்பதில் உறுதியாக இருந்தார். ஆச்சார்ய நம்பிக்கு உங்கள் மீது பொறாமையோ என்னவோ? தங்களை அறிந்த அளவுக்கு மக்கள் அவரை அறியவில்லையே அது கூட காரணமாக இருக்கலாம்” என்றனர். இதைக் கேட்ட ராமானுஜர் மிக வருந்தினார்.
இதற்காகவாவது மந்திர உபதேசம் நடந்து விடக் கூடாதா? என ஏங்கினார். 17 வது முறையாக அவர் சென்ற போது நம்பியின் பதிலில் சிறு மாற்றம். அப்புறம் பார்க்கலாம்; இது காலமில்லை எனச் சொல்லாமல் நான் செத்தபிறகு வா எனக் கூறினார்.
|
|
|
|